சிறுகதை விமர்சனம் - சாவுக்காசு - ராஜு ரமேஷ்

சாவுக்காசு
சாவுக்காசு என்பது சீனர்களின் வழக்கம்; இங்கிதம். சீனத்தில் bai jin என்றும் பெரும்பாலும் வெள்ளை உறையில் பணம் வைத்துக் கொடுக்கப்படுவதால் வெள்ளைத் தங்கம் (white gold) என்றும் அழைக்கப்படுவதாகவும் அறிகிறேன். பல்லின சமுதாயமான சிங்கப்பூரில் இது இந்தியர்களிடமும் இயல்பாக ஊடுருவியிருப்பதை அறியமுடிகிறது.
அலுவலகத்தில் எப்போதேனும் சக ஊழியரின் குடும்பத்துக் கேதச்சேதியுடன் யாரெல்லாம் பணம் பங்களிக்க விரும்புகிறீர் எனக்கேட்டு நிர்வாகச் செயலாளரிடமிருந்து தகவல் வரும். பெரும்பாலும் அந்த ஊழியரின் நெருங்கிய நண்பர்களும் அவருடன் ஒரே குழுவில் பணியாற்றுபவர்களும் பங்களிப்பார்களென நினைக்கிறேன்.
பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும். இக்கதையில் பணத்தால் கமுக்கமாக வாயை மூடிக்கொள்கிறது ஓர் இரத்த உறவு. பணம், உறவுகளை எந்தச் சூழ்நிலையிலும் தடுமாறி தடம்புரளவைக்கும் எனும் புள்ளியில் குவிகிறது இக்கதை. சொந்த மகனே சாவுக்காசை அமுக்க எண்ணுவானா எனத் துணுக்குறுபவர்க்கு கதையாசிரியர் சில நியாயப்படுத்துதல்களை ஆங்காங்கே நிலையான வருமானமற்றவன், திருமணத்திற்குப் பின் பெற்றோரைப் பேணாதவன் எனும் புள்ளிகளாக வைத்திருக்கிறார். இருப்பினும் அந்தப்புள்ளிகளில் அழுத்தம் போதவில்லையோ என்றே எண்ணுகிறேன்.
முன்பு படித்த வேறொரு சிறுகதையில் பிள்ளைகளின் கவனிப்பின்றி இறந்த அம்மாவை அடக்கம் செய்யும் காரியத்தின்போது, அம்மாவின் கால் கட்டைவிரல் லேசாக அசைவதைப் பார்த்தும் மகன் அப்படியே துணியால் மூடி காரியத்தைத் தொடர்வதை ஒரு திடுக்கிடலோடு படித்தது நினைவுக்கு வந்து, அதுக்கு இது பரவாயில்லை என்று சமாதானமடைகிறது என் வாசக மனம்.
கதைக்களமான கேதவீட்டின் விவரணைகளுடன் நகர்கிறது கதை. சோபாவில் அமர்ந்து நுணுக்கமாக அணுக்கமாக கவனித்ததுபோல், சாவுவீட்டின் அசைவுகளை ஆரவாரமின்றி விவரித்திருக்கிறார் கதையாசிரியர். மேலும் இக்கதையின் களத்தில் சிங்கைமண் சார்ந்த உண்மைத்தன்மை உள்ளது. அது சார்ந்த சில செய்திகளை வெளியூர் வாசகர்களுக்கும் இது கடத்தும்.
கதையோடு சில சமூகப் போக்குகளும் ஆங்காங்கே ஊடுபாவாக காணக்கிடைக்கின்றன. சீனர்களைப்போலவே சாவுக்காசைக் கொடுக்கும் விஜயா ஆன்டியின் கலப்புப் பண்பாடு, மின் மயானத்திற்கு சில நேரங்களில் காத்திருக்கும் சூழல், அதன் காரணமாக அடுத்த நாளே மயானம் கிடைத்ததையெண்ணி ஆசுவாசமடையும் சுயநலம், நடந்த தவறில் பெண் மட்டுமே தண்டிக்கப்படுவது என சிலவற்றைக் கோடிடலாம்.
சரியோ தவறோ தான் விரும்பிய உறவிற்கு மரியாதை செய்யும் பெண்மையாக விஜயா, தலைமகனின் பொறுப்பை ஏற்று நடத்தும் தங்கை லீனா என பெண் சித்தரிப்புகள் உயர்ந்தே இருக்கின்றன. ஆனால் வேணுவின் மனைவி டயானா ஏன் அத்தனை இறுக்கம் காட்டவேண்டும்? ஏன் திருமணத்தின் பின் வேணு விலகியே இருக்கவேண்டும்? சிங்கைச் சமூகத்தில் கலப்பின திருமணம் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லையோ எனும் சிறு ஐயம் ஏற்படுகிறது. எனினும், பொதுவாகவே இன்றைய நவீன சமூகம் திருமணம், சாவு போன்ற நிகழ்வுகளை தம் நகர வாழ்க்கையின் கட்டுகளால் ஒரு வெற்றுக்கடமை போலவே அணுகுவதைக் காட்டும் விதமாகவும் இருக்கலாம் டயானாவின் குணவார்ப்பு.
இக்கதை ஏற்படுத்த முனைந்த முழு அதிர்வை வாசக மனதில் ஏற்படுத்துகிறதா என்றால் சற்றே நழுவவிடுகிறது.
முக்கோணத்தின் மூன்று புள்ளிகளில் முதல் புள்ளி, கதையைத் தன் பார்வையில் விவரிக்கும் வேணு. அவன்மீது எந்த நல்லெண்ணமும் எங்கும் தலைதூக்கவில்லை. அதனால் அவனது இறுதி செய்கை எதிர்பார்த்த அளவு அதிர்வை ஏற்படுத்தவில்லை.
இரண்டாவது புள்ளி, இறந்த அப்பா. அவரின் முதல் வண்ணத் தீட்டலே கசப்பு. விஜயா ஆன்டியுடனிருந்த கள்ளத்தொடர்பு எந்த வகையிலும் அனுதாபத்தை ஏற்படுத்தவில்லை. ஆதலால், அடடா இப்பேர்பட்டவரின் மகனா இப்படி எனும் அனுதாபத்திற்கு வழியில்லை. மேலும், வாசகருக்கு, செய்த தவறுக்கு அப்பாவுக்கு என்ன தண்டனை எனும் எண்ணம் மேலோங்குவதைத் தடுக்க முடியவில்லை.
மூன்றாவது புள்ளி விஜயா ஆண்டி. அவர் 'எப்படியோ' செய்தி அறிந்து இறுதியில் நுழைந்தாலும், எப்படி செய்தி உடனடியாகக் கிடைக்கும் வட்டத்தில் தொடர்ந்து இருந்தாரா? அல்லது வேணுவின் அப்பாவும் விஜயாவும் உறவைத் தொடர்ந்திருந்தார்களா எனும் சந்தேகம் எழுந்து, கதையின் முதல்வரியில் நம் எண்ணம் சஞ்சரிப்பது வியப்பு. இது கதையாசிரியரின் தேர்ந்த உத்தி என்றால் நிச்சயம் அவரைப் பாராட்டியே ஆகவேண்டும். அப்படியெனில் இந்தக்கதை ஒரு நுட்பமான உள்ளுறைச் செய்தியாகும்.
மொழி
முறுக்குக் கம்பியை விறைப்பாகத் தூக்கி வைத்தபடி காத்திருக்கும் சாமிப்படம், நீரில் கருந்தேள்களெனப் பளபளக்கும் சாய்ந்த கறுப்பு முக்கோணக் கண்கள் - இவை கதாசிரியர் கவிதை முகங்காட்டும் இடங்கள் :). 
கதையாசிரியர் சற்று மெய்ப்புப் பார்ப்பதில் கவனம் செலுத்தியிருக்கலாம். கதையும், கருப்பொருளும் முன்னுரிமை பெற்றாலும் அதைச் சொல்லும் கருவியான மொழியை தூசி தும்பற்று பயன்படுத்தவேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள். பதிப்பித்தவராவது ஒற்றுப் பிழைகளை சரிபார்த்திருக்கலாம். 
நறங்கிப்போன  - சரியான பொருள் என்னவென்று தெரியவில்லை. உள்ளூர் சொல்லாடலாக இருக்குமோ? நோய்மை காரணமாக என்பதால் இறுகிப்போன (அ) வற்றிப்போன என்று நாமே ஒன்றைப் பொருத்திக்கொள்ளலாம்.
நடை
இது நிகழ்கதையா அல்லது 'இறந்த'காலமா என சில இடங்களில் சற்றுத் தெளிவின்மையை ஏற்படுத்தும்விதமாக முன்னும் பின்னும் நகர்கிறது.
சாமி படம் பற்றி வேணு தொடக்கத்திலேயே விவரிக்கும்போது வசதியாக குருவாயூர் நிகழ்வு நினைவுக்கு வராமல், பிற்பாதியில் படத்தைக் கண்ணுற்று அதன் பின்கதையைச் சொல்வதைத் தவிர்த்து, படத்தைக் கண்ணுறுவதையும் பிற்பாதியிலேயே சொல்லி அங்கிருந்து நினைவுச்சுழல்களை சுழலவிட்டிருக்கலாம். பாதகமில்லை.
அடுத்து உறவினர்களைப் பற்றிய விவரணையில், புகைபிடித்து வந்திருக்கலாம் எனும் அனுமானம், தீய்ந்த நாற்றம் வீசும் வாய், மீசை, கறுப்பு நிறம் எனகதையோட்டத்திற்குவலுசேர்க்காத சித்தரிப்புகளைக் கடந்திருக்கலாம். குருவாயூரப்பன் வேணுவிற்கு நல்லெண்ணங்களையே அருள்பாலிக்கட்டும்.

Comments