என் வலதுசாரிப் பாட்டி

கலிகாலத்தில் எல்லோருக்கும் சொந்த கருத்திருக்கும் என்று என் பாட்டி அடிக்கடி சொல்வார். உலகத்தில் ஏற்படக்கூடிய அத்தனை அட்டூழியங்களுக்கும் காரணம் ஒவ்வொரு மனிதனும் முன்னோர்களின் கருத்துக்களை ஏற்று அதன்படி நடக்காமல்  தன் சொந்த கருத்துக்களை உருவாக்கிக் கொண்டதே என்பது எனது பாட்டியின் வலுவான அபிப்பிராயம்.

இப்படி சொல்வதுகூட அவருடைய சொந்த கருத்துத்தான் என்றாலும் கூட பாட்டி ஆதார நூல்கள் உசாத்துணை நூல்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இன்றைய கருத்துச் சுதந்திரத்தைச் சபித்தபடியே அமர்ந்திருப்பார்.

என் பாட்டி பழைய கால மனுஷி. அந்த காலத்தில் கொல்லத்தில் ஏதோ ஒரு இடத்தில் நின்று கொண்டு கொல்லத்து ராஜாவையோ மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் பேரரசரையோ வாழ்த்திப் பாடியிருக்கக் கூடியவர். அப்படிப்பட்டவரின் கருத்துக்களை இன்றைய நூற்றாண்டின் முற்போக்குவாதிகளான நாம் தள்ளிவிடுவதே உசிதம்.

ஆனால் என் பாட்டி இன்றுவரை உயிரோடிருந்திருந்தால் மனிதர்களுக்குச் சொந்த கருத்துக்கள் இருப்பது அபாயம் அல்ல என்றும் அவற்றை அவர்களால் எளிதில் உலகமெல்லாம் பரப்ப முடிவதுதான் உண்மையான அபாயம் என்றும் நான் சொல்லியிருப்பேன். பாட்டிக்கு முகநூல், டிவிட்டர், வாட்ஸாப் முதற்கொண்டு இன்ன பிற சமூகத் தொடர்பு செயலிகளையும்கூட அறிமுகப்படுத்தியிருப்பேன்.

தனி மனித கருத்துச் சுதந்திரம் என்பது தான் வாழும் தெருவுக்கும், சுற்று வட்டாரத்துக்கும், ஓரளவு நகரத்துக்கும். மிஞ்சிப் போனால் தேசிய பத்திரிகையின் வாசகர் கடிதத்துக்கும் சுருங்கிப் போயிருந்த காலத்தில் கட்டுப்பாடுகள் இல்லாத கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக உரக்கப் பேசிய என் வலதுசாரிப் பாட்டி முகநூல், டிவிட்டர் ஆகியவற்றைப் பார்த்த பிறகு தனக்குப் பிடித்த புராண, இதிகாச, சமையல் குழுக்களில் சேர்ந்து பதிவுகள் எழுதியும், நவராத்திரி கொலுப் புகைப்படங்களையும் பஜனை வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து அமர்க்களம் பண்ணியிருக்கவும் கூடும்.

இதில்தான் எனக்கு மனித இனத்தின் மீதே எல்லையில்லா நம்பிக்கை பிறக்கிறது.

அனைத்து வகைத் தகவல்களையும் வேண்டிய நேரத்தில், வேண்டிய அளவில் விரல் சொடுக்கில் எண்ணியது எண்ணியாங்கு எய்த இணையம் நமக்கு வழி செய்து தந்திருக்கிறது.

ஆனால் நாம் படிக்கும் விஷயங்களும் புழங்கும் நண்பர்களின் கூட்டமும் விரிவடைந்திருக்கிறதா என்றால், உண்மையில் நம்மில் பெரும்பாலோர் சின்ன வயதில் ரசித்த திரைப்படங்களைப் போன்ற திரைப்படங்களையும், சின்ன வயதில் சுவைத்த நூல்களைப் போன்ற நூல்களையும் சின்ன வயதில் நெருங்கிப் பழகிய நண்பர்களின் குணாதிசயங்களோடு இருக்கும் மனிதர்களையும் மட்டுமே இன்றும் ரசித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகும்.

என்னை நம்ப வேண்டாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் படித்த நூல்களையும், உண்மையிலேயே பார்த்து ரசித்த படங்களையும், நட்புப் பாராட்டிய மனிதர்களையும் விருப்பு வெறுப்பின்றிச் சிந்தித்துப் பாருங்கள்.

இத்தனை நூறு புதிய புத்தகங்களைப் படித்தேனே, இத்தனை நூறு  நண்பர்களைப் பார்த்தேனே என்று சொல்லாதீர்கள். அது விதண்டாவாதம்.  உண்மையிலேயே உங்கள் ரசனைக்கு ஒத்துவராத எத்தனை புதிய நூல்களைப் படித்தீர்கள்? உங்கள் கருத்துக்கு ஒத்து வராத எத்தனை மனிதர்களைச் சந்தித்து நண்பர்களானீர்கள்?


நாம் சின்ன வயதில் போற்றிப் பாராட்டிய இசையமைப்பாளர்களையும், திரைப்படங்களையும், நண்பர்களையும் இன்றுவரை பாராட்டுகிறோம் என்பது ரசனைபாற்பட்ட விஷயம் மட்டுமல்ல.

இது நம் கருத்தின் விரிவாக்கமும், அறிவுக் கொள்முதலும் தேங்க ஆரம்பித்ததற்கான அறிகுறி. வயதாக ஆக இந்த கருத்துத் தேக்கம் அதிகரித்து இறுகி நம்மை புதிய கருத்துக்களையும் சிந்தனைகளையும் முற்றிலும் காது கொடுத்துக் கேட்கக் கூட பொறுமை இல்லாதவர்களாக மாற்றி விடுகிறது.

இதற்காக நம் காதுகளில் விழும் அத்தனை கருத்துக்களையும் நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும், ஆதரிக்க வேண்டும் என்பது என் கருத்தல்ல.

 ஆனால் ‘அந்த கால மியூசிக் டைதக்டரைப் போல் இந்த கால மியூசிக் டைரக்டர்ல எவன் இருக்கான்’ என்று சொல்லிக் கொண்டே இருப்பது ஒரு வித நோய்ப்பட்ட மனப்பான்மையையே காட்டுகிறது.

என் பாட்டியும் இதே நோய்ப்பட்ட நோக்கோடும் கருத்துத் தேக்கத்தோடும்தான் வலம் வந்தார். அதற்கு அடிப்படை காரணம் அவருக்குப் புதியவைகளைப் பற்றி இருந்த பயம்.

எங்கே அது நம்மைத் தூக்கிக் கொண்டு போய் விடுமோ என்ற அச்சம்.

‘நான் எப்போதும் படிக்கும் புத்தகங்களையே தொடர்ந்து படித்தேன் என்றால் நான் எப்படி வளர்வேன்?’ என்று புகழ்பெற்ற ஜப்பானிய நாவலாசிரியர் ஹாருகி முராகாமி கேட்கிறார்.

இது, சிந்தனைக்குரியது.

- சித்துராஜ் பொன்ராஜ்

Comments