அரிஸ்டாட்டிலின் இலக்கிய விமர்சனம்

இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்று பல்வேறு கோட்பாடுகள் இன்று முன்னெடுக்கப் படுகின்றன.

ஆனாலும் பழைய காலத்து ஆட்கள் இலக்கியத்தைப் பற்றி எழுதி வைத்தவற்றைப் படிக்கும்போது நம்மையும் அறியாமல் ஒரு திருட்டுக் குதூகலம் ஏற்படத்தான் செய்கிறது.

இது வேறு வேலை ஏதும் இல்லாத ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பழைய திரைப்படங்களைப் பார்ப்பது போன்றது.

பழைய கால நடிகர்களின் நடை, உடை, பாவனைகளைக் காணும்போது நமக்கு இரண்டு விதமான எதிர்வினைகள் தோன்றலாம். ஒன்று, அந்த காலத்தில் இதையெல்லாமா ரசித்தார்கள் என்ற கேள்வி. இரண்டாவது, ஜன்னல் கம்பிகளைத் தாண்டிக் குதித்துத் திடீரென வீட்டின் வரவேற்பறையை பொன்னிறமாக்கும் வெயில் கீற்றைப்போல ஒரு கணம் நம்மை திகைக்கவைக்கும் ஏதோ ஒரு அழகிய விஷயத்தைப் பற்றிய கிளர்ச்சி.

கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் கவிதையியல் [On Poetics] என்னும் நூல் பல நூற்றாண்டுகளாக மேற்கத்திய இலக்கிய கோட்பாட்டின் அடிப்படையாகக் கருதப்பட்டு வந்தது. மேற்கத்திய இலக்கியக் கோட்பாட்டு நூல்களைப் பொறுத்தவரை நம் கைக்குக் கிடைத்திருக்கும் மிகப் பழைய நூலும் இதுதான்.

இந்த நூலின் வரலாறு மிக சுவாரஸ்யமானது.  கிறிஸ்துவம் ரோமாபுரி மன்னர்களால் அதிகாரப்பூர்வ மதமாக ஏற்கப்பட்ட பிறகு கிரேக்க தத்துவம், நாடகம், அழகியல் ஆகியவற்றிற்கு எதிராகக் ஆதி கிறிஸ்துவர்களிடையே ‘இவை சத்திய விசுவாசத்திற்கு எதிரானவை’ என்ற அடிப்படையில் பலமான எதிர்ப்புக் கிளம்பியது. அந்த கலாட்டாவில் தொலைந்துபோன அரிஸ்டாட்டிலின் கவிதையியல் நூல் பல நூற்றாண்டுகள் கழித்தே மேற்கத்திய உலத்திற்கு அரபி மொழிபெயர்ப்பு வழியாக மீண்டும் கிடைத்தது.

மேற்கத்திய உலகம் மத விசுவாசத்தின் அடிப்படையில் கிரேக்கர்கள் எழுதிய அற்புதமான தத்துவ, விஞ்ஞான மற்றும் மருத்துவ நூல்களை அழித்துக் கொண்டிருந்த வேளையில் அரேபிய அறிஞர்கள் அவற்றை அரபியில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்கள். அரிஸ்டாட்டிலின் கவிதையியலை அவரோஸ் மொழிபெயர்த்ததால் அது தொலையாமல் தப்பியது. இல்லையென்றால் நமக்கும்கூட அது கிடைக்காமல் போயிருக்கும்.

அரிஸ்டாட்டிலின் கவிதையியல் நூலைப் பற்றி முதலில் சொல்ல வேண்டிய விஷயம் அது கவிதைகளைப் பற்றியது மட்டுமல்ல என்பதுதான். கிரேக்க மொழியில் “போயெமா” (poema) என்ற வார்த்தைக்குச் ‘ஆக்கப்பட்டது’ என்று அர்த்தம். அதன் அடிப்படையில் கவிதையியல் விமர்சனத்தில் அரிஸ்டாட்டில் காவியம், சந்தக் கவிதை என்பவற்றோடு துன்பியல் நாடகம், நகைச்சுவை நாடகம் ஆகியவற்றையும் சேர்த்திருக்கிறார்.

அரிஸ்டாட்டிலின் கருத்துப்படி எல்லா வகையான இலக்கியப்படைப்புக்கும் ஆதாரமாக அமைந்திருப்பது ‘போலச் செய்தல்’ அல்லது நமது மொழியில் சொல்லவேண்டுமென்றால் ’வாழ்க்கையைக் காப்பியடித்தல்’ என்ற வேலைதான்.

ஒரு இலக்கியப் படைப்பின் தரம் அது எவ்வளவு தூரம் உண்மையான வாழ்க்கை நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிறது என்பதிலும் அந்த பிரதிபலிப்பு எவ்வளவு தூரம் வாசகர்களையோ பார்வையாளர்களையோ பாதிக்கிறது என்பதிலும்தான் அடங்கியிருக்கிறது என்பது அரிஸ்டாட்டிலின் கருத்து. வாழ்க்கையைப் பார்த்து அதைப் ‘போலச் செய்வதற்குப்’ பெயர்தான் இலக்கியம். இந்த காப்பியடித்தலுக்கு கிரேக்க மொழியில் மிமெசிஸ் (mimesis) என்று பேர்.

வாழ்க்கையைத் துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் பிரதிபலிக்க நினைக்கும் எழுத்தாளன் வாழ்க்கை தற்போது எப்படி இருக்கிறது என்பதையோ, எப்படி இருக்கக்கூடும் என்பதையோ அல்லது எப்படி இருக்கவேண்டும் என்பதையோ ஆக்கிக் காட்ட வேண்டும் என்பது அரிஸ்டாட்டிலின் கோட்பாடு. இதைச் சரியாகச் செய்ய வேண்டுமென்றால் எழுத்தாளன் வாழும் மனிதர்களின் செயல்களையோ பேச்சுக்களையோ பிரதியெடுத்துத் தன் படைப்பில் அமைத்துக் காட்ட வேண்டும்.

மனிதர்களின் செயல்களையோ, பேச்சையோ எழுத்தாளன் தவறாகப் பிரதியெடுத்துக் காட்டும்போதோ, கதையில் தர்க்கரீதியான அல்லது கொடுக்கப்படும் விவரங்களில் தவறு செய்யும்போதோ இந்த பிரதியெடுத்தல் கெட்டு, படைப்பும் வெற்றியின் எல்லையைத் தொடமுடியாமல் போகிறது என்று அரிஸ்டாட்டில் சொல்கிறார்.

உதாரணத்திற்குப் பழைய சிங்கப்பூர் எழுத்தாளர் ஒருவர் இரண்டாம் உலகப் போரைப் பற்றி எழுதிய கதையில் கதாபாத்திரங்கள் தட்டையாக இருந்ததாக விமர்சகர் ஒருவர் சமீபத்தில் எழுதியிருந்தார். மேலும் கதையில் எழுதப்பட்டிருந்த தவறான தகவல்களையும் சுட்டிக் காட்டியிருந்தார்.  இவை, கதை முழுமையாக வெற்றி பெறாமல் போனதற்குக் காரணங்களாக அமைந்தன என்றும் சொன்னார். அரிஸ்டாட்டிலின் கருத்துப் படி இது சரியான விமர்சனமே.

சரியாக ஆக்கப்பட்ட படைப்பு என்பது வாழ்க்கையின் வெறும் சாயலாய் மட்டுமல்லாது அதை வாசிப்புப்பவர்களுக்குள்ளே பலமான உணர்ச்சிகளை எழுப்ப வேண்டும் என்று அரிஸ்டாட்டில் சொல்கிறார். உதாரணத்துக்குத் துன்பியல் நாடகங்களைப் பற்றி விவரிக்கும் போது அவை சராசரியானவர்களைவிட உயர்ந்த குணமுடைய மனிதர்களின் வாழ்க்கையைத் தத்ரூபமாகப் பிரதிபலித்து அதைக் காண்பவர்களுக்குள் பச்சாதாபம், பயம் ஆகிய உணர்ச்சிகளை ஏற்படுத்திக் கடைசியில் அவ்வுணர்ச்சிகளின் பெருக்கின் வழியாக காண்பவர்களை விடுவிக்க வேண்டும் என்று அரிஸ்டாட்டில் சொல்கிறார்.

அரிஸ்டாட்டில் துன்பியல் இலக்கியத்தின் இந்த விளைவைக் கத்தார்ஸிஸ் (catharsis) என்று அழைக்கிறார்.

இதற்கு மாறாக நகைச்சுவை நாடகங்கள் சராசரி மனிதர்களைவிட குணத்தில் தாழ்ந்த மனிதர்களின் கோணங்கித்தனங்களைத் துல்லியமாகச் சுட்டிக் காட்டி பார்வையாளர்கள் தங்களையே பார்த்துச் சிரித்துக் கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகின்றன.

ஆகவே அரிஸ்டாட்டிலைப் பொறுத்தமட்டில் இலக்கியத்தின் உள்ளடக்கம் வாழ்க்கைச் சம்பவங்களைத் தத்ரூபமாகப் பிரதிபலித்து வாசகர்களையோ பார்வையாளர்களையோ அசைத்துப் பார்ப்பது.

இலக்கியத்தின் பயன்படுத்தப்படும் கட்டமைப்போ, உத்திகளோ இவ்விளைவுகளை ஏற்படுத்தவதில்தான் அவற்றின் வெற்றி அடங்கியிருக்கிறது என்று அரிஸ்டாட்டில் சொல்கிறார்.

அப்படியென்றால் நல்ல துன்பியல் கதை எப்படி இருக்க வேண்டும்?
- முன்பு குறிப்பிட்டதைப் போல சராசரி மனிதர்களைவிடவும் உயர்ந்த குணமுடைய மனிதர்களை அது தலைமைக் கதாபாத்திரங்களாகக் கொண்டிருக்க வேண்டும்.

- கதையில் வரும் தலைமைக் கதாபாத்திரங்கள் நல்லவர்களாக, கதைக்கு ஏற்றவர்களாக, நம்பக்கூடியவர்களாக, செயல்களிலும் பேச்சிலும் கதை முழுக்க ஒரே சீரான தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

- கதை வாசகருக்குள் பச்சாதாபத்தையோ பயத்தையோ ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

- கதையில் ஏதேனும் ஒரு விஷயம் கண்டறியப்பட வேண்டும்.

- கதையில் ஏதேனும் ஒரு பெரும் சிக்கலும் அதைத் தீர்த்து வைக்கும் சம்பவமும் இருக்க வேண்டும்.

- எழுத்தாளன் எண்ணங்களைக் கதாபாத்திரங்களின் சொற்களின் வழியாகவும், செயல்களின் வழியாகவும் வெளிப்படுத்த வேண்டும்.

- குறிப்பாக கதாபாத்திரங்களின் வாய்மொழி ஒரு கருத்தைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறதா என்பதில் எழுத்தாளன் கவனம் செலுத்த வேண்டும்.

- முன் கூறிய கண்டறிதலும், சிக்கலும், இவற்றால் கதாபாத்திரங்கள் படும் துன்பமும் சேர்ந்து வாசகனைக் கத்தார்ஸிஸ் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

- மிக முக்கியமாக கதை முழுக்க கதையின் கருவிலும், நோக்கத்திலும் ஒருமை இருக்க வேண்டும்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்களையோ, அல்லது சிறந்தவை என்று கருதப்படும் இன்றைய சிறுகதைகளையோ எடுத்து அரிஸ்டாட்டிலின் இந்த இலக்கணத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தோம் என்றால் அவரது கருத்துக்கள் இன்றுகூட நம் வாசிப்பனுபவத்துக்கு ஒத்து வருவதைக் கவனிக்கலாம்.

அரிஸ்டாட்டிலின் கோட்பாடுகளைப் பயன்படுத்தி இன்றைய சிறுகதைகளுக்கு விமர்சனம் எழுதுவது சுவையான அனுபவம்.

முயன்று பாருங்கள்.


 - சித்துராஜ் பொன்ராஜ்

Comments