குறுநாவல் - இரண்டுங்கெட்டானா?

என் மனச்சாட்சியின் ஸ்தூல உருவமாகச் செயல்பட உறுதியான சபதம் எடுத்திருக்கும் ஒரு நண்பரிடம் நான் ஒரு குறுநாவலை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னேன்.

[வாசகருக்கான குறிப்பு: இதற்கு முன்னால் இந்த வருடத்தில் மட்டும் வேறு இரண்டு குறுநாவல்களை எழுதி முடித்துவிட்டேன். ஆனால் இதை அவரிடம் சொல்லவில்லை. இப்போதுகூட அந்த குறுநாவல்களை யார் பிரசுரிப்பார்கள் என்ற சந்தேகம் எனக்கு உண்டு. இது, நான் எழுதியவற்றின் தரம் கருதி எனக்கேற்பட்ட சந்தேகம் அல்ல. அதுவும் உண்டு. ஆனால் சிறுகதையைவிட நீளமான படைப்புக்கள் அதிகமாக சீந்தப்படுவதில்லை என்பது உலகத்தின் விதி. இது தமிழுக்கு மட்டுமல்ல, யாமறிந்த எல்லா மொழி இலக்கியச் சூழலுக்கும் பொருந்தும். இதழுக்கு உரிய சிறுகதைகூட 1000 வார்த்தைக்கு மேல் போகக்கூடாது என்று கண்டிப்பான கண்டிஷன் போடும் பொல்லாத உலகம் இது. நான் எழுதிய நீளமான கதைகளை எடிட் செய்யும் ‘வெட்டி’ வேலையைத்தான் நான் இப்போது அதிகம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.]

நான் குறுநாவல் எழுதிக் கொண்டிருப்பதாக அறிந்த நண்பர் என்னைப் பரிதாபத்தோடு பார்த்தார்.  குறுநாவலா என்றார். அவர் வாக்கியம், இதனால் உனக்கென்ன லாபம் என்பது போல என் காதில் ஒலித்தது. குறுநாவல் வடிவத்தில் கதை எழுதுவதில் உள்ள சிலபல சாதகங்களை எடுத்துக் கூற முயன்றேன். அவர் குறுநாவல் என்பது இரண்டுங் கெட்டான் வடிவம் என்று அடித்துப் பேசினார். முழுமையான வாசிப்பனுபவம் தராது. அதே சமயம் சிறுகதை போல் நறுக்குத் தெறித்தாற் போலில்லாமல் வழவழா என்று போகக் கூடியது என்று குறைப்பட்டுக் கொண்டார்.

என் மொழியில் அவர் கூற்றைச் சொல்ல வேண்டுமென்றால், நாவல் சமுத்திரம். ஆசைதீர முங்கி முங்கிக் குளிக்கலாம். சிறுகதை ஷவர். நம் வசதிக்கு வாசித்துவிட்டுக் கடக்கலாம். குறுநாவல் என்பது மாற்று உடுப்புக் கொண்டு வராதவன் சமுத்திரக் கரையில் சுட்டெரிக்கும் வெயில் நாளில் நின்றுகொண்டு கால் நனைப்பது போன்றது. ஆசைதீரக் குளிக்கவும் முடியாது, கடலைப் பார்த்த பிறகு தண்ணீரை அனுபவிக்காமல் போகவும் ஆசை விடாது.

ஆனால் குறுநாவல் வடிவம் நீண்ட வரலாறும் படைப்பிலக்கியத்தில் தனியிடமும் கொண்டது என்பதுதான் உண்மை. குறுநாவல் வடிவத்தின் முதல் வெளிப்பாடாக இலக்கிய ஆசிரியர்கள் இத்தாலிய எழுத்தாளர் ஜியோவானி பொக்காச்சியோ (Giovanni Boccacio) 1353ல் எழுதிய டெக்காமெரோனைகக் குறிப்பிடுகிறார்கள்.  நூலின் தலைப்பைப் போலவே (டெக்கா என்றால் கிரேக்க மொழியில் பத்து), இந்நூல் கொள்ளை நோயிலிருந்து தப்பிக்க ஃப்ளாரன்ஸ் நகரிலிருந்து ஃபியசொல் மலைகளுக்குச் செல்லும் பத்து கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்ட பத்துப் பத்துக் கதைகளின் தொகுப்பாகத் திகழ்கிறது (மொத்தம் 100 கதைகள்).

கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்ட கதைகள் செய்திகளின் வடிவத்தில் அமைந்ததால் அவற்றுக்கு இத்தாலிய மொழியில் நோவெல்லே (novella, ஒருமையில் novella) என்று பெயர் தரப்பட்டது. இதற்கு “செய்தி” அல்லது “கதை” என்று அர்த்தம். டெக்காமெரோனின் இலக்கிய வெற்றியைத் தொடர்ந்து அதைப் போலவே பல நோவெல்லேக்கள் எழுதப்பட்டன. அவற்றில் மிகவும் புகழ்பெற்றவை பிரஞ்சு அரசி மார்க்கரெட் எழுதிய எழுபத்திரண்டு கதைகள் அடங்கிய ஹெப்டாமெரோன் மற்றும் ஆங்கிலக் கவிஞர் சாசர் எழுதிய காண்டர்பரி கதைகள்.

இன்று குறுநாவல் வடிவம் என்பது பொதுவாக 17,500 வார்த்தைகளிலிருந்து 40,000 வார்த்தைகள் வரை உள்ள கதையாக - அதாவது 60-130 பக்கங்கள் நீளமுள்ள கதைகளாக – வகைப்படுத்தப்படுகின்றது. [மேற்கில் நாவலின் குறைந்தபட்ச சொல் கணக்கே 40,000 என்பது குறிப்பிடத் தக்கது!).

குறுநாவலுக்குப் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் நவீன வடிவமும் சமூக அந்தஸ்தும் ஏற்பட்டது. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஜெர்மானியர்கள்.


இவர்கள் நாவலுக்கும் குறுநாவலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை துல்லியமாக எடுத்துரைக்க முயற்சி மேற்கொண்டார்கள். இதன் விளைவாகத்தான் மற்ற மொழிகளில் உள்ளது போல நாவல்-குட்டி நாவல் என்ற பாகுபாடு இல்லாமல் ஜெர்மன் மொழியில் நாவல் “ரோமான்” என்றும், குறுநாவல் “நோவெல்லா” என்று வேறுபடுத்தி அழைக்கப்படுகிறது.

பெயரளவில் மட்டும் நின்றுவிடாது, ஜெர்மானியர்கள் நாவலின் உள்ளடக்கத்துக்கும் குறுநாவலின் உள்ளடக்கத்துக்கும் இடையே உள்ள தெளிவான வேறுபாடுகளை இலக்கிய விதிகளாகவே நிறுவினார்கள்.


குறுநாவல் என்பது நாவல்போல் பல முடிச்சுக்கள், கதாபாத்திரங்கள், சிக்கல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்காமல் ஒரே ஒரு குறிப்பிட்ட முடிச்சையோ, சம்பவத்தையோ, சிக்கலையோ குறித்த கதையாக மட்டுமே இருக்கவேண்டும் என்பது ஜெர்மானியர்கள் வகுத்த முதல் விதி.  

நல்ல குறுநாவலில் விவரிக்கப்படும் ஒற்றைச் சிக்கலோ, சம்பவமோ, முடிச்சோ வெண்டபுங்க்ட்” (Wendepunkt) என்ற எதிர்பாராத திருப்பத்துக்குக் கதையைக் கொண்டு சென்று தர்க்கரீதியான அதே சமயம் வாசகனைச் சிந்திக்க வைக்கும் முடிவுக்கு வழிவகுக்க வேண்டும் என்பது இரண்டாவது விதி.

இந்த விதிகள் மீறப்படாமல் இருக்கும் வரையில் குறுநாவல் எவ்வளவு நீளம் வேண்டுமென்றாலும் இருக்கலாம்.  ஜெர்மானியர்களின் கூற்றுப்படி எண்ணிக்கை அடிப்படையில் நாவலையும் குறுநாவலையும் வேறுபடுத்திப் பார்ப்பது தவறான அளவுகோலாகும்.

ஜெர்மானியர்கள் வகுத்த இந்த விதிகளின் அடிப்படையில்தான் தாமஸ் மான், காஃப்கா, கதே, தஸ்டோவியஸ்கியின் பாதாளக் குறிப்புக்கள் என்ற பல புகழ்பெற்ற குறுநாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன். எழுதப்பட்டு வருகின்றன.

இந்த படைப்புக்களெல்லாம் குறுநாவல்களின் தனித்தன்மையையும் இலக்கிய சாத்தியங்களையும் எடுத்துச் சொல்பவை. இவற்றைப் படித்துப் பார்த்தாலே குறுநாவல் என்பது சிறுகதைக்கும் நாவலுக்கும் இடைப்பட்ட இரண்டுங்கெட்டான் வடிவம் என்று யாருக்கும் சொல்லத் தோன்றாது.

மேற்கத்திய உதாரணங்கள் எதற்கு? தமிழிலேயே குறுநாவல்களின் தனித்தன்மையை நிலைநாட்டும் வகையில் தலைசிறந்த குறுநாவல்களாக ஜெயமோகனின் கிளிக்காலமும், டார்த்தீனியமும், லங்கா தகனமும் அமைந்துள்ளன.

- சித்துராஜ் பொன்ராஜ்

Comments