தர்க்கப் படுகுழிகளும் அண்டை வீட்டுக் கிழவன் சாவும்


கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை அது ஏற்படுத்தும் விளைவுகளின் வழியாக நிரூபிக்க நியாய சாஸ்திரம் ஐந்து படிகளைச் சிபாரிசு செய்கிறது.


ஆனால் அடிப்படையில் இதனை மூன்று படிகளாகக் கூட நாம் எளிமைப்படுத்திக் கொள்ளலாம்.


(1)  மலையின் உச்சியிலிருந்து நிறைய புகை வருகிறது.
(2) புகை இருக்கும்போது நிச்சயம் நெருப்பும் இருப்பதை நான் சமையலறையில் பார்த்திருக்கிறேன் 
(3)  அதனால் மலைமீது நெருப்புப் பிடித்திருக்கிறது


இந்த தர்க்க முறை நிச்சயமாக தெரியாத விஷயத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நியாய சாஸ்திரம் சொல்கிறது. கண்ணுக்கு எதிரே தெரியும் விஷயங்களுக்கு இந்த விசாரணை முறை தேவையில்லை.


உதாரணத்துக்கு, எல்லா இடத்திலும் வெளிச்சமாக இருக்கிறது. சூரியன் இருக்கும் பகல் நேரத்தில் எல்லா இடத்திலும் வெளிச்சமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனால் இப்போது சூரியன் உதித்திருக்கிறது என்று சொல்வது வீண் வேலை. இந்த தர்க்கம் செய்யும் நேரத்தில் தலையை ஜன்னலுக்கு வெளியே நீட்டிப் பகலா இல்லையா என்று நேரடியாகப் பார்த்துவிட்டுப் போய்விடலாம்.


இதே தர்க்க முறையைக் கடவுளின் இருப்பை நிரூபிக்கவும் சில நியாயவதிகள் பயன்படுத்தியுள்ளார்கள். 

(1)  இந்த பிரபஞ்சம் மிக ஒழுங்காக நடந்து கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு வானத்துக் கோள்கள் பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் தம் விண்வெளிப் பாதைகளிலிருந்து இம்மியளவும் பிசகாமல் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமல் போய்க் கொண்டிருக்கின்றன [இது வாதத்துக்காகதான். கோள்களின் விண்வெளிப் பாதைகளில் சிறு சிறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக விஞ்ஞானம் சொல்கிறது]

(2)  ஒரு இடத்தில் எல்லா விஷயங்களும் சரியாக நடக்க வேண்டுமென்றால் அந்த இடத்தில் நடக்கும் செயல்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் ஒருவர் தேவை. ஒரு நாட்டில் நல்ல பலமான, அறிவுள்ள, மக்கள் மேல் அக்கறையுள்ள ஆட்சியாளர் இருக்கும்போது அந்நாட்டில் உள்ள எல்லா காரியங்களும் சிறப்பாக நடைபெறுவதை நான் பார்த்திருக்கிறேன்.

(3)  அதனால் இந்த பிரபஞ்சத்துக்கும் பலமுள்ள, அறிவுள்ள, ஜீவராசிகளின் மீது அக்கறையுள்ள ஆட்சியாளர் இருக்க வேண்டும்.


      தமிழில் நாம் ஆட்சியாளர் என்பதை வடமொழியில் “ஈஸ்வரன்” என்பார்கள். ஈஸ்வரன் என்பது தலையில் கங்கையையும் பிறை நிலவையும் வைத்துக் கொண்டிருப்பவரைக் குறிக்கும் வார்த்தை அல்ல. இந்திய தத்துவ நூல்களில் ஈஸ்வரன் என்பது பிரபஞ்சத்தை ஆட்சி செய்பவரைக் குறிக்கப் பயன்படும் ‘டெக்னிகல்’ வார்த்தை.  ”ஈஸ்” அதாவது கட்டிக்காத்தல், கட்டுப்படுத்துதல் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது.


இந்த தர்க்க முறையை உற்றுக் கவனிக்கும் போது சரியான விளைவோடு (புகை) சரியான பொது விதியைப் (நெருப்பில்லாமல் புகையாது) பொருத்துவதில்தான் இந்த தர்க்க முறையின் வெற்றியும் தோல்வியும் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள்.


தாங்கள் படைத்துத்தந்த இந்த தர்க்க முறையை தகர்க்க ஐந்து வழிகள் இருப்பதாக நியாயவாதிகளே குறிப்பிடுகிறார்கள்:


(1)  விளைவு நாம் அனுமானிக்கும் விஷயத்துக்கு மட்டுமே சொந்தமாக இல்லாதபோது. புகையும் நெருப்பும் ஒன்றுக்கு ஒன்று நீங்காத தொடர்புடையவை. புகையில்லாத நெருப்பை நாம் எண்ணிப் பார்க்க முடியாது. அதனால் புகையிருக்கும் இடத்தில் நெருப்பிருக்கும் என்பது உறுதியாகிறது. ஆனால் நாம் வேலையை விட்டு வீடு திரும்பும்போது நம் அடுக்குமாடி கட்டடத்தின் கீழ்த்தளத்தில் ஆம்புலன்ஸ் வண்டி நிற்பதைப் பார்த்துவிட்டு நம் அண்டைவீட்டுக் கிழவன் இறந்துவிட்டதாக நாம் முடிவு செய்துவிட முடியாது. அண்டை வீட்டுக் கிழவர்கள் மண்டையைப் போடும் போது ஆம்புலன்ஸ்கள் வருவது இயற்கைதான் என்றாலும், அண்டை வீட்டுக் கிழவர்கள் இறக்கும்போது மட்டுமே ஆம்புலன்ஸ் வரும் என்பது விதியல்ல. அது வேறு பல காரணங்களுக்காக வந்திருக்கலாம்.


(2)  விளைவு நான் அனுமானிக்கும் விஷயத்துக்கு நேர்மாறாக உள்ளபோது. உதாரணத்துக்கு, ஈஸ்வரன் கெட்டவர்களுக்குத் தேவையான உணவையும், வீட்டு வசதியையும் இன்ன பிற நன்மைகளையும் செய்து தருவதால் அவர் கெட்டவர் என்று ஒருவர் தீர்மானிக்கலாம் (கெட்டவர்களுக்குக் கெட்டவர்கள் உதவுவார்கள் என்ற பொது விதி). ஆனால் இது சரியான புரிதல் அல்ல. ஈஸ்வரன் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்குமே பாரபட்சமில்லாமல் நல்ல விஷயங்களை அனுமதிப்பது அவனது வேண்டுதல் வேண்டாமை இல்லாத தன்மையையே காட்டுகிறது. சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் இந்த அவதானிப்பின்படி ஈஸ்வரன் யாரையும் வெறுக்காத மிகுந்த நல்லவனே அன்றி கெட்டவன் அல்ல.

(3)  விளைவுக்கும் நாம் அனுமானிக்கும் விஷயத்துக்கும் சம்பந்தமே இல்லாதது. ஒருத்தர் சிங்கப்பூர் விமான நிலையத்தில் நீரூற்று ஒன்றைப் பார்த்துவிட்டு பாரிஸுக்கு விமானம் ஏறுகிறார். பாரிஸ் விமான நிலையத்தில் அவர் இறங்கியவுடன் தன் மனைவியிடம் “பார், இந்த விமான நிலையத்திலும் நீரூற்று இருக்கிறது” என்று சொன்னால் அது நியாயமா? விமான நிலையத்தில் நீரூற்று இருக்க வேண்டும் என்பது பொது விதி அல்ல.

(4)  ம் அனுமானத்தைப் கண்ணுக்கெதிரே தெரியும் புதிய செய்திகள் மறுக்கும்போது. புகையிருந்தால் நெருப்பிருக்கும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது விதி. அதன் அடிப்படையில் மலையின் உச்சியில் நெருப்புப் பிடித்துள்ளது என்று நாம் முடிவு செய்துவிட்டோம். ஆனால் நெருப்பை அணைக்க மலைமீது ஏறிப் போனவர்கள் மலையின் உச்சியில் கரும் புகையைக் கக்கும் குளம் ஒன்றின் காணொளியை எடுத்து வந்து நம்மிடம் காட்டுகிறார்கள். காணொளி போலியாக இல்லாத பட்சத்தில் நாம் நம் கருத்துகளை மாற்றியே ஆகவேண்டும்.

(5)  நாம் வைக்கும் வாதத்துக்கு ஈடான எதிர்வாதத்தை வேறொருவர் வைக்கும் போது. நாம் பிரபஞ்சம் ஒழுங்காக நடப்பதால் ஈஸ்வரன் உண்டு என்று சொல்கிறோம். அடுத்தவர் உலகத்தில் போர்கள், வன்முறை மற்றும் மற்ற தீமைகள் மலிந்திருப்பதால் ஆண்டவனே இல்லை என்கிறார் (பொதுவிதி: அப்பா அம்மா வீட்டில் இல்லாதபோது குழந்தைகள் அட்டகாசம் செய்வார்கள் அல்லது அப்பா அம்மாவே இல்லாத இடத்தில் குழந்தைகள் அட்டகாசம்தான் செய்வார்கள்). இந்த எதிர்வாதத்தை வாதத்தால் வெல்ல முடியாது. இரண்டும் சரிசமமானவை என்று தர்க்க சாஸ்திரம் சொல்கிறது. மேலும் தத்துவ ஆராய்ச்சி மூலம்தான் இதற்கு விடை சொல்ல முடியும்.


நம் வாதத்தைத் தகர்க்கக் கூடிய இத்தகைய தர்க்கப் படுகுழிகளைத் தெரிந்து கொள்வதால் கோடி நன்மை உண்டு.


குறிப்பாக நாம் சொல்லும் வார்த்தைகளைக் கணவரோ மனைவியோ குழந்தைகளோ காது கொடுத்துக் கேட்கவில்லை. அதனால் அவர்களுக்கு நம்மீது அன்பு இல்லை என்று முடிவு செய்யும் முன்னால் காது கொடுத்துக் கேட்காததற்கு அன்பு இல்லாததது மட்டுமே காரணம் அல்ல என்பதை நாம் அவதானித்துக் கொள்வோம். காது கொடுத்துக் கேட்காததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதில் அன்பில்லாதது ஒரு சாத்தியம் மட்டுமே.

காது கொடுத்துக் கேட்காதவர்கள் எல்லோரும் அன்பில்லாதவர்கள் என்பது பொதுவிதி ஆகாது. 

- சித்துராஜ் பொன்ராஜ்



PC : http://www.harekrsna.com/philosophy/vada/debate.htm

Comments