யோனிகளைப் பாதுகாத்தல் – ஸ்பானிய இலக்கியத்தில் நடத்தைகெட்ட மனைவிகள்


1932ம் வருடம் ஸ்பேனில் விவாகரத்துச் சட்டம் அமுலுக்கு வந்ததும். இந்தச் சட்டம் வரும் வரைக்கும்  நடத்தைகெட்ட மனைவிகளையும், அவர்களது கள்ளக் காதலர்களையும் துரோகமிழைக்கப்பட்ட கணவர்கள் ஸ்பேனில் அனுமதி இருந்தது.

அதே சமயம் ஆடவர்கள் நடத்தைகெட்டு நடப்பது தவறாகவே கருதப்படவில்லை. மாறாக இன்றும்கூட ஸ்பானிய கலாச்சாரமுடைய நாடுகளில் பல பெண்களைப் – குறிப்பாக மாற்றான் மனைவியரைப் – படுக்கையில் வீழ்த்துவது machismo என்ற பெயரில் விரும்பத்தக்க, மற்றெல்லோராலும் வியக்கத்தக்க பேராண்மையாகவே கருதப்படுகிறது.

Macho என்ற வார்த்தைக்கு ஆண்மை என்று பொருள். Machismo என்பது அதீத ஆண்மை. பிறன்மனை நோக்கா பேராண்மை என்ற திருக்குறள் தத்துவம் எல்லாம் அங்கு என்ன பாடு படும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

ஸ்பானிய இலக்கியத்தின் பொற்காலம் என்று கருதப்படும் பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டுகளில் நடத்தைகெட்ட மனைவியரைக் கோபம் கொண்ட கணவன்மார்கள் கொல்வதுபோல் சித்தரித்து எண்ணற்ற ‘கௌரவ நாடகங்கள்' எழுதப்பட்டன.

பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் பெனிட்டோ பெரெஸ் கால்டோஸ், லியோபொல்டோ ஆலாஸ், எமிலியா பார்டோ பஸான் எழுதிய நாவல்களும் நடத்தைகெட்ட மனைவியரைக் குறித்துப் பேசுகின்றன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் 1600களில் பெட்ரோ கால்தெரொன் போன்றவர்கள் எழுதிய கௌரவக் கொலை நாடகங்கள் பெரும்பாலானவற்றில் மனைவிகள் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கொல்லப்படுவதுதான். 1631ல் நாடகாசிரியர் லோபே எழுதிய “பழிவாங்குதல் இல்லா தண்டனை” (El castigo sin venganza) என்ற ஒரு நாடகத்தில் மட்டுமே பெண் ஒருத்தி உண்மையில் கள்ளக் காதலில் ஈடுபடுவதாய்க் காட்டப்படுகிறது. மற்ற எல்லா நாடகங்களிலும் சித்தரிக்கப்படுவது சந்தேகத்துக்குரிய நடத்தை மட்டுமே.

சந்தேகத்தின் பேரிலேயே ஒரு பெண்ணை எந்தவித அச்சமும் இல்லாமல் கொல்லலாம் என்ற ‘புரிதல்' ஏற்படவும் அந்தப் புரிதலே இலக்கியத்தின் கருப்பொருளாகவும் மாற ஒரு சமூகம் எத்தகைய சவால்களைச் சந்தித்திருக்க வேண்டும்?

அரசியலைப் பொறுத்தவரைக்கும் ஸ்பேன் முஸ்லீம்களும் அவர்களுக்கு அடுத்து யூதர்களும் ஸ்பானிய சமுதாயத்தில் கலந்து அதன் ஸ்பானியத்தன்மையையும் கிறிஸ்துவ அடையாளத்தையும் கீழறுப்பதாகத் திடமாக நம்பியது. இந்த நம்பிக்கையின் பலனாக 1492ல் ‘மிக கிறிஸ்துவ மன்னர்கள்' என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்ட பெர்டினண்ட் மற்றும் அவர் மனைவி இசபெல்லாவின் ஆட்சி காலத்தில் யூதர்கள் கட்டிய துணியோடு சர்வ ஸ்பேனிலிருந்தும் நாடு கடத்தப்பட்டார்கள்.

ஆனால் யூதர்களை ஓட்டிய அளவுக்கு ஸ்பானிய கலாச்சாரத்திலும் அடையாளத்திலும் கலந்திருந்த யூதத்தன்மையை ஒட்டுவது சுலபமாக இல்லை. யூதர்கள் கிறிஸ்துவின் காலத்திற்கு முன்னாலிருந்தே ஸ்பேனில் குடிபுகுந்து வாழ்ந்ததற்காக வரலாற்று ஆதாரங்கள் ஏராளமாய் உள்ளன. பல யூதர்கள் ஸ்பானியர்களை மணந்திருந்தார்கள். அதே சமயம் பல யூதர்கள் 1492ம் ஆண்டு நடைபெற்ற நாடுகடத்தலில் இருந்து தப்பிக்க போலி கிறிஸ்துவர்களாக மதம் மாறினார்கள் என்றும், அவர்கள் வெளித்தோற்றத்திற்குக் கிறிஸ்துவர்களைப் போலிருந்தாலும் ரகசியமாக யூதச் சடங்குகளைப் பின்பற்றி வருவதாகவும் சந்தேகம் இருந்தது.

யூதர்கள் கிறிஸ்துவ பையன்களைக் கடத்திச் சென்று அவர்களைக் கொன்று அவர்களது ரத்தத்தை தமது மதச்சடங்குகளில் பயன்படுத்தும் அப்பத்தில் கலப்பதாகவும் அபாண்டமான வதந்தி ஐரோப்பா முழுவதும் பரவியது (நம்மூர் பூச்சாண்டி கதை போல). போலி கிறிஸ்துவர்களாக மாறிய யூதர்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்து பொறுப்புமிக்க பதவிகளைக் குறிவைப்பதாகவும், அவர்களில் பலர் பங்குத்தந்தைகளாகவும் ஆயர்களாகவும் கூட ஆகிவிட்டதாகவும் ஒரு நாள் யூதன் ஒருவன் போப்பாண்டவராகி திருச்சபையையே கீழறுப்புச் செய்து விடுவான் என்ற பீதியும் பரப்ப்பட்டது (இன்றைய இலுமினாட்டிகளைப் பற்றிய பயம் போல).


இப்படி ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் ஸ்பானிய அரசாங்கமும் ஸ்பானிய கத்தோலிக்கத் திருச்சபையும் Inquisition என்ற பெயரில் காலவரையற்ற விசாரணை ஒன்றைத் திருச்சபைப் பாதிரியார்களின் தொடங்கின. (Inquisition என்ற வார்த்தைக்கே விசாரணை என்றுதான் பொருள்).

இரண்டு நூற்றாண்டுகள் தொடர்ந்து நடந்த இந்த விசாரணையில் சந்தேகத்தின் பெயரிலும், வதந்திகளின் பெயரிலும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் நடுத்தெருவில் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். இந்த ஆபரேஷனுக்கு அரசும் திருச்சபையும் கொடுத்த பெயர் ‘limpia de sangre' அல்லது ‘ரத்தத்தைத் தூய்மை படுத்துதல்'.

இத்தனை பெரிய முன்னுரை எதற்கென்றால், ஸ்பேனில் எழுதப்பட்ட கௌரவ நாடகங்களும் இதே ரத்தத் தூய்மையை வலியுறுத்தியவை என்பதால்தான். சமூகத்தில் ஊடுறுவி சமூகத்தின் தூய்மையையும் கட்டுக்கோப்பையும் கீழறுப்புச் செய்யும் போலி யூதக் கிறிஸ்துர்களை அடையாளம் காண எப்படி வெளிப்புற அடையாளம் எதுவும் இல்லையோ அப்படியே நடத்தைகெட்ட மனைவியரை அடையாளம் கண்டுகொள்ள ஏதும் அடையாளம் இல்லாதது ஸ்பானிய ஆணாதிக்கத்தைப் பீதியுறச் செய்தது.

1583ல் ‘ஒழுங்கான மனைவி' என்ற மனைவியருக்கான ‘பாடநூலை' எழுதிய லூயிஸ் டி லியோன் மனைவியர் ஒப்பனை பொருட்களின் மீது அதிக கவனம் செலுத்துவதைக் குறை கூறிகிறார். இதற்கு அவர் கூறும் அடிப்படை காரணம் ஒப்பனைப் பொருட்கள் மனைவியரின் உண்மைச் சுயரூபத்தை மறைத்து அவர்களுக்குப் போலி வெளித்தோற்றத்தைத் தருகின்றன என்பதே.

போலி மனைவியரைக் குறித்து ஏற்பட்ட சந்தேகம் ஆடவர்களை ஒருவித விசாரணை மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. நாடகங்களில் கணவர்கள் மனைவியரின் மீது ஏற்படும் சந்தேகத்தின் பேரில் அவர்கள் நடத்தைகெட்ட தனத்தை உறுதி செய்ய பல விதமாக விசாரணை நடத்துகிறார்கள்.

 செர்வாண்டேஸ் எழுதிய டான் கியோட்டே என்ற நாவலில் வரும் உபகதையில் கணவன் ஒருவன் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவளிடம் காம வார்த்தைகளைப் பேசி அவளது நடத்தைகெட்ட தனத்தை உறுதி செய்ய தன் நண்பன் ஒருவனை ஏவுகிறான். நண்பன் திரும்பி வந்து உன் மனைவி நான் கூறிய ஆசை வார்த்தைகளுக்கு மசியவில்லை என்கிறான். இதை நம்பாத கணவன் மனைவியின் கற்பைக் கலைக்க நண்பனை மீண்டும் அனுப்புகிறான். கடைசியில் அவன் பயந்த படியே நடக்கிறது. கணவனும் தன் சந்தேகம் சரிதான் என்று ‘நிம்மதி' கொள்கிறான்.

அக்கால ஸ்பானியர்கள் பெண்களை அறிந்து கொள்ள முடியாதவர்களாகவே பார்த்தார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் உறுப்புக்கள் மாறி இருப்பதால் பெண்களுக்குச் சுயக் கட்டுப்பாடு இல்லை என்பதும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்கள் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்வார்கள் என்பது அவர்கள் சித்தாந்தம்.

இந்த நம்பிக்கை ஸ்பானிய கௌரவ கொலை நாடகங்களிலும் நாவல்களிலும் பிரதிபலிக்கிறது. இதே கருப்பொருள் முப்பத்து மூன்று நாடகங்களிலும், கால்டோஸின் ஆறு நாவல்களிலும் வருவது வியப்பு (சிஙகப்பூர்த் தமிழிலக்கியத்தில் வரும் மெய்ட் கதைகள் போல – சிவானந்தம் நீலகண்டன் கவனிக்க).

ஆனால் அடிப்படையில் இந்த வகை இலக்கியம் கற்பு குறித்து இலக்கியங்களில் காட்டப்படுவதும் விமர்சிக்கப்படுவதும் வெறும் ஆணாதிக்க அலட்டல் மற்றும் பீதியே என்பதை உறுதி செய்கிறது.

- சித்துராஜ் பொன்ராஜ்

Comments

  1. Since centuries most of the literature works have taught us to blame only the women and not the men who is involved .

    ReplyDelete
    Replies
    1. You are correct madam.Males are so called punithars.

      Delete

Post a Comment

வணக்கம். உங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன். இங்கும் பதியலாம். sithurajponraj134@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.