மந்திரம்: கடிதமும் கேள்வியும்

வணக்கம். மந்திரத்தைப் பற்றிய உங்கள் பதிவைப் படித்தேன். வடமொழியில் மட்டும்தான் மந்திரம் உண்டா? உங்களைப் போன்றவர்கள் தமிழ் மொழியை மறந்துவிட்டு வடமொழிக்குக் கொடி பிடிப்பது வருத்தமாக இருக்கிறது. விளக்கம் வருமா?

கி. ராமச்சந்திரன்

வணக்கம். உங்கள் கருத்துக்கு நன்றி. என் பதிவில் நான் மந்திர சாஸ்திரம் என்ற பெயரில் பேசியது ஒலிச்சேர்க்கைகளின் விஞ்ஞானம்.


குறிப்பிட்ட வகை ஓசைகளுக்கு குறிப்பிட்ட வகை பலன்கள் உள்ளன என்பது என் கருத்து. அத்தகைய ஓசைகளைத் தொடர்ந்து கேட்டாலோ சொன்னாலோ கேட்பவரின் சொல்பவரின் வாழ்க்கையிலும் எண்ணத்திலும் செயல்களிலும் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும் என்பதைத்தான் மந்திர சாஸ்திரம் சொல்வதாக நான் கருதுகிறேன்.

அதை விட்டு விட்டு இந்த பாஷையில் சொன்னால்தான் மந்திரத்துக்குப் பலன் உண்டு என்பதெல்லாம் மந்திரங்களை அலாவுதீன் விளக்குகளாகவும், மந்திரத்திற்குரிய தேவதைகளை வரம் தரும் பூதங்களாகவும் மாற்றும் செயல் என்று முன்னமே எழுதிவிட்டேன்.

இந்த ஓசை விஞ்ஞானம் எல்லா மொழிகளுக்கும் பொதுவானது. எல்லா மொழிகளிலும் உற்சாகமான செய்திகளை  ஒருவகை வேகமான நடையில்தான் சொல்வார்கள். யாரும் இழுத்து இழுத்து வெற்றிச் செய்தியைச் சொல்வதில்லை. ‘கண்டேன் சீதையை' என்றுதான் அனுமன் சொன்னான். “அதாவது, நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நான் இலங்கைக்குப் போய்...” என்று இழுக்கவில்லை.

எல்லா மொழிகளிலும் போருக்குப் போகிறவன் நன்றாகக் கத்திப் பேசுவான். காதலியிடம் பேசுபவன் சிருங்காரமாகவும் இனிமையான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவான்.

இதெல்லாம் சொல்லும் அல்லது வேண்டும் பொருளோடு ஒசைநயமும் எப்படி இயைந்து வருகின்றது என்பதற்கான உதாரணங்கள்.

ஆங்கிலத்தில் D என்ற எழுத்தில் தொடங்கும் defeat, depressed, dreary, death போன்ற வார்த்தைகளை ஆராய்ந்து பாருங்கள். அந்த எழுத்தின் ஓசை ‘கனத்திற்கு' ஏற்ப அவை உற்சாகமான பொருளைத் தருகின்றனவா அல்லது எதிர்மறையாகவே ஒலிக்கின்றனவா?

ஒவ்வொரு மொழியிலும் இத்தகைய ஓசைகளும் அவற்றிற்கு உரிய விளைவுகளும் உண்டு என்பதுதான் நான் சொல்லும் மந்திர சாஸ்திரம்.

தமிழ் மொழியில் இந்த ஓசை விஞ்ஞானம் ஏன் இல்லாமல் இல்லை?

தன் தம்பி அறம் வைத்துப் பாடிய நந்திக் கலம்பகத்தைக் கேட்டதாலேயே மூன்றாம் நந்தி வர்மன் மாண்டான் என்ற செய்தி தமிழில் உண்டு. ‘அறம் விழும்' எழுத்துக்களையோ சொற்களையோ அமைத்துப் பாடப்படும் பாடல்கள்
தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தமிழர்களின் மிகப் பழைய நம்பிக்கை.

பழைய தமிழ்ப் புலவர்கள் தம் செய்யுள்களில் தம்மையும் அறியாமல் ‘அறம் விழும்' சொற்கள் அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.

இதற்கு நேரெதிராக ‘மந்திரமாவது நீறு' பதிகம் பாடி திருஞானசம்பந்தர் பாண்டிய மன்னனின் நோயை தீர்த்ததாக வரலாறு உண்டு. அருணகிரிநாதர் “தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையும்” என்ற திருப்புகழ் பாடி முருகனின் தரிசனம் பெற்றார்.

தேவராய சுவாமிகளின் கந்தர் சஷ்டி கவசம் இன்றும் பலரால் மந்திர நூலாகவே பாராயணம் செய்யப்படுகிறது.

இப்பாடல்களின் ஓசையையும் சத்த ஒழுங்கையும் ஆராய்ந்தீர்கள் என்றால் நான் கூற வரும் மந்திர சாஸ்திரம் உங்களுக்கு விளங்கும்.

ஓசை மொழிக்கு அப்பாற்பட்டது. ஓசையை மொழியாக நாம் ஒழுங்கு படுத்திக் கொண்டோம், அவ்வளவே.

அந்த ஓசைகளைக் குறிப்பிட்ட வகைகளில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளையும் தீமைகளையும் அறிந்தவர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள்.

பதிவுகள் தொடரும். உங்கள் கடிதங்களை மிகவும் எதிர்ப்பார்க்கிறேன்.

சித்துராஜ் பொன்ராஜ்

Comments

  1. இலங்கை ஜெயராஜ் அவர்கள் சொல்லக்கேட்டது: திருமண வீட்டில் தேவாரம் பாடுகையில் ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்....’ என்று பாடியபோது, ‘நல்ல பாடல்தான்.... ஆனால் மனை டீல் அமங்கலமாக “மண்” என்று ஆரம்பிக்கக்கூடாது’ என்றார்களாம்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான தகவல். நன்றி!

      Delete
  2. /மண வீட்டில்/

    ReplyDelete

Post a Comment

வணக்கம். உங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன். இங்கும் பதியலாம். sithurajponraj134@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.