இந்தியத் தத்துவம் - அறிதலின் ஆதாரங்கள்

ஒரு பொருளைப் பற்றியோ, விஷயத்தைப் பற்றியோ தெளிவாகவும், பழுதில்லாமலும் அறிந்து கொள்வது ஒரு மனிதனின் எண்ணங்களையும் அதன் அடிப்படையில் அவனது வாழ்க்கையின் முறையையும் திசையையும் மாற்றியமைக்கக் கூடியது. கிழக்கத்திய மேற்கத்திய தத்துவக் கோட்பாடுகள் இரண்டிற்கும் இந்த புரிதல் அடிப்படையானது. ஐயம் திரிபு அற அறியப்படாத பொருளோ வித்தையோ முழு பயனளிக்காமல் போகும் என்பது மட்டுமன்றி அரைகுறை அறிவுள்ளவர்களுக்கு அது துன்பமாகவும் அபாயமாகவும் முடியலாம்.

இதனால் ச்ரத்தை எனப்படும் நம்பிக்கையையே அடிப்படையாகக் கொண்ட பக்தி, சரணாகதி மார்க்கங்களில்கூட விசுவாசத்திற்குப் பாத்திரமான பொருளைப்பற்றி ஐயந்திரிபற அறிந்து கொள்வதின் அத்தியாவசியம் போதிக்கப்படுகிறது.

இந்திய தத்துவ தரிசனங்களில் மனிதனின் அறிதலின் ஆதாரங்கள் பிரமாணங்கள் என்ற பெயரில் நான்கு முக்கியப் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரமாணங்கள் என்பவை மனிதன் அறிவைப் பெற்றுக் கொள்ளும் வாயில்கள். பிரமேயம் என்பது இந்த அறிவின் வாயில்களால் மனிதன் அறிந்து கொள்ளக்கூடிய பொருட்கள் அல்லது விஷயங்கள்.

இந்திய தத்துவ தரிசனங்களின் பார்வையில் மனிதன் அறிவைப் பெற்றுக் கொள்ளும் நான்கு வழிகள்: கண்களால் காண்பது (பிரத்யக்ஷ்யம்), விளைவுகளால் ஊகிப்பது (அனுமானம்), முன்னுதாரணங்களால் அறிவது (உபமானம்) மற்றும் நம்பத்தகுந்த மனிதர்களிடமிருந்தோ மூலத்திலிருந்தோ பெறப்படும் அறிவு (சப்தம்).

புலன்களால் நேரடியாக அறிந்து கொள்ள முடிவதே பிரத்யக்ஷ அறிவு. அடிப்படையில் பிரத்யக்ஷம் என்ற சொல் கண்களால் காண்பதையே குறித்தாலும், பிரதியக்ஷ அறிவு என்பது கேட்டல், முகர்தல், தொடுதல். சுவைத்தல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

பிரத்யக்ஷ அறிவு நிர்விகல்பம், சவிகல்பம் என்று இரண்டு வகை படுகிறது. ஒரு பொருளைத் தூரத்தில் இருந்து பார்க்கிறோம். தொலைவிலிருந்து பார்க்கப்படும் பொருள் எவ்வித தோற்ற வேறுபாடுகளுமின்றி வெறும் பருப்பொருளாக, பிண்டமாகத் தெரிகிறது. இப்படி காணும் பொருள் வெறும் பிண்டமாக தோற்றத்தாலும் குணங்களாலும் வேறுபடுத்த முடியாமல் இருந்தால் அது நிர்விகல்ப பிரத்யக்ஷ ஞானம். இந்நேரத்தில் அப்பொருளின் குண சிறப்புக்கள் எனப்படும் விகல்பங்களைப் (வேற்றுமைகளை) பற்றிய அறிவு நமக்கு இருக்காது.

ஆனால் அந்த பிண்டத்தை நோக்கி சற்று முன்னேறினால் அதற்கு நிமிர்ந்த உருவமும் இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இருப்பதைப் பார்த்து அது மனிதனாகவோ, குரங்காகவோ இருக்க வேண்டும் என்று நமக்குத் தோன்றுகிறது. இன்னும் அருகில் போய் பார்த்தால் அது அழகிய கூந்தலையும் தாமிரமாய் ஜ்வலிக்கும் பெண் என்று கண்டு கொள்கிறோம். அந்த உருவத்துக்கு இன்னமும் அருகில் போய் அதனுடன் பேசிப் பழகினால் அதனுடைய குணங்கள் மேலும் நமக்குத் தெரிய வரலாம். சில பேருக்குத் திருமணம் செய்த பிறகுதான் தான் கட்டிக் கொண்ட உருவத்தைப் பற்றிய உண்மையான அறிவே பிறக்கிறது! இப்படி கண்களின் முன்னால் புலப்படும் பொருளின் குணச் சிறப்புக்கள் மேலும் மேலும் பலவாகி நமக்குத் தெரிய வருவது சவிகல்ப பிரத்யக்ஷ அறிவு. சவிகல்பம் என்றால் குண வேறுபாடுகளோடு கூடியது என்று பொருள்.

அடுத்தது அனுமானம். விளைவுகளால் ஊகித்து அறியும் அறிவு. இதற்கு இந்திய தத்துவ நூல்களில் தரப்படும் புகழ்பெற்ற உதாரணம் ஒன்று உண்டு. தூரத்தில் ஒரு மலை மீது புகை எழும்புவதைக் காண்கிறோம். புகையைப் பார்த்தவுடன் மலை மீது தீப்பற்றி எரிகிறது என்பதை அறிந்து கொள்கிறோம். இங்கு புகை என்பது விளைவு, அல்லது காரியம். தீ என்பது காரணி. ஆனால் இந்த வகை அறிவு நமக்குச் சித்திக்க வேண்டும் என்றால் காரணிக்கும் காரியத்துக்கும் இடையே உள்ள தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும். காரணிக்கும் காரியத்துகும் இடையே உள்ள தொடர்பு தெளிவற்று இருந்தாலோ அல்லது ஒரே காரியம் பல் வேறு காரணிகளால் ஏற்படக் கூடிய சாத்தியம் இருந்தாலோ இந்த அனுமான அறிவு பயன் தராது.

மூன்றாவது, உபமான அறிவு. முன் உதாரணங்களைப் பயன்படுத்தி ஒரு பொருளைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வது. உதாரணத்துக்கு, நான்கு சக்கரத்துடன் வேகமாக நமக்கெதிரே ஓடிவரும் ஒரு இரும்புப் பெட்டியைப் பார்க்கிறோம். அது என்னவென்று தெளிவாகத் தெரியாவிட்டாலும் முன்பு வாகனம் ஒன்றைப் பார்த்த அனுபவத்தினால் அது ஒரு வகை வாகனம் என்று நாமே ஊகித்துக் கொள்வோம்.

கடைசியாக, சப்தம் அல்லது நம்பத்தகுந்த மனிதர்களிடமிருந்தோ மூலத்திலிருந்தோ பெறப்படும் அறிவு. சப்த அறிவு இரண்டு வகைப்படும். ஒன்று பௌருஷேயம், அல்லது மனிதர்களிடமிருந்து பெறப்படுவது. இரண்டாவது, அபௌருஷேயம் அல்லது அமானுஷ்யமாக பெறப்படுவது. ஒருவர் வெளிநாட்டுக்குப் போய் வந்து நம்மிடம் அந்த நாட்டைப் பற்றிய தகவல்களைப் பகிர்கிறார். இதனால் அந்நாட்டைப் பற்றிய நம் அறிவு வளர்கிறது. இது, பௌருஷேய அறிவு.

இரண்டாவது, ஒரு மனிதரின் வழியாக அவரையும் மீறி தகவல்கள் ஏதோ ஒரு அமானுஷ்யமான மூலத்திலிருந்து பெறப்படுகின்றன. இத்தகவல்கள் மனிதர்களிடமிருந்து உருவாகாததால் அவை அபௌருஷேயம். இவற்றின் அடிப்படையின் நாம் அறிந்து கொள்ளும் விஷயங்களும் அபௌருஷேயம். இத்தகைய அபௌருஷேய அறிவில் புனித நூல்களான வேதங்களும், தீர்க்கதரிசிகளின் உரைகளும், ஆழ்வார் நாயன்மாராதிகளின் அருளிச்செயல்களும் அடக்குகின்றன என்பதே இந்திய தத்துவ தரிசனங்களின் பொதுவான முடிவு.

ஆனால் இந்த நான்கு பிரமாணங்களையும் உற்றுப் பார்க்கும்போது நமக்கு மூன்று விஷயங்கள் புலப்படுகின்றன.

முதலாவது, அறிவைப் பெறக்கூடிய இந்நால்வகை பிரமாணங்களின் ஒன்றுகூட தவறுக்கு அப்பால்பட்டதல்ல. கண்களால் காண்பது பொய்யாகக் கூடும். தவறான முன்னுதாரணங்களின் அடிப்படையில் ஒரு காரியத்துக்குத் நாம் தவறான காரணங்களைக் கற்பித்துவிடலாம். அல்லது நாம் பார்த்த வயதானவர்கள் எல்லோரும் மகா நல்லவர்கள் என்ற அனுபவத்தால் அடுத்த முதியவரை அணுகலாம். அவர் மகா மோசக்காரராக இருப்பார். நம்பத்தகுந்தவர்களாகவே இருந்தாலும் மனிதர்களிடமிருந்து பெறக்கூடிய தகவல்கள் அவர்கள் கண்டும், அனுமானத்தால் ஊகித்தும், உபமானத்தால் தெரிந்தும் கொண்ட அறிவு என்பதால் அது அப்பழுக்கானது என்று சொல்ல முடியாது.

அப்படியென்றால் புனித நூல்களின் வழியாகவும், புனிதர்களின் வழியாகவும் வரும் அபௌருஷேய அறிவு? பெரும்பாலும் இத்தகைய தகவல்கள் கண்ணுக்குத் தெரியாத (கடவுள் போன்ற) விஷயங்களைப் பற்றிப் பேசுவதால் இவை அறிவால் ஆராய முடியாதவை. ஏதோ ஒரு நிலையில் நம்பியே ஆகவேண்டும். அப்படியே அபௌருஷேய அறிவு அப்பழுக்கில்லாதது என்றாலும் அது வார்த்தைகளால் வழங்கப்பட்டிருப்பதால் அவ்வார்த்தைகளின் உண்மையான பொருளை அறிந்து கொள்ள மொழியின் அர்த்தம், வாக்கிய அமைப்பு, இலக்கணம், சில வேளைகளின் கவிதை உத்திகள் யாவும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். இது எளிதல்ல. ஒரே புனித நூலைப் புரிந்து கொள்வதில் உள்ள பிணக்கினால் பல்வேறு மதங்கள் பல பிரிவுகளாக இன்றுவரை பிரிந்து கிடக்கின்றன.

இரண்டாவது, இந்நான்கு பிரமாணங்களும் தனித்து நின்று பொருள் தர இயலாதவை. கண்களால் காண்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் யாரோ ஒருவர் அப்பொருளைப் பற்றியோ அல்லது அப்பொருளைப் போன்ற வேறொரு பொருளைப் பற்றியோ சொல்லித் தந்திருக்க வேண்டும். காரண காரியங்களை நமக்கு வேறொருவர் விளக்கியிருக்க வேண்டும். அல்லது நாமே கண்களால் அவற்றை நேரடியாகக் கண்டிருக்க வேண்டும். நம்பத்தகுந்வர்கள் கூறுவதைச் சரியாகப் புரிந்து கொள்ள போதிய மொழியறிவு நமக்கு இருக்க வேண்டும். இதில் ஒன்றில் குறையிருந்தாலும் நாம் பெறப்போகும் அறிவு குறையுள்ளதாகி விடும்.

மூன்றாவதாக, இந்திய தத்துவ தரிசனங்கள் வேதங்களை பிரமாணங்களாக ஏற்றுக் கொண்டதற்குச் சரியான தர்க்கரீதியான காரணங்களை விளக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

சரி, இதற்கும் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் மனிதனால் உண்மையை அறிந்து கொள்ள முடியாது என்பது வருந்தற்குரியது. இது பின் நவீனத்துவ வாதத்தின் அடிப்படை கோஷம். உன்னால் எவ்வளவு முயன்றாலும் உண்மையை அறிய முடியாது.

எதையும் தீர விசாரித்து அறிந்து கொள்ளலாமே என்ற எதிர்வாதம் வரலாம். தீர விசாரிப்பது என்பது பல நேரங்களில் நாம் வைத்திருக்கும் கருத்துக்களுக்கு இசைவான கருத்துடைய மனிதர்களை தேடும் முயற்சிதான் என்பது என் யூகம். இது வெறும் confirmationதான், discovery of new knowledge அல்ல. அப்படியே தீர விசாரித்தாலும் நம்மிடமுள்ள அதே குறையுள்ள மற்ற மனிதர்களிடமிருந்து எப்படி தெளிவான ஐயமற்ற அறிவை எதிர்ப்பார்க்க முடியும்?

இத்தகைய சந்தர்ப்பங்களின் சார்த்தர் போன்றவர்கள் இருத்தல் மட்டும்தான் முக்கியம் அர்த்தம் அல்ல என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒன்றையும் சரியாக அறிந்து கொள்ள முடியாத பட்சத்தில் வெறும் இருத்தல் மட்டுமே சாத்தியம்.

- சித்துராஜ் பொன்ராஜ்
sithurajponraj134@gmail.com

Comments