மணிமாலா மதியழகனின் முகமூடிகள்

[மணிமாலா மதியழகனின் "முகமூடிகள்" என்ற சிறுகதை தொகுப்பு விரைவில் வெளிவருகிறது. என்னையும் மதித்து முன்னுரை கேட்டார். அது கீழே தரப்பட்டுள்ளது. மற்றவர்கள் முன்னுரை கேட்கும்போதுதான் எனக்கு வயதாகிக் கொண்டு வருவது நினைவுக்கு வருகிறது].

----
கைத்தட்ட வைக்கும் கதைகள்

சிறுகதை திடகாத்திரமும் பேரழகும் வாய்ந்த உயர் ரக குதிரையின் உடம்பைப்போல மிருதுவானது. அதன்மீது கை வைக்க ஜீவ களை ததும்பி நிற்கும். ஆனால் சாதுவாக நம் முன்னால் நிற்கும் குதிரையின் ஆற்றல் வியப்புக்குரியது. லகானைச் சொடுக்கினால் எந்த திசைக்கு வேண்டுமானாலும் நான்குகால் பாய்ச்சலில் பறந்து அந்தந்தத் திசையின் எல்லைகளைக் காட்டக்கூடியது.
ஜீவக்களையும், பேராற்றலும் துலங்குபவை மணிமாலா மதியழகனின் “முகமூடிகள்” என்ற இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள்.
***
மொத்தம் இருபது சிறுகதைகள். சில கதைகள் நீளமானவை. சில வியக்கவைக்கும் வகையில் நீளம் குறைந்த குறுங்கதைகள். பல கதைகள் சிங்கப்பூரின் முன்னணி இலக்கிய வட்டங்களில் பரிசுகள் பெற்றவை. முக்கிய தமிழ்ச் செய்தித்தாளில் வெளியானவை. நீளமான கதைகள் – சுருக்கமான கதைகள். திரிவிக்கிரமனும் வாமனனும் போல. மூன்று அடியில் இந்தக் கதைகள் பல உலகங்களை அளந்து விடுகின்றன.
***
எந்த அளவுக்கென்றால், சிங்கப்பூர் வாழ்க்கையின் சின்னச் சின்ன அவலங்களை, மன உளைச்சல்களை, நகைச்சுவைகளை விவரிக்கும் அதே நேரத்தில் உலகத்தின் எல்லா இடங்களுக்கும் பொதுவான கணவன்-மனைவி வருத்தங்களை, வயோதிகத்தை, பிள்ளைப் பாசத்தை, சூழ்நிலைக்கு அடிமையாதலை, அடிமையானால் என்ன நடக்கும் என்பதை இந்தக் கதைகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
அண்டத்திலுள்ளதைப் பிண்டத்தில் காட்டுவதுதானே சிறுகதை. அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ளவை யாவையுமே அசல் சிறுகதைகள்.
அவற்றின் மிகப் பெரிய பலமாக நுண்மையான கதைச் சூழல்கள். தீபாவளி சீர் செய்ய வேண்டும் என்று ஞாபகப்படுத்தும் மனைவியிடம் தன் மன உளைச்சலையும் களைப்பையும் கோபமான வார்த்தைகளால் பேருந்தில் அமர்ந்தபடியே கைத்தொலைப்பேசி வழியாகக் கணவன் வெளிப்படுத்துகிறான். கைத்தொலைப்பேசியை அணைத்துவிட்டுச் சுற்றுமுற்றும் பார்க்கிறான். அவன் கத்துவதையே பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உடனே தம் கண்களைத் தாழ்த்திக் கொண்டு வேறெதையோ பார்ப்பதுபோல் பாவனை செய்கிறார்கள் (“சரவெடி” சிறுகதை).  இது சில வேளைகளில் உங்களுக்கும் எனக்கும் நடந்திருக்கிறதா இல்லையா? மனைவியிடம் பணம் அனுப்ப முடியாது என்று வீறாப்புப் பேசியவன்தான் அடுத்த நாள் இன்னும் அதிகமாக வேலை செய்கிறேன் இன்று மட்டும் பணம் அனுப்பப் போக வேண்டும், சீக்கிரமே வேலையை விட்டுக் கிளம்ப அனுமதி வேண்டும் என்று வேலையிடப் பொறுப்பாளரிடம் தலை சொறிந்தபடி நிற்கிறான்.
இடையிடையே சிங்கப்பூர் வேலைச் சூழலின் விசித்திரங்கள், வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து வேலை செய்வோர் எதிர்நோக்கும் சங்கடங்கள், பெருவிரைவு ரயில் சேவை தடைப்பட்டிருப்பது, வெளிநாட்டு ஊழியன் ஒருவனுக்குப் பதவி உயர்வு கிடைத்தால் அவனது நண்பர்கள் அவனைச் சற்றே வித்தியாசமாகப் பேசுவது, கோபப்படக்கூடாது என்று அவன் தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் சுயபோதனை.
சிலர் கதையில் சம்பவங்களை மட்டும் அடுக்கிக் கொண்டு போவார்கள். கதை செல்லும் போக்கிலேயே ஒரு உலகத்தையே படைத்துக் காட்டுவது அற்புதமான கலை. அது, மணிமாலா மதியழகனுக்குக் கைவந்திருக்கிறது.
இதனால்தான் இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் வித்தியாசமாய் தொனிக்கின்றது. வயோதிகத்தில் அல்லலுறும் பெரியம்மா ஜூரோங் காடாய் இருந்த காலத்தைப் பற்றியும் பழைய பிரதமர் ஒருத்தரின் மரணத்தைப் பற்றியும் பேசுகிறாள் (“தழும்புகள் ஆறுவதில்லை). முகமூடிகள் கதையில் தேசிய சேவை என்னும் மிகச் சிங்கப்பூர்த்தனமான விஷயத்தின் பின்னணியில் பெற்றோர் பாசம் விளக்கப்படுகிறது.
“சூரியா!!?” என்ற சிறுகதையும் “அவ்” என்ற சிறுகதையும் சிறந்த நகைச்சுவையோடு அமைந்துள்ளன. ஆனால் ஆசிரியரின் கதையாடல் கற்பனைக்கு இந்தப் பிரபஞ்சம் மட்டும் போதவில்லை. சிங்கப்பூர் தமிழ் மொழியை வளர்க்கும் அழகை விவரிப்பதற்காகக் கடவுளர்களைக்கூட கதை மாந்தர்களாக்கி இருக்கிறார்.
***
அடுத்தது, கோணம். எந்தப் புள்ளியிலிருந்து கதை சொல்வது என்பது. திரைப்படம் எடுப்பதற்காகக் காமிராவை எங்கு வைப்பது என்பதைப் போன்றது. எல்லாக் காட்சிகளையும் நெருக்கமாகவோ தூரக் காட்சிகளாகவோ வைத்தால் திரைப்படம் சுவாரஸ்யப்படாது. கதையும். மணிமாலா மதியழகனுக்குக் கதையின் கோணத்தைத் தேர்ந்தெடுப்பது அழகாய் அமைந்திருக்கிறது. இந்த ஆற்றல் கதைகளைத் தொய்வில்லாமல் நகர்த்த பேருதவி செய்கிறது.
“தழும்புகள் ஆறுவதில்லை”யில் கதைசொல்லியின் ஏழு வயது மகனின் பார்வையில் கதையைத் துவங்குவது, “அடி” கதையின் பெரும்பகுதியை காவல் நிலையத்திலேயே அமைத்துவிட்டுக் கடைசி பகுதியில் மட்டும் காலியாகக் கிடக்கும் சக ஊழியனின் படுக்கையைக் காட்டுவது மற்றும் “அப்பாவிடம் போகிறேன்” கதையில் காட்சிகளை நகர்த்திய லாவகம்.
சமகால சிங்கப்பூர் எழுத்தாளர்கள் இடையே கதைகோணங்களை மிகச் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் உள்ளவர் என்று மணிமாலா மதியழகனைத் தாராளமாகக் குறிப்பிடலாம். இந்த ஆற்றலை வளர்த்துக் கொண்டார் என்றால், இதுவே அவரைப் பல முதலிடங்களுக்கும் கொண்டு போகவும் செய்யலாம்.
***
மணிமாலா மதியழகன் சிறந்த கவிஞர் என்பதை அறிந்து கொண்டேன். தமிழகச் செய்தித்தாள் மற்றும் ஊடகங்களிலும் சிங்கப்பூர் தமிழ்ச் செய்தித்தாளிலும் அவர் கவிதைகள் அடிக்கடி இடம் பெறுவது அவரது தகுதிக்குச் சான்று. கதைகளில் அவரது சொல்லாட்சி நிறைவாக உள்ளது. சிங்கப்பூரின் தலை சிறந்த சிறுகதை எழுத்தாளர் கமலா தேவி அரவிந்தனுக்குப் பிறகு கதைகளுக்கும் கதா மாந்தர்களுக்கும் பெயரிடுவதில் மணிமாலா மதியழகன் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.
படிக்கும்போது ஏற்படும் சுவையில் அது தெரிகிறது.
***
திருஷ்டிப் பொட்டு: குடிகாரக் கணவர்களும், கணவன் படும் சிரமத்தை உணராத மனைவிகளும் பெருகிவிட்டார்களா என்ன? கதைகளைப் படித்துவிட்டு எனக்கேற்பட்ட உணர்வு.
***
அந்தோணி டி'மெல்லோ ஒரு முறை கதை ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். தேவன் மனிதனைப் படைத்துவிட்டு அவனைத் தன் தூதர்களிடம் காட்டினானாம்.
நல்ல தேவதூதர்கள் மனிதன் என்னும் படைப்பைக் கண்ட ஆனந்தத்தில் கைகளைப் பலமாகத் தட்டினார்களாம். சாத்தான் மட்டும் மனிதனுடைய பலவீனங்களை மட்டுமே சுட்டிக் காட்டி விமர்சனம் செய்தானாம்.
இந்தக் கதைகளை படித்துவிட்டு நான் பலமாகக் கைகளைத் தட்டுகிறேன்.

- சித்துராஜ் பொன்ராஜ்

Comments