இந்திய தத்துவ தரிசனங்கள் – ஒரு விளக்கம்

நியாயமாகப் பார்த்தால் இந்த பதிவைத்தான் நான் முதலில் எழுதியிருக்க வேண்டும். தத்துவ தரிசனம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தும்போது நான் system of philosophy என்பதைக் குறிப்பிடுகிறேன்.

இந்திய தத்துவ மரபில் வேதங்களை உண்மை என்று ஏற்றுக் கொண்ட ஆஸ்திக தரிசனங்கள் நியாயம், வைசேசிகம், சாங்கியம், யோகம், மீமாம்சம், வேதாந்தம் என்று ஆறு உள்ளன. அதே போல் வேதங்களை ஏற்றுக் கொள்ளாத நாஸ்திக தரிசனங்கள் – பௌத்தம், சமணம் – போன்றவையும் உள்ளன.

இப்போதுள்ள சொல்வழக்கில் ஆத்திகன் என்றால் கடவுளை நம்புகிறவன் என்றும் நாத்திகன் என்றால் கடவுளை நம்பாதவன் என்றும் மாறியுள்ளது.  ஆனால் இந்திய தத்துவ தரிசனங்களைப் பொறுத்த வரை ஆத்திகன் என்பதற்கும் நாத்திகன் என்பதற்கும் கடவுள் நம்பிக்கை உரைகல் அல்ல. வேதத்தின் பிரமாணத்தை நம்புகிறவன் ஆத்திகன். நம்பாதவன் – புத்தரையே கடவுளாக்கி வணங்கினாலும் – நாத்திகன்.

ஆத்திக தத்துவ தரிசனத்தில் ஒன்றான பூர்வ மீமாம்ஸத்தில் கடவுள் நம்பிக்கை தேவையில்லை. அதை வேறொரு பதிவில் பார்ப்போம்.

சரி, அது என்ன தத்துவ தரிசனம்? தத்துவம் என்ற வார்த்தையின் அர்த்தம் “உண்மையின் ஒரு கூறு’ என்பதாகும். இந்திய தத்துவ தரிசனங்களின் படி மனிதன் அறியக்கூடிய முழுமையான உண்மை என்பது இத்தகைய பல்வேறு உண்மைக் கூறுகளின் ஒரு தொகுப்புத்தான்.  ஒரு மனிதன் பெறக்கூடிய முழுமையான அறிவு எத்தனை தத்துவக்கூறுகளால் ஆக்கப்பட்டிருக்கின்றது என்பதில் வெவ்வேறு தரிசனங்கள் வேறுபடுகின்றன.  வைசேசிகத்தில் உண்மை ஏழு பதார்த்தங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. சாங்கிய தரிசனத்தில் இருபத்தைந்து தத்துவங்கள், காஷ்மீர் சைவத்தில் முப்பத்திரண்டு.

பொதுவாகவே இத்தகைய தத்துவக்கூறுகள் ஐம்பூதங்களாலான உலகம், சைதன்யமுள்ள உயிர், அனைத்தையும் கட்டிக் காக்கும் ஈஸ்வரன் ஆகியவற்றைப் பற்றி பேசுபவை. சில வைஷ்ணவ சித்தாந்தங்களில் தத்துவம் என்பது கடவுளின் கூறுகளைப் பற்றி விவரிப்பவையாக உள்ளது.

ஆகையால் இந்திய தத்துவ ஞானம் என்பது இத்தகைய உண்மைக் கூறுகளின் தொகுப்பு. உலகத்தைப் பற்றியும், உயிரைப் பற்றியும், ஈஸ்வரனைப் பற்றியும் இத்தரிசனங்கள் கொண்டுள்ள தத்துவங்களின் அடிப்படையில் தரிசனங்களின் முடிவுகளும் அந்தந்த தத்துவ தரிசனங்களைப் பின்பற்றுவோரின் இலக்குகளும் வெகுவாக வேறுபடுகின்றன.

எல்லாம் ஒன்றுதான் என்று சொல்லக்கூடிய சமரசம் ஒரு வகையில் போலி வேதாந்தம்தான். இத்தத்துவ தரிசனங்கள் அதிமுக்கியமான வகைகளில் வேறுபடவில்லை என்றால் இந்திய தத்துவ மரபில் இத்தனை விளக்கவுரைகள், வாதப் பிரதிவாதங்கள் எழுந்திருக்க மாட்டா.

இத்தகைய உண்மைகள் யாவை, அவற்றை தெளிவாகவும் சந்தேகத்துக்கு இடமில்லாமலும் பெறுவது எப்படி என்று ஆராய்வதால் இந்திய தத்துவ தரிசனங்கள் systematic philosophyதான். இறையியல் அல்ல.

அது ஏன் தரிசனம்? இந்திய தத்துவத்தைப் பொறுத்தவரையில் பொதுவாக உண்மை என்பது அறிவாராய்ச்சியால் கண்டெடுக்கப்பட்டதாக என்றுமே சித்தரிக்கப்பட்டதில்லை. ஆத்திக தரிசனங்களில் உண்மை என்பது அமானுஷ்யமாக வெளியிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. வேதங்களை ஏற்காவிட்டாலும் பௌத்த தத்துவமும் சமண தத்துவமும் தத்தம் நிறுவனர்களின் நேரடி அமானுஷ்யமான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை.

ஆகவே இங்கே சொல்லப்படும் உண்மைகள் ஒரு சிலரின் அமானுஷ்யமான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டவை என்பதால் அவை ‘பார்க்கப்பட்டவை’ அல்லது ‘தரிசனங்கள்’.

அமானுஷ்யமாக வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பின்னாளில் உண்மைகள் விரிவாக்கப்பட்டு விவரிக்கப்பட்டிருக்கலாம். 

ஆனால் இந்திய மரபைப் பொறுத்தவரை தரிசனம் போகக்கூடிய எல்லைகள் வலுவாகவே வரையறுக்கப்பட்டிருக்கின்றன.  அப்படி பார்க்கும் போது இது இறையியலும்தான் என்று சொல்லலாமா?

- சித்துராஜ் பொன்ராஜ்

Comments