வாய்ச்சண்டை

அதிகமான கேள்விகள் கேட்பது அன்றாட வாழ்க்கையிலும் சரி, இப்போதைய இலக்கியச் சூழலிலும் சரி சுமூகமான உறவுகளுக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாகக் கருதப்படக் கூடிய சூழ்நிலை சில இடங்களில் உருவாகி இருக்கிறது.

ஆனால் தத்துவ ஆராய்ச்சியில் கேள்விகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.

நாம் அறிந்திருக்கும் தகவல்களும் கொண்டிருக்கும் அபிப்பிராயங்களும் அறிவுப்பூர்வமானவைதானா என்று அறிந்து கொள்ள கேள்விகள் உதவுகின்றன.

உதாரணத்திற்கு, நான் கையில் வைத்திருக்கும் புத்தகம் உலகத்திலேயே மிகச் சிறந்த புனைவுக் கதை என்று நம்புகிறேன். இது எனது அபிப்பிராயம்தான். ஆனால் இந்த கருத்து ஏற்றுக் கொள்ளத் தக்கதா உண்மையானதா என்று அறிந்து கொள்ள கேள்விகள் அவசியமாகின்றன. குறிப்பாக, “சிறந்த புத்தகம்” என்பதற்கான இலக்கணம் என்ன, “உலகத்திலேயே” என்பதற்கு என்ன வரையறை என்ற ரீதியில் கேள்விகள் நீளலாம்.

இப்படி கேள்வி கேட்பதற்கும் ஒரு முறை உண்டு. அதை அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.

ஆனால் எல்லா கேள்விகளும் உண்மைகளைக் கண்டறிய உதவுவதில்லை.

தர்க்க சாஸ்திரம் வாதங்களையும் அதில் எழுப்பப்படும் கேள்விகளையும் வாதம், ஜல்பம், விதண்டம் என்று மூன்று வகையாகப் பிரிக்கின்றது.

இவற்றில் வாதம் என்பது உண்மையை அறிய வேண்டும் என்ற அக்கறையினால் எடுத்து முன் வைக்கப்படும் கேள்விகள் அல்லது வாதங்கள். இத்தகைய வாதம் இரண்டு வகைப்படும்: 

ஒன்று, சமமான கல்வித் தகுதி அல்லது குணநலன்கள் உடைய இருவருக்கு இடையே நடக்கும் உரையாடல்.

மற்றது, ஆசிரியரின் நிலையில் (சொல்லிக் கொடுக்கும் நிலையில்) இருக்கும் ஒருவருக்கும் மாணவரின் நிலையில் (கற்றுக் கொள்ளும் நிலையில்) இருக்கும் ஒருவருக்கும் நடக்கும் உரையாடல்.
சமமான பேர்களுக்கிடையே நடக்கும் உரையாடலையோ வாதத்தையோ சந்தயா சம்பாஷணை என்று தர்க்க சாஸ்திரம் அழைக்கிறது. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே நடப்பது சம்வாதம் என்று அழைக்கப்படுகிறது

முன்னர் குறிப்பிட்டதுபோல் இத்தகைய வாதங்களின் இலக்கு உண்மையைத் தேடி அறிந்து கொள்வது. வாதங்களில் பங்கு கொள்வோர் ஆரம்பத்தில் தத்தமது அபிப்பிராயங்களையோ ஒரு விஷயத்தைக் குறித்த நிலைப்பாடுகளையோ வைத்திருக்கக் கூடும். ஆனால் வாதத்தின் சிறப்பே உரையாடுபவர்களில் ஒருவரோ (ஆசிரியர்-மாணவர் உரையாடலில்) அல்லது இருவரோ கேள்விகள் மூலம் தங்கள் கருத்துக்களைத் தெளிவாக்கி, இறுதியில் உண்மைக்கு ஒத்துவராத அபிப்பிராயங்களைத் தள்ளிவிட்டுத் தெளிவான நிலைப்பாட்டினை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதுதான்.

இத்தைய வாதத்தின் மூலம் தீர ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகளைத் தர்க்க சாஸ்திரம் ‘நிர்ணயம்’ என்று அழைக்கிறது.

இப்படி ஒரு வாதம் நடக்க வேண்டும் என்றால் நான்கு விஷயங்கள் இருக்க வேண்டும், முதலில், ஒரு கருத்தின் உண்மைத்தன்மையைப் பற்றி உரையாடுபவர்களில் ஒருவருக்கோ இருவருக்குமோ சந்தேகம் இருக்க வேண்டும். தர்க்க சாஸ்திரத்தில் இந்த சந்தேகத்துக்கு ‘சம்சயம்’ என்ற டெக்னிகல் பெயர் உண்டு.

யோசித்துப் பார்த்தோம் என்றால் இந்த சந்தேகப்படுதல் எவ்வளவு முக்கியம் என்பது விளங்கும். ஒரு கருத்தின் உண்மைத்தன்மைமீது சந்தேகம் உள்ளவர்கள்தான் அதைப் பற்றி ஆராயவும் உரையாடவும் முன் வருவார்கள்.

ஒரு கருத்தைப் பற்றி எந்த வித சந்தேகமும் இல்லாதவர்கள் தம் கருத்துக்களைச் சொல்லிவிட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள்.

நல்ல வாதத்துக்குத் தேவையான மற்ற மூன்று விஷயங்கள்:

(1) வாதத்தில் பங்கேற்கும் தகுதியுள்ளவர்கள். உரையாடுபவர்களில் ஒருவர் வாதங்களைப் புரிந்து கொள்ளவும் தன் வாதங்களை எடுத்து வைக்கவும் எவ்வகையிலாவது இயலாதவராகவோ அதிகாரமில்லாதவராகவோ இருந்தால் அந்த வாதம் சோபிக்காது.

(2) கேள்விகள். கேள்வி கேட்கும் முறையையும் தாண்டி, உரையாடுபவர்கள் கேள்வி கேட்கவும் கேள்விகளை ஏற்றுக் கொள்ளவும் தயங்காதவர்களாக இருக்க வேண்டும்.

(3) தெளிவான பதில்கள். உரையாடுபவர்கள் கேள்விகளை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது. அந்த கேள்விகளுக்கு அவர்கள் தெளிவான பதில்களை ஆதாரத்தோடும் பொறுமையோடும் பதில் சொல்லக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

இந்த நான்கு விஷயங்கள் இருந்தால் வாதத்தின் வழியாக உண்மையைக் கண்டறியும் முயற்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியமும் அதிகமாக இருக்கும்.

வாதத்திற்கு நேரெதிரானவை ஜல்பமும், விதண்டமும். தர்க்க சாஸ்திரம் இவற்றை விக்ரிய சம்பாஷணைகள் என்று அழைக்கின்றது. இவற்றின் நோக்கம் வாதத்தைப்போல் உண்மையைக் கண்டறிவதல்ல.

ஜல்பம் என்பது எவ்வகையிலாவது தன்னுடைய நிலைப்பாட்டை வெற்றி பெறச் செய்ய முன்னெடுக்கப்படும் விவாதமாகும். இதில் பங்கு கொள்பவன் தன்னுடைய நிலைப்பாடே முற்றிலும் சரி சென்றும் தன் எதிரியின் நிலைப்பாடு முற்றிலும் தவறு என்று முன்பே முடிவு செய்திருப்பான்.

இப்படி முடிந்த முடிவாக மற்றொரு கருத்தை எதிர்த்து ஒரு வாதத்தைத் தொடங்குவது தர்க்க சாஸ்திரத்தில் பிரதி பக்ஷம் என்று அழைக்கப்படும்.

இத்தகைய ஜல்ப வாதத்திலே பங்கெடுப்பவர்கள் வெற்றியைப் பெற எல்லா விதமான உத்திகளையும் கையாள்வார்கள். ஜல்பவாதிகள் கையாளும் மிக முக்கியமான உத்திகளில் சில:

- முக்கியமே இல்லாத சிறு சிறு விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து பேசி விவாதத்தைத் திசை திருப்புவது (“சாலம்”)


- விவாதத்துக்குச் சம்பந்தமில்லாத பதில்களைத் தருவது (“அ-ஹேது”)


- பேசும் தலைப்பை விட்டு வேறொரு தலைப்பைப் பற்றிப் பேசுவது (“அர்த்தந்தரம்”)


            - ஆதாரங்களை மாற்றி மாற்றி எடுத்துவைப்பது (“ஹேதந்தரம்”)


            - எதிரியைக் கோபப்படுத்திக் கவனமிழக்கச் செய்வது (“ஜதி”)      

ஜல்பவாதத்தை விடவும் தாழ்ந்தது விதண்டம். இதைத்தான் தமிழில்                விதண்டாவாதம் என்கிறோம்.

ஜல்ப வாதத்திலாவது எதிரிகள் ஏதேனும் ஒரு கருத்தைத் தற்காத்துப் பேசுவார்கள்.

விதண்டத்தில் ஈடுபடுவோர்களுக்கோ எந்த உறுதியான முடிவும் இருக்காது. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் எதிரியை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என்பதே. எதிரியை அவமானப் படுத்த அவர்கள் தம் நிலைப்பாடுகளை மாற்றி மாற்றிப் பேசுவது உட்பட எது வேண்டுமென்றாலும் செய்வார்கள்.

தர்க்க சாஸ்திரம் எடுத்துக் காட்டும் இம்மூவகை வாதங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதால் என்ன லாபம் என்று நீங்கள் கேட்கலாம்.

முதலில், வாதத்திலும் அபிப்பிராயங்களையும் மற்றவர்களின் முன்னிலையில் எடுத்து வைக்கும் போது நாம் செய்யும் தவறுகளை நாமே அறிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக, ஜல்ப வாதத்தில் ஈடுபடுவோர் பயன்படுத்தும் உத்திகளை அடையாளம் கண்டு கொண்டு அவற்றுக்குத் தோதாக நம் வாதங்களை அமைத்துக் கொள்ளலாம்.

குறைந்தபட்சம், விதண்டம் பண்ணுவோர்களோடு வாதம் பண்ணாமல் ஒதுங்கி விடலாம்.

நேரமாவது மிச்சமாகும்.

- சித்துராஜ் பொன்ராஜ்


Comments