சூஃபிக்களின் ஞான மரபு

எனக்கு சூஃபி மார்க்கத்தைப் பற்றி அதிகமாகத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கவில்லை.

ஷெய்கு ஹஸ்ரத் ஆஸாத் ரசூல் அவர்கள் எழுதி நாகூர் ரூமியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “இதயத்தை நோக்கித் திரும்புதல் – சூஃபி வழியில் விழிப்படைதல்” என்ற புத்தகம் அந்தக் குறையை முழுமையாகப் போக்கியது.

ஹஸ்ரத் ஆஸாத் ரசூல் அவர்கள் மிகப் பழமைவாய்ந்த சூஃபி பாரம்பரியத்தின் பிரதிநிதி என்பது நூலின் வழியாகத் தெரிகிறது. 1920ல் உதய்பூரில் பிறந்தவர். 2006ல் காலமானார். அவர் தன் மாணவர்கள் சூஃபி வரலாறு பற்றியும், சூஃபி மார்க்கத்தின் இலக்கினைப் பற்றியும் பயிற்சிகளைப் பற்றியும் கேட்ட நாற்பது கேள்விகளின் தொகுப்பு, இந்நூல்.

மத்திய கிழக்கில் பிறந்த மதங்கள் மனிதனின் இதயத்தைப் பாதுகாப்பதைப் பற்றிப் பேசுகின்றன. இங்கே இதயம் என்று குறிப்பிடப்படுவது நிமிடத்திற்கு இத்தனை முறை துடித்து உடம்பின் ஏனைய உறுப்புக்களுக்கு ரத்தத்தைப் பாய்ச்சும் வெறும் தசைக்கோளமான மோட்டார் அல்ல. மத்திய கிழக்கு மதங்களின் ஆன்மீகப் பாரம்பரியத்தில் இதயம் என்பது மனிதனின் உண்மையான மிக அடிப்படையான ஸ்வரூபத்தையும், அவன் இருப்பின் பிளவுபடாத நடுமையத்தையும் குறிக்கிறது.

யூதர்களின் வேதாகமம் “உன் எண்ணங்களில் எச்சரிக்கையாக இருப்பது உனக்கு மிக முக்கியமானதாகும். உன் எண்ணங்கள் உன் வாழ்வைக் கட்டுப்படுத்தும்” என்று சொல்கிறது (நீதிமொழிகள் 4:23). இவ்வசனம் தமிழில் “எண்ணங்களில் எச்சரிக்கையாக இரு” என்று மொழிபெயர்க்கப்பட்டடிருந்தாலும் எபிரேய மூலத்தில் “உன் இதயத்தைக் கவனமாகப் பாதுகாத்துக்கொள்” என்றே இருக்கிறது. ஏன் பாதுகாக்க வேண்டும் என்றும் அதே வசனம் சொல்கிறது. “ஏனெனில் அதிலிருந்துதான் வாழ்க்கையின் விஷயங்கள் புறப்படுகின்றன” (மொழிபெயர்ப்பு எனது).

ஆகையால் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் ஆசானாக, மனிதனுடைய வாழ்க்கையின் திசையைத் தீர்மானிக்கும் ஆதாரமாகவே மத்திய கிழக்கின் ஆன்மீக அனுபவத்தில் இதயம் இருந்து வந்திருக்கிறது.
யூத மதத்திலொருந்து தனிப் பிரிவாகச் சென்ற கிறிஸ்துவ மதத்தின் கிழக்கத்திய சபைகளில் இன்றுகூட “இதயத்தின் பிரார்த்தனை” என்ற ஜப முறை ஒன்று வழக்கத்தில் உள்ளது. இந்த ஜப முறை “ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே பாவியாகிய என்மீது இரக்கமாக இரும்” என்று மீண்டும் மீண்டும் ஜபித்தபடியே இதயத்தை உற்றுப் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டது.  இந்தப் பிராத்தனையின் வார்த்தைகள் மனிதனுக்குள் இறங்க மனிதனின் மையத்தில் மறுரூபமாக்குதல் நடைபெற்று சதைப்பிண்டமாக இருக்கும் மனிதன் தெய்வீக வாழ்வில் பங்கு கொள்ள தகுதியுடையவனாகிறான் என்பது கிழக்கத்திய கிறிஸ்தவத்தின் நம்பிக்கை.

இந்த மறுரூபமாகுதலுக்குக் கிரேக்க மொழியில் ‘தியோஸிஸ்' என்று பெயர்.

சூஃபி மார்க்கமும் இதயத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. இதயத்தற்கு அரபியில் ‘கல்ஃப்' என்று பெயர். சிதறிக்கிடக்கும் கவனத்தை இதயத்தை நோக்கித் திருப்புவதே சூஃபி ஞான மரபின் தத்துவம்.

ஆனால் இதயத்தை எப்படி பாதுகாப்பது?

உலக பற்றுகளிலிருந்து இதயத்தைப் பிடுங்கி எடுத்துக் கொள்ளும் துறவை சூஃபி ஆசிரியர்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமறையின் வழிகாட்டுதலின்படி மனிதன் தான் உலகத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளைக் குறைவறச் செய்வதே ஆன்மீகத்திற்கு அனுகூலம் என்கிறார்கள். ஆனால் உலக விஷயங்களில் மனிதனின் சுயம் சிதறிப் போகாமல் இருக்க இறைவனிடம் காதல் கொள்வதே வழி என்கிறார்கள். சூஃபி தத்துவம் என்பது காதலின் மார்க்கம். எல்லாக் குணநலன்களும் பொருந்திய இறைவனிடம் காதல் கொள்வதால் நாம் நம்மையே கடந்து போகிறோம். அற்ப அபிலாஷைகளாலும், பொல்லாப்புகளாலும் கட்டப்பட்ட நம் சுயம் அழிகிறது. மனிதன் அற்பமான இந்தச் சுயம் அழியவே இறைவனிடம் காதல் கொள்கிறான். சுயம் அழிந்ததாலேயே இறைவனிடம் மேலும் மேலும் காதலாகி அவனுக்கு ஆட்படுகிறான்.

சுயம் அழியாதவன் சூஃபியே அல்ல என்று இந்த நூல் விளக்குகிறது.
இறைவனின் குணநலன்களை விவரிக்கும் அவனுடைய திருப்பெயர்களை ஸ்மரிப்பதால் அவன் மீது காதல் உண்டாகிறது. காதல் திடப்பட சுயம் அழிகிறது. இந்தச் சுயம் அழிவதால் நம் மீது நாம் வைக்கும் கவனம் போய் இறைவனின் இருப்பே எப்போதும் நம் கவனத்தில் இருக்கிறது.  இறைவனின் அருட்கொடைகளுக்காக கண்மூடிக் காதலுடன் காத்திருத்தல் (முராகபா) சாத்தியமாகிறது.

ஆனால் மனிதன் சதைப்பிண்டமல்லவா. காந்தம் எப்படி இரும்பைத் தொட்டுத் தன்னிடமுள்ள காந்த சக்தியைப் பாய்ச்சுகிறதோ அப்படியே ஒரு தேர்ந்த ஞானாசிரியனும் தன் மாணாக்கர்களுக்கு இறைப் பற்றின் துவக்கத்தைப் பாய்ச்சுகிறார்.

தமிழில் ஆழமான ஆன்மீகக் கருத்துக்களை எளிமையான முறையில் சொல்லும் நூல்கள் அரிது. இந்நூல் சூஃபி தத்துவத்தைப் பற்றிய வெறும் வரலாற்றுப் பாடமாக மட்டுமல்லாது இறை நேசத்தின் ஒளியாகவும், மழைச்சாரலாகவும், வீசு தென்றலாகவும் வீங்கிள வேனிலாகவும் இருக்கிறது.

- சித்துராஜ் பொன்ராஜ்


Comments