மலைமீது எரியும் நெருப்பு – இந்திய தர்க்க சாஸ்திரத்தின் துளிகள் (1)

ஈஸ்வரனைப் பற்றியதோ, சாதாரண ஈ காக்காய்களைப் பற்றியதோ, ஒரு விஷயத்தைப் பற்றி நாம் கொண்டுள்ள அறிவு பிழையில்லாததாக இருக்க வேண்டும். 

நமக்கு வரும் தகவல்களின் மூலமாகத்தான் நமக்கு அறிவு ஏற்படுகின்றது. முன்னர் கூறியதுபோல் நான்கு வகைகளில் இத்தகவல்கள் நம்மை வந்தடைகின்றன. (1) கண்ணால் காண்பதால் அல்லது மற்ற புலன்களால் உணர்ந்து கொள்வதால் (பிரத்யக்ஷம்), (2) விளைவுகளைக் கொண்டு காரணத்தை ஊகிப்பதால் (அனுமானம்), (3) முன்னுதாரணங்களைக் கொண்டு புதிய பொருளை அறிந்து கொள்வதால் (உபமானம்) மற்றும் (4) நம்பத்தகுந்த மனிதர்களிடமிருந்தோ புத்தகங்களிடமிருந்தோ அத்தகவல்கள் நமக்கு வருவதால் (சப்தம்).

ஆனால் தகவல்கள் நம்மிடம் வந்த உடனேயே நாம் அறிவாளிகள் ஆகிவிடுவதில்லை. தகவல்களை சேகரித்து வைத்திருப்பதாலேயே ஒரு மனிதன் அறிவுள்ளவன் ஆகிவிடமுடியாது. பெறப்படும் தகவல்கள் தர்க்க பூர்வமாக ஆராய்ந்து பார்க்கப்பட்டு அவற்றிலிருந்து நாம் பெறும் முடிவுகள் சரியானவைதானா என்று  நாம் கணிக்க வேண்டும்.

ஆராய்ந்து பார்ப்பதில் முதல் படியாக நாம் புலன்களால் உணரும் செய்திகளைத் தர்க்க பூர்வமான எடைபோட கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மனிதர் குறிப்பிட்ட வகை ஆடைகளை அணிந்து கொண்டு, முகமூடி அணிந்து கொண்டு கத்தியால் படுத்துக் கிடக்கும் மற்றொரு மனிதனை ஈவிரக்கமின்றி அறுக்கிறார். இது கண்களால் பெறப்படும் தகவல். இதைப் பார்த்துவிட்டுக் கொலை நடக்கிறது என்று நாம் அலறி அடித்துக் கொண்டு ஓடலாம். நம் செயல் மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் முன் எப்போதோ  (தொலைக்காட்சியிலோ நேரிலோ கண்ட மற்ற கொலைகளின் அடிப்படையில்) நியாயமானதாகக்கூட இருக்கலாம்.

ஆனால் அந்த மனிதர் ‘கொலை’ செய்யும் சூழ்நிலையைப் பார்க்கும்போது நமக்குச் சந்தேகம் தட்டுகிறது. அவர் வெட்டப்பட்டவனிடமிருந்து பீறிடும் ரத்தத்தை ஆதுரத்துடன் துடைக்கிறார். அவர் ’கொலை’ செய்து முடித்த பிறகு சுற்றி நிற்கும் மற்றவர்கள் அவரைத் தாக்காமல் அவர் கைகளைப் பிடித்துக் குலுக்குகிறார்கள். அவரை முக்கியமான மனிதரைப்போல் நடத்துகிறார்கள். இன்னும் கொஞ்சம் நிதானமாக ஒரு நாளோ பல நாட்களோ பொறுத்திருந்து பார்த்தோம் என்றால் ’கொலை’ செய்யப்பட்ட மனிதன் உடல் நலத்துடன் எழுந்து நடக்கிறான். சாகவில்லை. நாம் மதிக்கும் ஒருவரிடம் கேட்கிறோம். அவர் கத்தியால் அறுத்தவர் ’கொலைகாரன்’ அல்ல, ‘மருத்துவர்’ என்கிறார். த
நாம் கண்களால் கண்டதை ஆராயாமல் முடிவெடுத்திருந்தோம் என்றால் அவரைக் கொலைகாரன் என்றேதான் முடிவெடுத்திருப்போம்.

ஆனால் தகவல்களைச் சரியாக ஆராய தர்க்கத்துடன் சிந்தித்தால் மட்டும் போதாது. நாம் பெறும் தகவல்களைச் சரியாகப் புரிந்து கொள்ள மொழியறிவும் அவசியம். உதாரணத்துக்கு நம்முன்னே அழகான பளபளக்கும் பாம்பு வருகிறது. நாம் மறுபடியும் அதே நம்பத்தகுந்தவரிடம் போய் அது என்ன என்று கேட்க அவர் அதனை ‘நல்ல பாம்பு’ என்கிறார். பாம்பின் குணத்தைத் தான் அவர் ‘நல்ல’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார் என்று எண்ணி நாம் பாம்பைத் தடவிக் கொடுக்க போனோம் என்றால் விளைவு என்னவாகும்?

நாம் பெறும் தகவல்களைச் சரியாக எடைபோட தர்க்கத்தின் அடிப்படையிலும், மொழியின் அடிப்படையிலும் ஆராய்வதில் கவனம் செலுத்துவதால் நியாய தரிசனம் தர்க்கசாஸ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இதன் அடிப்படை நூல் நியாய சூத்திரம். எழுதியவர் கோதமர். இதற்கு பாஷ்யம் அல்லது விளக்கவுரை எழுதிய வாத்ஸாயனர் கி.பி. 400ல் வாழ்ந்ததாகச் சொல்லப்படுவதால் கோதமர் அவருக்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. வாசஸ்பதி, ஜெயந்தர் ஆகியோரின் வழியாக வந்த தர்க்கசாஸ்திரம் வங்காளத்தில் இன்னும் மெருகேற்றப்பட்டு நவத்வீபம் என்ற ஊரில் வாழ்ந்த பண்டிதர்களால் ’நவ்ய நியாயம்’ (புது நியாயம்) என்று சொல்லித்தரப்பட்டது. நவ்ய நியாயத்தின் அடிப்படை நூலான தத்துவ சிந்தாமணியை எழுதியவை கங்கேசர். இவர் 1200ல் வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது.

நியாய தரிசனத்தில் ஒரு பொருளையோ சம்பவத்தயோ ஆராய்ந்து அதைப் பற்றி தெளிவான முடிவுக்கு வருவதற்கான ஐந்து படிகளைக் கொண்ட தர்க்க முறை உருவாக்கப்பட்டது.

இந்த ஐந்து படிகள்: (1) நாம் ஆராய்ந்து சரியானதே என்று நிரூபிக்க வேண்டிய கருத்து; (2) அந்த கருத்து சரியானதே என்று சொல்வதற்கான காரணம்; (3) அந்த காரணத்தை நிரூபிக்க உதவக் கூடிய பொது விதி; (4) விதியை நிரூபிக்க நினைக்கும் கருத்துடன் பொருத்திப் பார்ப்பது; (5) விதி பொருந்தி வந்தால் முதலில் சொன்ன கருத்தை வலுவாகச் சந்தேகமின்றி சொல்வது.

இந்த தர்க்க முறைக்குக் கோதமர் பின்வரும் எளிய உதாரணத்தைத் தருகிறார்:

(1)   மலைமீது நெருப்பு எரிகிறது. [நிரூபிக்க வேண்டிய கருத்து]

(2) மலை மீதிருந்து புகை வருகிறது [கருத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கும் காரணம்]

(3)   புகை இருக்கும்போது நெருப்பு இருக்கும் [சமையலறையில் பார்க்க முடிகின்றது – பொது விதி]

(4)   நெருப்போடு சம்பந்தபட்ட புகை மலைமீது தெரிகிறது

(5)   அதனால் நிச்சயமாக நெருப்பு எரிகிறது.

இந்த தர்க்க முறையின் ஆதாரமே பார்க்கும் சம்பவத்தோடு சரியான விதிகளைப் பொருத்திப் பார்ப்பதிலேயே உள்ளது. இதனை அடுத்த பதிவில் பார்ப்போம். 

சரியாகப் பயன்படுத்தப்பட்டால் இத்தர்க்க முறையால் ஈஸ்வரன் இருக்கிறானா இல்லையா என்பதைக் கூட அனுமானித்துவிடலாம் என்பது நியாய தரிசனத்தின் துணிபு.


இதனை அடுத்த பதிவில் பார்ப்போம். 

- சித்துராஜ் பொன்ராஜ்



Comments