சுயம்பிரகாசமாய் சில கவிதைகள் – பொன் வாசுதேவன் ‘நிழலின் வாக்குமூலம்'


கவிதை எழுதுவது சுலபத்திலும் சுலபம்.

இரண்டு அல்லது மூன்று ஆயிரமாண்டுகளுக்குத் தொடர்ந்து வரும் கவிதைப் பாரம்பரியம் எம்மொழியிலும் வாசகர்களைக் கவிதை வாசிக்க ஆற்றுப்படுத்தியிருக்கிறது

சரியான படிமங்களின் தொகுப்பும், சொற்பிரயோகமும் இருந்தால் கவிதைகள் அங்கீகாரம் பெற்றுவிடும் சூழல் இந்நீண்ட கவிதை வரலாற்றின் விளைவுகளில் ஒன்று

இது, கவிதை வரலாற்றுடன் சிறிதளவும் பரிச்சயமில்லாத வாசகர்களைக்கூட கவிதைத்தன்மை மேலிட நிற்கும் அல்லது நெருங்கும் எந்த வரிகளையும் கவிதையாகக் கொண்டாட வைத்துவிடுகிறது.

பலரும் காதல் கவிதை எழுதி ஜெயித்திருப்பது இந்த காரணத்தால்தான்.

அதே சமயம் கவிதை எழுதுவது மிகவும் கடினம்

இரண்டு அல்லது மூன்று ஆயிரமாண்டுகளுக்கும் தொடர்ந்து வரும் மிக நீண்ட கவிதை வரலாறு ஒரு கவிஞனின் தோளில் அமர்ந்து கொண்டு சதா நச்சரித்துக் கொண்டிருக்கும். கம்பன் சொல்லாததையா இவன் சொல்லிட்டான் என்றும், பாரதி போல் வருமா என்றும் சொல்லப்படும் விமர்சனங்கள் இந்த ஓயாத நச்சரிப்பின் விளைவுகள்.

இதில் பிற மொழி பரிச்சயமுள்ள கவிஞனுக்கு ஏற்படும் மன் சஞ்சலங்கள் சொல்லில் அடங்காதவை. பல்வேறு கலாச்சார படிமங்களும் வாழ்க்கை மதிப்பீடுகளும் தோள்களில் அழுத்த அவன் கவிதைகள் செயற்கைத்தனம் வாய்ந்தவையாக, போல ஆக்கப்பட்ட போலிகளாகவே மாறிவிடும் அபாயம் இதனால் உண்டு.

தமிழில் எத்தனையோ பேர் ஆங்கில, ஸ்பானிய  கவிதைகளைப் போன்றவற்றை நவீனத்துவமாக எழுத முனைந்தாலும் அந்த கவிதைகள் பெரும்பாலும் தோல்வியையே தழுவியிருக்கின்றன.

தமிழின் கவிதை வரலாறும் பாரம்பரியமும் மிக வலியது. தனக்கென்று ஒரு அற்புதமான அடையாளத்தை அமைத்துக் கொண்டிருப்பது. மற்ற தாக்கங்களால் அதை அவ்வளவு எளிதில் சாய்த்துவிட முடியாது. பிறமொழியிலிருந்து எடுத்தாளப்படும் சோதனை முயற்சிகளுக்குத் தமிழ் உரைநடை தரும் இடத்தைக்கூட தமிழ்க் கவிதை தருவதில்லை.

கவிதை எழுதுவது மிகவும் கடினம்.

 இதன் விளைவாக இன்றைய பல தமிழ்க் கவிதைகள் ஏதோ ஒரு சூரியனின் வெளிச்சத்திலிருந்து ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கும் வானத்துக் கற்களாகவே முடிந்துவிடுகின்றன.

அப்படிப்பட்ட் சூழலிலும் சில கவிஞர்கள் அதிசயமாகதான் தோன்றிகளாக' தானே சுடர்விடும் நட்சத்திரங்களாகத் தோன்றி விடுகிறார்கள். அத்தகைய தானே சுடர்விடும் ஸ்வயம்பிரகாசக் கவிதைகளின் தொகுப்புத்தான் பொன். வாசுதேவனின்நிழலின் வாக்குமூலம்'.

சுமார் எண்பத்து மூன்று கவிதைகள். அற்புதமான மொழி ஆளுமை. தமிழ் மொழியின் ஈராயிரம் வருஷத்து வலிமையையும் அழகையும் மொத்தமாய் திரட்டி அதில் இன்றைய வாழ்க்கையின் உறவு வறட்சியையும் அவலத்தையும் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கும் கவிதைகள்.

ஒருவன் தன் காதலியை நினைக்கிறான். சராசரி கவிதைகளில் என்ன நடக்கும்? ஒன்று அவளை வாயாரப் புகழ்வான். அல்லது அவளை ஏதோ ஒரு காரணத்துக்காகத் திட்டுவான். ஆனால் அவளை நினைக்கும்போது ஏற்படும் உணர்வை, அதன் படிமத்தை வாசுதேவன் கிணற்றில் தானே இரு கால்களையும் கயிற்றால் இறுகக் கட்டி தலைக்குப்புறக் குதிப்பதாக எழுதுகிறார்.

இரு கால்களையும்
கயிற்றால் இறுகக் கட்டி
பெருவட்ட ஆழ்கிணற்றினுள்
தலைக்குப்புறக் குதித்து
நீரின் ஆழத்தில்
நிசப்த இருள்வெளியுள்
புதைந்து அமிழ்கையில்
மலர்த்திய விழிகள் பார்த்தபடியிருக்க
நினைவுகளிலிருந்து
உறவின் முதல் நொடியிலிருந்து
ஒவ்வொரு காட்சியாய்
ஜென்மப் பிரியத்தின் சுவாசமென
சின்னச்சின்ன வெள்ளி நீர்க்குமிழிகளாய்
மெல்ல வெளியேறிக் கொண்டிருக்கிறாய்” (பக்கம் 9)

படிமங்கள் அத்தனையும்மலர்த்திய விழிகள் உட்படநமக்குப் பரிச்சயமானவைதாம். ஆனால் அவற்றைக் கோர்த்திருக்கும் விதமிருக்கிறதே, அருமை

ஜென்மம் என்பதே பெரும் ஆயாசமாகத் தோன்றும் சராசரிச் சூழலில் ஜென்மப் பிரியம் என்று இவருக்கு எப்படி சொல்ல வந்தது? ஒருத்தியை நினைப்பது தானே கிணற்றினுள் குப்புற விழுவது. சரிதான். ஆனால் மூழ்கும் நிலையிலும் அவளேதான் சுவாசத்தின் ஆதாரப்பொருளாக, சுவாசமேயாக பளபளக்கும் நீர்க்குமிழிகளில் மேல் நோக்கி வெளியேறுகிறாள் என்பது எத்தகைய கற்பனை. எத்தகை அசுரப் பிரியமிருந்தால் இப்படி எழுதத் தோன்றும்?

இந்த தொகுப்பில் உள்ள கவிதைகளின் செறிவுக்கு மேற்கூறிய கவிதையே மிகச் சிறந்த உதாரணம்.

அன்றைய பாடு முடிந்து, இருளடர்த்தியின்
படுக்கையில் கிடத்தினேன் என்னை
மின்காற்றாடி உராய்வில்
உள்ளெழுந்தது ஆழிப்பேரோலம்...” (பக்கம் 23)

நாவின் சுவையுணர் கொம்புகளில்
மெல்லப் பரவுகிறது
துப்பவோ விழுங்கவோ
இயலாத கசப்பு” (பக்கம் 74)

வாசுதேவனின் கவிதை வெற்றி அவரது பரந்த வாசிப்பில் அடங்கியிருக்கிறது. பாசுரங்கள், ஆழ்வார் அருளிச்செயல்கள், புதிய ஏற்பாட்டு வாக்கியங்கள் எல்லாமும் அவர் கவிதை பாடும்போது நாவில் வந்து விழுகின்றன. இதனால் இத்தொகுப்பில் உள்ள அத்தனை கவிதைகளிலும் அசாத்திய அடர்த்தி.

மற்றவர்களுக்குப் பெரும் சவாலாய் இருக்கும் கவிதை பாரம்பரியம் இவரது கவிதைகளில் பெரும்பலமாய் நிற்பது இவர் கவிதைகளின் வெற்றிக்கு முதல் காரணம்.

இரண்டாவது காரணம், இந்த இலக்கியப் பரிச்சயத்தையே வாசகர் கைத்தட்டலுக்காக விலை பேசாமல் வாசுதேவன் பழைய படிமங்களையும் மொழியையும் தன் உழைப்பினால் சிந்தனையால் மறுரூபமாகியிருப்பது.

போல எழுதியிருந்தாலும் வாசிதேவனுக்கு இருக்கும் இலக்கியப் பரிச்சயத்துக்கு அவரது கவிதைகளுக்குச் சிறப்பான இடம் கிடைத்திருக்கும்.

ஆனால் அவருடைய உழைப்பாலும் சிந்தனையில் புகுத்தியிருக்கும் புதுமையாலும் நிழலின் வாக்குமூலம்' கவிதைகள் கடுமையான வெயில் நாளுக்குப்பின் வரும் மாலைநேர வெளிச்சம்போல் மனதுக்கு இதமாய் இருக்கின்றன.

- சித்துராஜ் பொன்ராஜ்

Comments