எஸ். ரா. என்ற அற்புதம்

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவிற்குப் பின் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனை விமர்சனம் செய்ய சிலர் கிளம்பியிருக்கிறார்கள்.

நேற்று விழாவில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ‘இலக்கியத்தில் அறம்' என்ற அமர்வில் கலந்து கொண்டேன்.

எஸ்.ரா. உபபாண்டவத்தை எழுதியிருக்கிறார். நெடுங்குருதி என்ற நாவலில் இன்று கொண்டாடப்படும் கேப்ரியல் கார்ஸியா மார்கெஸ், மாரியோ வர்காஸ் லோசா என்ற எந்த தென் அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் சளைக்காத வகையில், ஏன் அவர்களையும் விட சில இடங்களில் உச்சத்திற்குச் சென்று தீராத வெயிலில் தவிக்கும் வேம்பலை என்ற ஊரையும் அதில் உலவும் மனிதர்களையும் படைத்துக் காட்டியிருக்கிறார்.

‘அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது’ போன்ற எஸ்.ராவின் சிறுகதைகள் வாசகனின் உயிர்நாடியை அசைக்கக் கூடியவை.

அவர் எழுத்துக்கள் போர்ஹே முதற்கொண்டு ரஷ்ய இலக்கியம், வங்கக் கதைகள், ஜென் தத்துவம், உலகச் சினிமா வரையிலும் தமிழ் வாசகர்களைச் சரிசமமாய் அமர வைத்து அறிமுகப் படுத்தியிருக்கின்றன.

(எஸ்.ராவின் நூல்களை மொத்தமும் படித்திருக்கிறேன் என்று அவருடைய எல்லாப் புத்தகங்களின் தலைப்பையும் சொல்லி நிரூபிப்பது இங்கு எனது நோக்கமல்ல).

நேற்றைய அமர்வில் எட்டு வயது சிறுவனையும் அறம் பற்றிய கேள்விகளைக் கேட்கத் தூண்டிய வகை அவருடைய சிந்தனையின் அடர்த்திக்கும் மொழி எளிமைக்கும் நுட்பத்திற்கும் சான்று.

நிறைகுடங்கள் எப்போதும் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில்தான் பேசுகிறார்கள்.

அந்தச் சிறுவன் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்ட போதும் முகம் சுளிக்காமல் சிரித்த முகத்தோடு இருந்தது எஸ்.ராவின் மனிதாபிமானம்.

ஆனால் அவர் கொண்டிருக்கும் பரந்த வாசிப்புக்காகவோ, மொழியின் அருமைக்காகவோ, அவரது தனி மனிதப் பண்புகளுக்காகவோ மட்டும் நான் எஸ்.ராவைக் கொண்டாடவில்லை.

எங்கெங்கெல்லாமோ படித்ததையும் பார்த்ததையும் மூக்கு உறிஞ்சியபடியே பட்டியல் போடுவதையே அதி மேதாவித்தனம் என்று சராசரி மனிதர்கள் மட்டுமல்ல, பல எழுத்தாளர்கள்கூட நினைக்கும் இந்நாளில், தான் கற்றுணர்ந்த விஷயங்களைப் பற்றித் தர்க்கபூர்வமாகவும் தத்துவ ரீதியாகவும் சிந்திப்பவர்கள் குறைவு. அதைச் சுவையாக எடுத்துச் சொல்லக் கூடியவர்கள் அதைவிடக் குறைவு.

எஸ். ரா. இப்படிப்பட்ட அபூர்வமான மனிதர்களில் ஒருவர்.

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவுக்கு எங்கிருந்தெல்லாமோ உச்ச எழுத்தாளர் என்றும் சிந்தனாவாதி என்றும் உலக எழுத்தாளர்கள் பல பேரை அழைத்து வந்திருந்தார்கள்.

அவர்கள் யாருக்கும் சிந்தனையில் எஸ்.ரா. குறைந்து போகவில்லை. பல இடங்களில் விஞ்சியே நின்றார். (தமிழில் பேசியதுதான் அவர் செய்த தவறோ?)

அவர் அறத்தைப் பற்றிச் சொல்லிய எல்லாக் கருத்துக்களோடும் எனக்கும் உடன்பாடில்லைதான்.

அறம் என்ன கத்தரிக்காயா? அதைப் பற்றி எல்லோருடைய கருத்துக்களும் ஒத்துப் போவதற்கு?

அவர் எழுத்தைப் பற்றிச் சொன்ன கருத்துக்களோடும், பண்பாட்டைப் பற்றிச் சொன்ன கருத்துக்களோடும் கூட நாம் வேறுபடலாம்.

ஆனால் தர்க்கபூர்வமான தத்துவ ரீதியிலான கருத்துக்களை அதே முறையில் எதிர்கொள்ளக் கூடவா நமக்குத் திராணியில்லை?

பெரும்பாலும் தத்துவ வறட்சியே மலிந்திருக்கும் தமிழ் எழுத்துச் சூழலில் எஸ்.ராவைப் போன்ற ஆழமான சிந்தனையுள்ள எழுத்தாளர்களைக் கொண்டாட நம்மில் சிலருக்கு ஏன் இன்னமும் தெரியவில்லை?

என்ன செய்வது, நம் ரசனை அப்படி.

அதற்காக ‘பெரிய' எழுத்தாளர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டும் என்று நான் சொல்லவில்லை (அதற்குத்தான் ஏற்கனவே நிறைய பேர் இருக்கிறார்களே).

கருத்துக்குக் கருத்துக் காரசாரமாக இருக்கலாம். ஆனால் எதிராளியின் தகுதிக்கு மதிப்புத் தரும் கண்ணியம் அதில் இருக்க வேண்டும்.

நாம் சொல்வது நம் தகுதியையும் தெளிவாகக் காட்ட வேண்டும்.

முகநூலில் பதிவு செய்யப்படும் அரைகுறை கருத்தெல்லாம் அறச்சீற்றமாகாது.

புரியாத விஷயங்களைக் கேலி செய்தே கடந்து போக நினைப்பது ஒரு மனநோய்.

சில மனநோய்களுக்கு மருந்தே இல்லை.

- சித்துராஜ் பொன்ராஜ்


Comments