மந்திரம் – லட்சியமும் லட்சணமும்

இன்று மாலை என்னைப் பார்க்க வசு வந்திருந்தாள். வசுவின் குடும்பத்தில் அத்தனை பேரும் கன்னடத்து வீர சைவர்கள். வீர சைவத்தின் மீதும் அது வளர்த்த கன்னட இலக்கியத்தின் மீதும் எனக்கு மிகுந்த பிரமிப்பு உண்டு. அதை மற்றொரு பதிவில் விவரிப்பேன்.

வசு நன்றாகப் பாடுவாள். நானும் அவளும் சில சந்தர்ப்பங்களில் சேர்ந்து பாடியிருக்கிறோம். கஸலில் அவளை ஜெயிக்க ஆள் கிடையாது. அப்போதுதான் சந்தியா வந்தனம் முடித்து வந்திருந்தேன். பேச்சு இசையிலிருந்து மந்திர சாஸ்திரத்துக்குத் தாவியது.

மந்திரம் பல நேரங்களில் பலன் தருவதில்லையே என்று வசு சொன்னாள்.

எனக்கு மந்திரங்களோடு ஒன்பது வயதிலிருந்தே பரிச்சயம் உண்டு. அப்பா முதலில் சொல்லித் தந்தார். பின்பு, மற்றவர்கள். நேரடி அனுபவம் இல்லாமல் போனாலும் எதற்கும் ஒரு கருத்து என்னிடம் உண்டு என்பதால் பேச்சு மிக சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது.

முதலில் மந்திரங்களை இத்தனை முறை உருப்போட்டால் பலன் தரும் அலாவுதீனின் விளக்குகளாய் சித்தரித்தது அயோக்கியத் தனம் என்றேன் நான்.

மந்திரங்கள் எனக்குத் தெரிந்தவரை மனப்பயிற்சியின் ஒரு வகையே.

நாம் ஒரு குறிக்கோளை வைத்திருக்கிறோம். அதை அடைந்துவிட மனம் தவியாய் தவிக்கிறது. இப்படி பதற்றப்பட்டு அலையும் மனதால் உருப்படியான எதையும் சாதிக்க முடியாது. அது சதா குரங்காட்டம் துள்ளிக் கொண்டுதான் இருக்கும்.

அதை அடக்கி அதன் ஆற்றலை லட்சியத்தை நோக்கித் திருப்பிவிடத்தான் மந்திரங்கள்.

ஆகையால், முதலில் தேவை தெளிவான லட்சியம். மேற்கத்திய தன்முனைப்பு எழுத்தாளர்கள்கூட லட்சியம் எவ்வளவுக்கு எவ்வளவு தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

அடுத்தது அந்த இலட்சியத்தை நோக்கி அசறாமல் முன்னேறும் மனம். அதற்கு துணையாக மந்திரம்.

முதலில் மந்திரத்துக்குத் தேவதை உண்டு. இதற்கும் லட்சியத்துக்கும் என்ன தொடர்பு என்று நாம் யோசிக்கலாம். தேவதைகள் என்பவை வரம் தரும் பூதங்களல்ல. அவை நம் லட்சியங்களின் உருவம். வீரமாக இருக்க நினைப்பவன் வீரமான உருவத்தையும், அழகாக இருக்க நினைக்கும் ஒருவன் அழகான உருவத்தையும் தியானிக்க அவன் அதுவாகவே ஆகிறான். வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு. ஆகையால் நம் லட்சியத்துக்கு ஏதுவான ஒரு உருவத்தைத் தேர்ந்தெடுத்து அதை எப்போதும் தியானிக்க நாம் அதுவாகவே ஆகிவிடுகிறோம் என்கிறது மந்திர சாஸ்திரம்.

இதனால்தான் எல்லா மந்திரத்துக்கும் உரிய தேவதைக்குத் தியான ஸ்லோகம் கொடுத்துள்ளார்கள். தியான ஸ்லோகம் என்பது தேவதையைப் பற்றிய வருணனை. நம் லட்சியத்துக்கு உதவியான தேவதையை நம் மனதுக்குள் நிறுத்த உதவுவது. மந்திரம் சொல்வதற்கு முன்னால் தியான ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்பது விதி இதற்காகவே உருவாக்கப்பட்டது. தியானமில்லாமல் சொல்லும் மந்திரம் வெறும் சத்த கோலாகலம்தான். யாருக்கும் பயன் தராது.

அடுத்தது மந்திரம். மந்திரம் என்பது பல்வேறு வகைகளில் நம் உள்ளத்துக்குள் நம் லட்சியத்தை ஊன்ற பயன்படும் சொற்றொடர். இந்த சொற்றொடரின் அடிப்படை காரணம் ஒலிச் சேர்க்கைகளுக்கு மனிதனைச் செயலுக்கு உத்வேகப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பதுதான். ஒன்று கவனித்திருப்பீர்கள். நோய்வாய்ப்பட்டோ சோம்பல் மிகுதியாலோ வேலைக்கோ பள்ளிக்கோ போகாத நாட்களில் காலையில் எழுந்தவுடன் நமக்கு நாமே “இன்னைக்கு முடியாது. உடம்பு படுத்துது” என்று சில முறையாவது தடவையாவது சொல்லியிருப்போம்.
மிகவும் எதிர்ப்பார்க்கும் சம்பவங்கள் நாட்களில் எழுந்தவுடன் நம்முடம் நாமே நடத்தும் உரையாடல் வேறு வகையாக இருக்கும்.நம்மிடம் நாமே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளின் பொருளையும் தோரணையையும் பொறுத்து நம் உடலும் மனமும் நாம் செய்ய வேண்டிய செயல்களுக்குத் தயாராகிவிடும்.

மந்திரம் என்ற சொற்றொடரின் வேலையும் இதுதான். நாம் கொண்டுள்ள லட்சியத்தைப் பொறுத்து நாம் தேர்ந்தெடுக்கும் மந்திரத்தின் பொருளும், ஒலிநயமும், எழுத்துக்களின் ஓசையும் இயைந்துவரும். இதைப் பொருளை விடவும் முக்கியமானது சொற்றொடரின் ஓசைநயமும் உச்சரிப்பும். மனித இனம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பயன்படுத்தும் ஹுரேய், யாஹூ போன்ற பதங்களுக்குத் தெளிவான அர்த்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவை தரும்.உற்சாகம் குறைந்துவிடுவதில்லை. அது போல மந்திரங்களிலும் க்லீம் ஐம் போன்ற பிஜாக்ஷரங்கள் உள்ளன.

ஒவ்வொரு மந்திரத்தின் இசைபோன்ற
 ஓசைநயத்துக்கும் வடமொழியில் சந்தஸ் என்று பெயர்.

உச்சரிப்பும் ஓசை நயமும் முக்கியமானவை என்பதால்தான் மந்திரங்களைச் சரியானவரிடம் நேரடியாகக் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் புத்தகத்தில் பார்த்துக் கற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் தியானம் உச்சரிப்பு என்பவற்றைத் தாண்டியும் மந்திரம் வெற்றி பெற சரியான உபாசனை அவசியம். உபாசனை என்பது மந்திரத்துக்கு உரிய தெய்வத்துக்குப் பூ போட்டு நாள் தவறாமல் பூஜை செய்வது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் உபாசனை அதுவல்ல.

ஒரு குறிப்பிட்ட மந்திரத்துக்குத் தியான ஸ்லோகமும், ஓசை நயமும், உச்சரிப்பும் இருப்பது போலவே, அந்த மந்திரத்திற்கு உரிய தேவதைக்குப் பிடித்த பிடிக்காத நிறம், உடை, பூ, உணவு என்றெல்லாம் சொல்லப் பட்டிருக்கும். இது தேவதைக்கு என்று சொல்லப்பட்டாலும் இதனால் பயனடைவது தேவதையல்ல.

தேவதைக்குப் பிடித்ததை ஏற்று பிடிக்காததை விலக்குவதுதான் உபாசனை.

ஒரு குறிப்பிட்ட உபாசனை செய்து அதற்குரிய லட்சணங்களை நாம் மேற்கொள்ளும் போது அந்த தேவதைக்கும் அது உருவப்படுத்தும் லட்சியத்துக்கும் ஏற்ற லட்சணத்தை நாம் உருவாக்கிக் கொள்கிறோம். இந்த லட்சணம் நம்மை இன்னும் விரைவாகவும் திடமாகவும் நம் லட்சியத்தை நோக்கி நகர வைக்கிறது. இதே காரணத்துக்காகத்தான் போர் வீரர்களுக்கு ஒரு வகை உடையும் உணவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆன்மீகவாதியின் உடையிலிருந்தும் உணவிலிருந்தும் வேறுபடும்.

போர் வீரன் நடத்த வேண்டிய யுத்தத்துக்குப் பாலும் வாழைப்பழமும் பயன்படாது.

காட்டில் தவமிருக்கும் சித்தனுக்கு தலைக்கவசமும் துப்பாக்கியும் தேவையில்லை.

- சித்துராஜ் பொன்ராஜ்

Comments

  1. காயத்ரி, உஶ்ணிக், அனுஶ்டுப், ப்ருஹதி, பங்குத், த்ருஶ்டுப் ஜகத்ய ச்சந்தாம்ஸி....

    ஆம்வே போன்ற எம்.எல்.எம்-கள் தங்கள் முகவர்களை, தங்களின் விற்பனை இலக்குகளை எழுதிவைத்துக் கொண்டு தினமும் பலமுறை உறக்க படித்துப்பார்க்கச் சொல்கிறார்கள். Mind tuning-ஆம்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல விஷயமாக இருக்கிறதே. :-)

      Delete

Post a Comment

வணக்கம். உங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன். இங்கும் பதியலாம். sithurajponraj134@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.