பெல்ஜியத்தின் சித்திர நாவல்கள்

இப்போது பெல்ஜியத்தில் இருக்கிறேன். பெல்ஜிய இலக்கியம் (சிங்கப்பூர் இலக்கியத்தைப்போல்)  பல மொழி பல இன மக்கள் தொகையைப் பிரதிபலிப்பது. பெல்ஜியத்தில் பிரெஞ்சும் டச்சு மொழியும் பிரதான மொழிகளாகப் பேசப்படுகின்றன. கணிசமான சிறுபான்மையினர் ஜெர்மன் மொழியும் பேசுகிறார்கள். இங்கு பேசப்படும் டச்சு மொழி ஃப்ளெமிஷ் வட்டார வகையைச் சேர்ந்தது.

 இப்பெரு மொழி குழுக்களைத் தவிர்த்துப் பெலிஜியத்தின் தெற்குப் பகுதியில் வாலூன் மொழி, இனக் குழுவினர் வசிக்கிறார்கள். பிரெஞ்சு, ஸ்பானியம் போன்று லத்தீனை அடிப்படையாகக் கொண்ட வாலூன் மொழியில் இப்பகுதியின் பழங்குடியினரான கெல்ட்டு மக்களின் மொழியும் கலந்திருக்கிறது.

வாலூன் மொழிக்குப் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தனிப்பட்ட இலக்கியம் உண்டு. மொழிப் பிரிவுகள் தவிர ஐரோப்பாவில் ஒரு காலத்தில் கத்தோலிக்க புரோடஸ்டாண்டு மதப் போர்கள் அதிகமாக நடந்த இடம் பெல்ஜியம். பிரெஞ்சும் பிரெஞ்சு சார்ந்த மொழிகளும் பேசும் மக்களில் பெரும்பான்மையினர் கத்தோலிக்கர்களாக இருக்க, டச்சு ஜெர்மானியம் ஆகிய சாக்ஸன் மொழி அடிப்படையைக் கொண்ட மக்கள் பெருவாரியாகப் புரோடஸ்டாண்டு கிறிஸ்துவ விசுவாசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இத்தனை உட்பிளவுகளுக்கிடையேயும் பெல்ஜிய இலக்கியம் ஐரோப்பிய இலக்கிய நீரோடையில் தனித்தன்மையுடையதாகவே திகழ்கிறது. பெல்ஜியத்தின் தனித்தன்மையைப் பறைசாற்றும் இலக்கிய வடிவங்களில் தலைசிறந்ததாகக் கருதப்படுவது பெல்ஜிய காமிக்ஸ் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படும் கிராஃபிக்ஸ்/சித்திர நாவல் வகை என்றால் மிகையாகாது.

அனைத்து மொழிகளிலும் காமிக்குகள் முதலில் சிறார்களையும் பாமர மக்களை மகிழ்விக்கவும் அவர்களுக்குத் தகவல்களை எடுத்துச் செல்லவுமே வரையப்பட்டன.

பின்னர் உரைநடை நாவல்களிலும் வரலாறுகளிலும் வரும் சம்பவங்களை விவரிப்பதற்காக முதன் முதலில் ஒற்றைச் சித்திரமாக வரையப்பட்ட படங்கள் பின்னர் உலக நடப்புகளை விவரிக்கும் அல்லது விமர்சிக்கும் விமர்சன கார்டூன்களாக  நாளிதழ்களிலும் வார, மாத சஞ்சிகைகளிலும் வெளியிடப்பட்டன.

அதே சமயம்  சிறார்களை மகிழ்விப்பதை நோக்கமாகக் கொண்ட  ஓவியங்கள் ஒரு குட்டிச் சம்பவத்தைக் காட்டும் வகையில் மூன்று நான்கு படங்களை உள்ளடக்கிய பிரேம்களின் தொகுப்பாக வெளிவந்தன.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரஞ்சு காமிக்ஸ் சூழலுடன் சேர்ந்தே வளர்ந்த பெல்ஜிய காமிக்ஸ் இலக்கியம் போகப் போக தன் பாதையைத் தனித்தன்மை வாய்ந்ததாக அமைத்துக் கொண்டது.

1920களின் இறுதியில் ஹெர்ஜே என்ற புனைப்பெயரைக் கொண்ட ஜார்ஜ் ரெமி டின் டின் (பிரெஞ்சு உச்சரிப்பில் டென் டென்) காமிக்குகளை வரையத் துவங்கினார்.

இந்த காமிக்குகள் பெல்ஜிய காமிக்குகளின் தனிபாணி எனக் கருதப்படும் ஒரே தடிமனுடைய தெளிவான கோடுகள், குறுக்குக் கோடுகளோ நிழல் வெளிச்ச பாகுபாடுகளோ இல்லாமை, பொருட்களின் பின்னால் விழும் நிழல்கள் வெளிச்சமூட்டப்படுவது, கனமான வர்ணங்கள், தத்ரூபமான சித்திரப் பின்னணியில் கார்டூன் வகை மனிதர்கள் என்ற “லீன் கிளார்' பாணியில் வரையப்பட்டிருந்தன. மேலும் அதுவரை வெளிவந்த அமெரிக்க, பிரிட்டானிய காமிக்குகளில் இருந்ததுபோல் கதாபாத்திரங்களின் சொற்கள் சித்திரங்களின் அடியில் கட்டம் கட்டி எழுதப்படாமல் அவர்களின் தலையின் மேல் எழும் பேச்சு பலூன்களில் எழுதப்பட்டது. ஒரு சில பிரேம்கள் நீளம் மட்டும் அமெரிக்க கார்டூன்களைப்போல் அல்லாது பெல்ஜிய காமிக்குகள் முழுநீளச் சித்திரக் கதைகளாக வாரச் சஞ்சிகைகளில் வாரா வாரம் வர ஆரம்பித்து பின்பு தனிப் புத்தகங்களாக வெளியிடப்பட்டன.

ஹெர்ஜேவின் டின் டின் காமிக்குகளுக்கு முன்னால் பிரான்ஸ் மாஸரீல் என்ற ஃப்ளெமிஷ் ஓவியர் 165 மர அச்சுகளில் அமைக்கப்பட்ட Passionate Journey என்ற வார்த்தைகளே இல்லாத முழுநீளச் சித்திரக் கதையை வெளியிட்டார். பலராலும் மாஸரீலின் இந்தப் படைப்பே உலகின் முதல் கிராபிக்ஸ் நாவலாக கருதப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போதும் அதைத் தொடர்ந்தும் கூட பெல்ஜிய சித்திர நாவல்கள் கதைகளின் உள்ளடக்கத்திலும் கதையாடலிலும் தொடர்ந்து வளர்ச்சியுற்று இளையர்களுக்காக மட்டுமின்றி பெரியவர்களுக்காகவும் கதைகளும் சித்திரங்களும் வடிவமைக்கபட ஆரம்பித்தன.


தற்காலத்தில் ஐரோப்பிய காமிக் இலக்கியத்திலும் சித்திர நாவல் இலக்கியத்திலும் பெல்ஜியம் நாடு முன்னோடியாகக் கருதப்படுகிறது. இவ்வகை இலக்கியம் குறித்த தனிக் கருத்தரங்குகள், கண்காட்சிகள் பெல்ஜியத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. சித்திர நாவல் எழுத்தாளர்கள், ஓவியர்கள், வாசகர்கள், விமர்சகர்கள் என்று உலகமெங்கும் இக்கலையின் ஆர்வலர்கள் பரவியுள்ளார்கள்.

பெல்ஜியத்தில் காமிக்குகளும் சித்திரக் கதைகளும் தனிக்கலையாகவே கொண்டாடப்படுகின்றன.

கதைகள் சொல்வது என்பது வாய்மொழியாகவும் பின்பு அச்சிலும் வாக்கியங்களாக அமைக்கப்பெற்ற காலத்தையும் தாண்டி கதை கூறுதலில் ஒரு புதிய வடிவமாகவும் உத்தியாகவும் பெல்ஜியச் சித்திரக் கதைகளும் நாவல்களும் திகழ்கின்றன.

ஓவியக் கலைத்திறனையும் மீறி ஒவ்வொரு பிரேமிலும் எந்தெந்த விவரஙகளைப் புகுத்தி கதையை நடத்திச் செல்வது என்பதில் ஒரு உரைநடை ஆசிரியனைவிட சித்திர நாவல் ஆசிரியன் கவனமாக இருக்க வேண்டியதுள்ளது. உரைநடையைவிட சித்திர நாவல் கண்டிப்பான வடிவம். ஒவ்வொரு பிரேமிலும் சேர்க்கப்படும் சித்திரங்களும் உரையாடல்களுமே ஒரு கதாசிரியனின் கதை கூறல் திறமை உரைநடையில் தெரிவதை விட மிகத் துல்லியமாக வெளிப்பட்டுவிடும்.

உரைநடையில் சில சமயம் அனுமதிக்கப்பட்டுள்ள நீட்டி முழக்கும் சௌகரியம் சித்திர நாவல்களில் இல்லை.

இதையெல்லாம்விட முக்கியமாக சித்திர நாவல்கள் நம் கண்முன்னே வாசகர்களின் அமோகமான ஆதரவோடு வளர்ந்துவரும் இலக்கிய வடிவம்.

அதன் உத்திகளும் உள்ளடக்கமும் மற்ற இலக்கிய வடிவங்களின் நோக்கத்தையும் செல்வழிகளையும் எடைபோட நமக்குப் பேருதவியாக இருப்பது சாத்தியமே.

- சித்துராஜ் பொன்ராஜ்

Comments

Popular Posts