இலக்கற்ற கதாபாத்திரங்கள் - செக்காவ் பற்றி

நண்பர் ஒருவர் என்னிடம் பெற்றுக்கொன்ட ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்காவ்வின் சிறுகதைத் தொகுதியை வாசித்துவிட்டுத் திருப்பித் தந்தார். கதைகள் எப்படி என்று கேட்டேன். உதட்டைப் பிதுக்கினார்.

எல்லாம் தோற்றுப்போனவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், பெண்டாட்டி சரியில்லாதவர்கள் மற்றும் குடிக்காரச் சூதாட்டக் கதாபாத்திரங்களின் கதைகள் என்று குறைபட்டுக் கொண்டார்.

கதாநாயகர்களுக்கு – அவை எதிர்மறையான குணாதிசயங்களாக இருந்தாலும் - ஏதேனும் சிறப்பு இயல்புகள் இருக்க வேண்டாமா என்றார்.
கம்ப ராமாயணத்தைப் சுட்டிக்காட்டி பாருங்கள் தமிழ் இலக்கியத்தில் ராவணனுக்குக்கூட ரசிக்கத் தகுந்த பண்புகள் உள்ளன.

நண்பர் தமிழில் நிறைய வாசிக்கக் கூடியவர். அவர் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளத் தக்கவை.

உண்மைதான், செக்காவின் கதாமாந்தர்கள் பெரும்பாலும் முதுகெலும்பு இல்லாதவர்களாக, தோல்வியுற்றவர்களாக, வாழ்க்கையில் இலக்கற்றவர்களாகவே, உள்ளார்கள். இத்தகைய பாத்திரங்கள் செக்காவில் மட்டுமல்ல.  தஸ்தாவியஸ்கி, டால்ஸ்டாய், லெர்மொண்டோவ் போன்ற மற்ற ரஷ்ய எழுத்தாளர்களின் கதைகளிலும் அதிகமாகக் காணலாம்.

கதைகள் தெளிவான இலக்குடையவையாக, அறத்தைச் சுட்டிக்காட்டுபவையாக இருக்க வேண்டுமா என்ற கேள்விக்குள் நாம் இப்போது போகத் தேவையில்லை. பெரும்பாலும் இப்போது யாரும் அறத்தை வெளிப்படையாகப் போதிக்கும் கதைகளை விரும்புவதும் இல்லை.

ஆயினும் குறைந்தபட்சம் கதையில் வரும் பாத்திரங்கள் தெளிவான வார்ப்பாக வாசகர்களுக்குத் தெளிவான குணச்சித்திரங்களை வழங்கும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும் என்று என் நண்பரைப் போன்ற வாசகர்கள் விரும்பக்கூடும்.  

முதுகெலும்பில்லாமல் தரையைச் சூடாக்கிக் கொண்டு இருக்கும் கதாபாத்திரங்களை பெரும்பாலோர் விரும்புவதில்லை. 

சிலர் முரட்டுப் பிடிவாதமாக செக்காவின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் அறத்திலிருந்து வழுவியவை என்றும் அவர்களது தனிப்பட்ட குறைப்பாடுகளையும் அவற்றின் விளைவுகளையும் சுட்டிக் காட்டத்தான் செக்காவ் அந்தந்தக்  கதா பாத்திரங்களைப் படைத்தார் என்றும் சொல்ல முயல்வார்கள்.

ஆனால் அறம் தவறியவர்களுக்குத் தெளிவான தண்டனைகள் செக்காவின் கதைகளில் பெரும்பாலும் கிடையாது.

”வெட்டுக்கிளி” கதையில் தன் மனைவியின் நடத்தைகெட்டதனத்தால் ஓசிப்தான் நோய்வாய்ப்படுகிறான். “வார்டு நெ, 6”, “கறுப்புத் துறவி”, “என் வாழ்க்கை” என்ற கதைகளில் வரும் கதாமாந்தர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை அவர்கள் அறத்திலிருந்து தவறியதால் ஏற்பட்ட வேதனைகள் என்று சித்தரிக்க முடியாது.

இது போன்ற கதைகளில் வருபவர்கள் அவர்களின் செயல்களாலேயே அவர்கள் அழிகிறார்கள் என்பது உண்மை என்றாலும், இந்த அழிவு பிரபஞ்சத்தை வழிநடத்தும் பேரறிவு ஒன்றினால் தரப்பட்ட தண்டனை என்று நாம் சொல்லிவிட முடியாது.

சொல்லப் போனால் கறுப்புத் துறவி என்னும் கதையில் வரும் கோவ்ரின் மனநோய்க்கு ஆளாகி, தன் மணவாழ்க்கையைச் சிதைத்துக் கொள்வதும், தன் மாமனாரைக் கொலை செய்வதும், இகோரின் ஆசை பழத்தோட்டத்தை சின்னாபின்னமாக்குவதும் அவன் குற்றம் என்றே கூட சொல்ல முடியாது.

கோவ்ரினின் செயல்கள் நிச்சயமாக அவனையும் அவனைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கின்றன. ஆனால் கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தால் இதற்கெல்லாம் எந்த அளவுக்கு கோவ்ரின் பொறுப்பாளி என்ற கேள்வி எழுகிறது. இன்னும் தள்ளி நின்று பார்க்கும்போது ‘இது எதேச்சையாய் இப்படி நடந்தது’ என்று சொல்ல முடியுமே அன்றி இந்தக் கதையில் விவரிக்கப்படும் சம்பவங்களுக்கு ஆழ்ந்த பொருளையோ அறம் சார்ந்த அர்த்தங்களையோ நம்மால் நிர்ணயிக்க இயலாது.

வேண்டுமென்றால் சூழ்நிலைகளால் இது இது இப்படி இப்படி நடந்தது என்று சொல்லலாம். அவ்வளவுதான். இந்த சம்பவங்கள் நடப்பதற்கு வேறெந்த விசேஷ காரணமுமில்லை. இது இப்படி நடக்காமல் வேறெப்படி வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

ஒரு கதையைப் படித்துவிட்டு இந்தக் கதாபாத்திரம் இப்படித்தான் நடந்திருக்க வேண்டும், அல்லது இப்படி நடந்திருக்க முடியாது என்று சொல்லும்போது நாம் மனிதர்களின் செயல்களைத் தர்க்கத்திற்கு உட்பட்டவைகளாகக் கற்பிதம் செய்து கொண்டு நம் எதிர்ப்பார்ப்புக்களை மிக எளிமையானவைகளாக ஆக்கிக் கொள்கிறோம். அல்லது இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்பதற்குரிய காரணங்கள் தரப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

ஆனால் உண்மையில் மனித செயல்கள் இப்படித்தான் நடக்கின்றனவா? தீய பழக்கத்தால் சுற்றியிருப்பவர்கள் அழிவதைப் பார்த்த பிறகும் ஒருவர் தொடர்ந்து அதே தீய செயல்களில் ஈடுபடுகிறார்.

தீராத பல் வலியால் அவதியுறும் மகா சாது என்று பெயரெடுத்த ஒருவன் தன் குழந்தையின் அழுகையால் எரிச்சலாகி அதை ஈவிரக்கமின்றி கொலை செய்கிறான். அறத்தைப் போதிப்பதையே வேலையாகக் கொண்டிருப்பவர்கள் அறம் வழுவி காரியங்கள் செய்கிறார்கள்.

இவையெல்லாம் மனிதன் தன் சொந்த இச்சையினால் செய்யும் காரியங்கள் என்று நாம் வாதிடலாம். ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு மனிதன் ஏன் அப்படி நடந்தான் என்பது நமக்குத் தெரியாது. தெரியவும் போவதில்லை. ஏனென்றால் அவனுக்கே தன் செயல்களின் காரணங்கள் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம்.

கதையிலோ வாழ்க்கையிலோ ஏன் இப்படி நடந்தது என்ற கேள்விக்கு ஒரே சரியான பதில்: தெரியாது, ஆனால் இப்படித்தான் நடந்தது என்பதுதான்.

மனிதனின் செயல்களுக்கு காரணங்களை – காரியங்களை – விளைவுகளை நேர்க்கோட்டில் வைத்துத் தர்க்கரீதியாகப் பொருள் கொடுக்க முடியாது. இதைத்தான் செக்காவின் கதைகள் காட்டுகின்றன.

 அப்படியென்றால் கதைகளில் இப்படிப்பட்ட இலக்கில்லாத கதாபாத்திரங்களை மட்டுமே சித்தரிக்க வேண்டும் என்பது என் வாதமா? அப்படி அல்ல.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் ஒவ்வொரு செயலுக்கும் அசைக்கமுடியாத காரணங்கள் உள்ளதுபோல காட்டி கதைகளை எழுதும்போது அது வாசகரைச் சிந்திக்க விடாமல் கொஞ்சம் சோம்பேறியாக்கி விடுகிறதோ என்பது என் சந்தேகம்.

அறிந்து கொள்ள முடியாத பல்வேறு உந்துதல்களால் வழிநடத்தப்படும் கதாபாத்திரங்களின் கதைகளைப் படிக்கும்போது இச்சூழ்நிலையில் நான் என்ன செய்திருப்பேன் என்று வாசகனுக்கு யோசிக்கத் தோன்றலாம்.

ஒப்பிட்டுப் பார்க்கையில் எல்லா செயல்களுக்கும் சரியான காரணங்கள் கூறி விளக்கப்பட்டிருக்கும் கதைகளில் சிந்திப்பதற்கு எதுவும் இல்லை. அது வெறும் சம்பவ அடுக்கே.

அசாதரணான ராமன் பத்துத் தலைகளையுடைய அசாதரணனான ராவணனைக் கொன்றான் என்பது ஒரு வகையில் ரசிக்கக் கூடியதுதான்.

ஆனால் ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் ஒரு சாதாரண மனிதன் எப்படி நடந்து கொள்வான் என்பதிலும் சாதாரணமான சூழ்நிலையில் அசாதரணமான மனிதன் எப்படி நடந்து கொள்வான் என்பதிலும் சுவாரஸ்யம் இருக்கிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

- சித்துராஜ் பொன்ராஜ்

            

Comments