தர்க்கம் வீண் வேலையா?

தர்க்க சாஸ்திரத்தைப் பற்றி எழுதுகிறீர்களே. இதையெல்லாம் யார் படிக்கப் போகிறார்கள். இது வீண் வேலையில்லையா என்று நண்பர் கேட்டார்.

அவன் என்மீது அக்கறையுள்ளவர். அக்கறையுள்ளவர்கள் இப்படித்தான் கேட்பார்கள்.

ஆனால் இது எனக்கு வீண் வேலையாகத் தோன்றவில்லை. சிறு வயதிலிருந்து பல வகையான தத்துவங்களைப் பற்றி படிப்பதும் சிந்திப்பதும் எனக்குப் பிடித்தமான வேலை. பல்கலைக் கழகத்தில் முதல் 4 வருடங்கள் இளங்கலை பட்டத்திற்கு இதையும் ஒரு முக்கிய பாடமாக எடுத்துப் படித்தேன்.

ஹெகலையும் ஸ்கோப்பன்ஹவரையும் படித்து விட்டு ஹா என்று வாய் பிளந்து அத்வைத நிலையில் அமர்ந்திருக்க என்னால் முடியும்.

பின்னொரு நாளில் வித்யாரண்யரின் பஞ்சதசி என்ற அத்வைத விளக்கங்களைப் படித்த போது அதே நிலை எனக்குச் சித்தித்தது.

யாரும் என் பதிவுகளைப் படிக்காவிட்டாலும் கூட இதைத்தான் செய்து கொண்டிருப்பேன்.

இரண்டாவதாக, திறந்த மனம் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டு நம்மில் பலர் தர்க்க ரீதியாக ஆரம்பத்திலிருந்து முடிவுவரை சிந்திப்பது எப்படி என்பதை மறந்துவிட்டோமோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. இப்போதிருக்கும் பலருக்கு அபிப்பிராயம் என்பது பல்வேறு இடங்களிலிருந்து பிய்த்து ஒட்டப்பட்ட துணுக்குகளின் தொகுப்பாகத்தான் இருக்கிறது. வெகு சிலருக்கு மட்டுமே சிந்தனைத் தெளிவும் எதைப் பற்றியும் ஒரு முழுமையான சித்தாந்தமும் லபித்திருக்கின்றன.

இதுவும் நான் இந்திய தர்க்க முறைகளைப் பற்றி எழுவதற்குக் காரணம். இந்திய தரிசனங்கள் சிந்தனையின் தீர்க்கத்தாலும் எதிர்வாதங்களாலும் புடம் போடப்பட்டவை. நாம் ஒழுங்காகச் சிந்திக்க அவை உதவக் கூடும்.

திறந்த மனம் என்பது காலியான மனம் அல்ல.

காலி இடங்களை இயற்கை வெறுக்கிறது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

திறந்தது என்று எண்ணி காலியாக வைத்திருக்கும் இடங்களில் குப்பைகள் சேர்வதுகூட சாத்தியமே.

- சித்துராஜ் பொன்ராஜ்

Comments