கவிதையைக் கொல்ல மூன்று வழிகள்


எல்லோரும் மோசமான கவிதைகளை எழுதுகிறார்கள்.  மோசமான கவிஞர்கள் அவற்றைப் புத்தகமாய் வெளியிடுகிறார்கள். நல்ல கவிஞர்கள் அவற்றை எரித்துவிடுகிறார்கள்.” – உம்பர்ட்டோ எஃகோ

நான் ஏன் கவிதை எழுத வேண்டும் என்பது மிக நல்ல கேள்வி. கேள்விகளைப் பொறுத்த வரையில் இந்த கேள்வி நான் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்விக்குச் சமமானது.

எவ்வளவுதான் முயன்றாலும் பெரும்பாலோர் இந்த இரண்டு கேள்விகளுக்கும் தவறாகவே பதிலளித்து விடுகிறார்கள்.

ஆனால் திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பது போலவே கவிதை எழுதுவோரின் எண்ணிக்கை குறையாமல் இருப்பதும் ஈஸ்வர சங்கல்பமே.

பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது கல்யாணம் செய்து கொள்வதைப் போல பெரும்பாலான மனிதர்கள் ஒரு முறையாவது கவிதை எழுதுகிறார்கள்.

கவிதை எழுதுவதைத் திருமணம் செய்து கொள்வதைப்போல் அவரவர் தனிப்பட்ட விருப்பத்துக்கும் ஊழ்வினைக்கும் விட்டுவிட்டாலும் கூட கவிதையைப் பற்றிச் சொல்ல சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

கவிதையைப் பொறுத்தவரை எல்லோரும் ஏற்றுக்கொள்ள சில அடிப்படையான விஷயங்கள் உள்ளன.

தகவல்களை நீண்ட வாக்கியங்களாக எழுதிவைத்துக் கொள்ள சரியான பொருட்களோ எழுதுவதற்கு உதவும் சரியான கருவிகளோ இல்லாத காலத்தில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஊடகமான கவிதை உருவாக்கப்பட்டது.

கவிதையின் ஆதி வடிவம் வாய்மொழி வடிவமே அன்றி எழுத்து வடிவமல்ல. வாய்மொழியால் சொல்லப்படும் தகவல்கள் எளிதில் மறக்கப்படாமல் இருக்கவும் உரியவரிடம் முழுமையாகச் சென்று சேரவும் சில உத்திகள் உருவாக்கப்பட்டன.

தகவல்களை உள்ளடக்கியிருக்கும் கவிதையின் வரிகள் ஒன்று நீளமாகவும் ஒன்று நீளம் குறைந்தும் ஒழுங்கின்றி இருந்தால் நினைவில் வைத்துக் கொள்வது கடினம் என்பதால் ஓசைநயத்தின் அடிப்படையில் ஒரே சீரான அடிகள் முதலில் நிறுவப்பட்டன. 

வரிவரியாகத் தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள எதுகையும் மோனையும், வார்த்தைகளுக்கிடையே ஒரே எழுத்தோ, குறிப்பிட்ட சில வகை ஓசைகளோ எழுத்துக்களோ ஒரு குறிப்பிட்ட முறையில் மாறி மாறி வருவதும் விதிகளாக்கப்பட்டன.

இப்படி எழுதும் முறைமைக்கு யாப்பு என்று பெயர் தரப்பட்டது. ஒரு சமுதாயத்தின் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்க உதவும் யாப்புக்குட்பட்ட கவிதை வடிவங்கள் வரவேற்கப்பட்டன. அப்படி அல்லாதவை தள்ளப்பட்டன.

அந்நாளைய தகவல் பாதுகாப்புக்கு யாப்பு என்பது தரக்கட்டுப்பாடாய் (Quality Control) அமைந்தது என்பதை நாம் உணரவே வேண்டும்.
இது நம்ப கடினமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் சங்க காலத்திலோ சிலப்பதிகாரக் காலத்திலோ சராசரியாக எத்தனை பேர்களிடம் புறநானூறு, குறுந்தொகை போன்ற முழு நூல்களின் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளோ செப்பேடுகளோ இருந்திருக்கும் என்று யோசிக்கலாம்.

அதற்கும் கொஞ்சம் பின்னால் சென்று இப்படி ஒரு முழு நூலை பனையோலைகளிலோ செப்பேடுகளிலோ பதிவு செய்ய ஒரு எழுத்தருக்கு எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் என்று யோசிக்கலாம். லட்சம் பேர் இருக்கக்கூடிய ஒரு நாட்டில் மக்கட்தொகையின் இருபது சதவிகிதத்தினருக்கு மட்டும் முழு நூல்களை எழுதித் தர எத்தனை நாள் பிடிக்கும் என்றும் அதற்கு எத்தனை எழுத்தர்கள் தேவைப்பட்டிருப்பார்கள் என்றும் சிந்திக்கலாம். அதற்கு ஆகும் செலவு என்னவென்றும், அதற்குரிய எழுத்தாணிகளோ எழுதும் கருவிகளோ உருவாக்க என்ன முயற்சி வேண்டும் என்றும் மேலும் கணக்குச் செய்து பார்க்கலாம்.

அந்த காலத்தில் எழுத்துக்களைத் திடமான பொருட்களில் பதிவு செய்வதில் உள்ள சிரமத்தைப் பார்க்கையில் அதிகபட்ச பேருக்குப் படிப்பு என்பது வாய்மொழியாகத்தான் பரிமாறப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. இதன் காரணமாகத்தான் நாம் இன்று கவிதைகள் என்று கருதுபவை மட்டுமல்ல, வான சாஸ்திரம், ஜோசியம், இலக்கணம், வரலாறு, பட்சி சாஸ்திரம் என்ற அனைத்தும் கவிதைகளாகவே அந்நாளில் எழுதப்பட்டன.

இதன் அடிப்படைக் காரணம் தகவல்கள் எளிதில் மனனம் செய்யப்பட வேண்டும் என்பதுதான்.

இதனிடையில் இந்த யாப்பு வடிவத்திலேயே நாம் கவிதை நயம் உள்ளவை என்ற கருதக்கூடிய பாடல்களும் இயற்றப்பட்டன.

இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது யாப்பில் எழுதப்பட்ட தகவல்கள் வேறு, அதே யாப்பில் எழுதப்பட்ட உவமை, உருவகம் என்று தொடங்கும் அணியலங்காரமும் மற்ற மொழி அலங்காரமும் உள்ள கவிதைகள் வேறு என்பதைத்தான். ஆனால் இரண்டுமே யாப்பில் எழுதப்பட்டன. காரணம் யாப்புத்தான் பரவலாக எழுத்துக்களைப் பதிவு செய்யும் வழிகள் இல்லாத காலத்தில் இத்தகவல்களும், கவிதைகளும் மறையாமல் இருக்கவும் எளிதில் மனனம் செய்யப்படவும் உதவியது.

ஆனால் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுப் புத்தகங்களைக் குறைந்த விலையில் உருவாக்கும் தொழில் நுட்பம் மலிவான பிறகு, யாப்பில் பரிமாறப்பட்ட தகவல்கள் உரைநடையாக வரத் தொடங்கின. அதே போல் கவிதைகளும் சீரான அடிகளை விட்டுக் கொஞ்சம் அகன்று கொஞ்சம் கொஞ்சமாக எதுகை மோனைகளையும் விட்டு வெளிவந்து உரைநடை போலிருக்கும் கவிதைகளாக மாற ஆரம்பித்தன. காரணம் கையில் எளிதில் அழியாத புத்தகம் இருக்கும்போது மனனத்துக்கு அத்தனை மவுசு இல்லாமல் போனதே.

இங்கே நான் சொல்லவரும் அடிப்படை விஷயம் யாப்பு வேண்டாம் என்பது அல்ல. சந்தக் கவிதைகளை ரசிக்க முடியாத வறட்டுப் பிடிவாதக்காரனல்ல நான். யாப்பில் உள்ள ஓசை நயமும் இசையும் கவிதையில் சொல்லிக்காட்டப்படும் சொற்சித்திரங்களுக்கு நிச்சயமாக மெருகூட்டவே செய்கின்றன.

ஆனால் ஒன்று, யாப்பில் வராத ‘உரைநடை’ கவிதைகளிலும் மனிதப் பேச்சில் உள்ள அத்தனை இசையும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

இதற்கெல்லாம் மேலாக யாப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தின் தொழில் நுட்பத்துக்கும் வாசகர்களின் தேவைக்கும் ஏற்ப உருவாக்கப்பட்ட கருவி என்பதை நாம் மறந்துவிடலாகாது.

யாப்பில் சமையல் குறிப்பை எழுதினால் அது கவிதையாகி விடாது.

அதற்கும் மேலாக நமக்குக் கவிதையின் வரலாற்றிலிருந்து ஒரு படிப்பினை உண்டு.

எல்லா இலக்கிய வடிவங்களும் அவை பிறந்த காலத்தின் தொழிற் நுட்பத்திற்கும், வாசகர் தேவைக்கும் ஏற்ப உருவானவையே.

இப்போதுள்ள இலக்கிய வடிவங்கள் எல்லாம் அச்சடித்த புத்தகங்களின் வடிவத்துக்கும் கொள் அளவுக்கும் ஏற்ற வகையிலேயே இருக்கின்றன.

பனையோலை காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் பனையோலை எழுதத் தோதாக இருந்தன.

அதே போல் கையில் தொலைபேசியோடு இந்த வலைப் பதிவுகளை வாசிக்கும் வாசகர்களின் தேவைக்கேற்பவும் வலைப்பதிவுகளின் வடிவத்துக்கு ஏற்பவும் வருங்கால இலக்கியங்கள் நிச்சயம் மாறும்.

அது எப்படி மாறும் என்று யோசிப்பதில்தான் நம் எதிர்கால இலக்கியத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.

புத்தகத்தில் உள்ளது போலவே எழுதி வலைப்பதிவு செய்வது டிஜிட்டல் மயமாகாது.

அது சரி, கவிதையைக் கொல்ல மூன்று வழிகள் சொல்லப்போவதாகச் சொன்னீர்களே. அவை என்ன என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

அதையெல்லாம் நான் வெளிப்படையாகச் சொல்ல மாட்டேன். அப்படி சொல்லிவிட்டால் நான் என்ன பின் நவீனத்துவ எழுத்தாளன்?


- சித்துராஜ் பொன்ராஜ்

Comments

Post a Comment

வணக்கம். உங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன். இங்கும் பதியலாம். sithurajponraj134@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.