கவிதை தொகுதிகளை வாசிப்பது எப்படி?


கவிதை தொகுதிகளை  எப்படி வாசிப்பது என்று தெரிந்தவள் ஒருத்தி கேட்டாள். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஒவ்வொரு கவிதையாக வாசிப்பதா? அல்லது எனக்குப் பிடித்த கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாசிப்பதா?

கவிதைகளை ஒரே மூச்சில் வாசிப்பதா அல்லது நேரம் விட்டு நேரம்விட்டுக் கவிதைத் தொகுதியை ஒரு நாவலைப் போல வாசிப்பதா?

அவள் தெரிந்தவள்தான், தோழி இல்லை. அதனால் முடிந்தவரை உண்மையாகவே பதில் சொன்னேன்.

“கவிதை தொகுதியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை வாசிக்கவே வாசிக்காதே. அப்படி செய்தால் கவிதைத் தொகுதியை நாவலாக்கிய பாவத்தைச் செய்தவள் ஆகிவிடுவாய்.”

“அப்படியென்றால் எனக்குப் பிடித்த கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாசித்துவிடவா?”

“அப்படியும் செய்துவிடாதே. உனக்குப் பிடித்த கவிதைகளை மட்டும் நீ வாசித்தால் உனக்குக் காத்திரமான இலக்கிய வாசிப்பு இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.”

“பிறகு என்னதான் செய்வதாம்?”

“ஒரு கவிதை தொகுதியிலிருக்கும் மோசமான கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாசி. அதுதான் சரியாக வரும்.”

தெரிந்தவள் சற்றே தயங்கினாள்.

“தொகுதியில் உள்ள கவிதைகள் மொத்தமும் மோசமாக இருந்தால்...”

“கவலை விட்டது. தொகுப்பை ஆரம்பத்திலிருந்து இறுதிவரைக்கும் நீ தாராளமாக வாசித்துவிடலாம்.”

“இப்போதுதானே கவிதை தொகுதியை முதலிலிருந்து இறுதிவரைக்கும் வாசிக்கக் கூடாது என்று சொன்னாய்?”.

“அது நல்ல கவிதைகளுக்கு மட்டும்தான். மோசமான கவிதைகளுக்கு எல்லா விதமான விதிகளிலிருந்தும் விதிவிலக்கு உண்டு.”

Comments

  1. கவிதை வாசிப்பது எப்படி

    ReplyDelete

Post a Comment

வணக்கம். உங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன். இங்கும் பதியலாம். sithurajponraj134@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.

Popular Posts