சிறுகதையின் நீளம் எவ்வளவு?

நண்பர் ஒருவர். பகுதிநேர எழுத்தாளர். அதாவது அவருக்குக் குறும்படங்களிலும் புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் அதிகம். மனதிற்குத் தோன்றும்போதோ உள்ளூர், வெளியூர் இலக்கியச் சூழலில்மீது தாங்கொணாத கோபம் ஏற்படும் போதோ கவிதையோ கதையோ எழுதி நண்பர்களுக்கு அனுப்பிவைப்பார்.

அந்த வகையில் நல்ல இலக்கிய ரசிகர்.

இன்று மாலை தொலைபேசியில் அழைத்து மிகவும் வருத்தப்பட்டார்.

“கதைகளின் நீளம் குறைந்து கொண்டே வருகின்றது. 500-600 வார்த்தைகளுக்குள்ளாகவே கதைகளை முடித்து விடுகிறார்கள்.”

நான் சராசரியாக 1500-1800 வார்த்தைகளில் கதை எழுதுவேன். இதில் பெருமைப்பட தனிப்பட்ட எந்த காரணமும் இல்லாததால் நான் எதுவும் பேசாமல் இருந்தேன்.

இடைப்பட்ட நேரத்தில் நண்பரின் ஆதங்கம் தெளிவாக எனக்குப் புலனாகும் வகையில் அவர் உச் கொட்டினார். பின்பு கனைத்தார். கடைசியாக உச் கொட்டிக்கொண்டே கனைத்தார். நான் தொடர்ந்து மவுனமாகவே இருந்தேன்.

“500-600 வார்த்தைகள் உள்ள கதைகளை எப்படி கதைகள் என்று ஏற்றுக் கொள்வது?”


நண்பர் விடாக்கண்டர். மீண்டும் என்னை வம்புக்கிழுத்தார்.

“எத்தனை வார்த்தைகள் இருந்தால் கதை என்று ஒப்புக் கொள்வீர்கள்?” என்று கேட்டேன்.

“தெரியவில்லை. ஆனால் கதை என்று இருந்தால் அது மனதுக்குத் திருப்தியாக இருக்க வேண்டாமா?”

“நீளம்தான் மனத்திருப்திக்கு வரையறையா? அப்படியென்றால் கொடுத்த காசுக்கு – குறைந்த விலையில் அதிக லாபம் என்ற போக்கில் உங்கள் வாதம் உள்ளதே.”

Bang for the buck.

“இல்லை. இல்லவே இல்லை. ஆனால் கதையை ஒழுங்காகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட நீளத்தில் இருக்க வேண்டும்.”

தன் வாதத்துக்கு ஆதாரமாக தான் படித்த புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளின் ஒரு சிறு பட்டியல் தந்தார். மனிதர் ஒவ்வொரு கதையிலுள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை எண்ணி வைத்திருக்கிறாரே என்று வியந்தேன்.

“எத்தனை வார்த்தைகள் இருந்தால்தான் அதை நல்ல கதை என்று சொல்வீர்கள்?”

“அதுவும் சொல்லமுடியாது. ஆனால் சராசரி நீளத்துக்குக் குறைவாக இருப்பதைக் கதை என்று ஒப்புக் கொள்ள முடியாது. வேறு எதாவது பெயரில் அழைத்துக் கொள்ளலாம்” என்று இழுத்தார்.

இந்த வாதத்தை வேறொரு சூழ்நிலையில் கேட்டிருக்கிறேன். யாப்பில்லாமல் எது வேண்டும் என்றாலும் எழுதிக் கொள்ளட்டும். ஆனால் அதை கவிதை என்று சொல்ல வேண்டாம். உரைவீச்சு என்று சொல்லுங்கள் என்ற வாதம்.

“சரி சராசரி நீளம் என்ன என்பதையாவது சொல்லுங்கள்.”

“நான் எழுதும் பத்திரிகைகளில் 1200-1500 வார்த்தைகள் வரை அனுமதிக்கிறார்கள்.”

எனக்கு நன்கு உண்ட மயக்கம்போல் ஏதோ ஒன்று ஏற்பட்டது. புரியாத புதிர்கள் விடுபடும்போது எனக்கு இத்தகைய உணர்ச்சி ஏற்படுவது வழக்கம்.

பல மேற்கத்திய எழுத்தாளர்கள் கதைகளின் நீளத்தைக் குறைக்க ஆரம்பித்துள்ளார்கள். சிலர் தற்கால வாசகர்களின் ரசனையைக் கருதி கதைகளுக்கு நடுநடுவே படங்கள், கேலிச்சித்திரங்கள் என்று தொடங்கி கதையில் வரும் சம்பவங்களுக்குத் தொடர்புடைய ரயில் பயணச்சீட்டு என்றெல்லாம் சேர்க்க தொடங்கியுள்ளார்கள்.

படங்களும் குறைந்த வார்த்தைகளும் உடைய முகநூல் டைம்லைன்களைப் பார்த்துப் பழகிப் போன வாசகர்களுக்கு இத்தகைய நீளம் குறைந்த, பல்வேறு விதங்களில் சொல்லக் கூடிய கதைகள்தாம் சுவையாக இருக்கும் என்பது அவர்களது வாதம்.

இத்தாலோ கால்வினோ இத்தகைய கதைகளுக்கு raccontini என்று பெயர் கொடுத்தார். Racconti என்றால் இத்தாலிய மொழியில் கதைகள் என்று அர்த்தம். Raccontini என்றால் குட்டிக் கதைகள்.

டிவிட்டரில் ஆறு வார்த்தை கதைகள் ஹேஷ்டேக்கோடு உலா வருகின்றன.

இப்போதுள்ள சிறுகதையின் நீளம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நகரத்தில் வாழும் ரயில் பயணிகள் வேலைக்கு போக எடுத்துக் கொள்ளும் நேரத்திற்குள் படிக்கக் கூடிய வார்த்தைக் கணக்கை ஆதாரமாகக் கொண்டது என்று செய்தி ஒன்று உலவுகிறது.

இது நகரத்தில் ஏற்பட்ட புதுத் தொன்மக் கதை (urban legend)யாகக் கூட இருக்கலாம்.

ஆனால் வாசகரின் சௌகரியம்தான் கதையின் நீளத்தை நிர்ணயித்தது என்பது இதன் உட்பொருள்.

இன்றைய காலத்தில் மின் ஊடகங்கள் பல்கிப் பெருக வாசகர்களின் எதிர்ப்பார்ப்பும் மாறி வந்திருக்கிறது என்பதும் ஒரு வகையில் உண்மைதான்.

“நீளமான கதைகளை எழுதக்கூடாது என்பதல்ல. கதையின் முக்கிய கருத்தைக் கொண்டு செல்ல 500-600 வார்த்தைகள் போதுமென்றால் அந்த நீளத்திலேயே எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. நானும் கொஞ்ச நாளாக 800 வார்த்தைகள் உள்ள கதைகளை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றேன்.

“வாசகர்கள் என்ன முட்டாள்களா?” என்று நண்பர் கொதித்தார்.

”இல்லை எழுத்தாளர் சுதந்திரம்…” என்று புழக்கத்தில் இல்லாததை எல்லாம் சொல்லி சூழ்நிலையில் நகைச்சுவையைப் புகுத்த முயன்றேன்.

அடுத்த முனையில் நண்பர் தலையை வேகமாக ஆட்டியிருக்கக் கூடும். தொலைபேசி என்பதால் எனக்குத் தெரியவில்லை.

“உங்களை எல்லாம் திருத்த முடியாது.” என்று சாபம் தரும் பாணியில் சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்தார்.

இந்த வாரத்திற்குள் பரிசீலனைக்குக் கதை கேட்டிருக்கிறார்கள். நீளம் குறைந்த கதையை அனுப்பிப் பார்க்க வேண்டும், என்னதான் சொல்கிறார்கள் என்று.



- சித்துராஜ் பொன்ராஜ்

Comments