கவிதைகள் முடியும் இடம்

கவிதைகள் எழுதுவதைவிட கவிதையைப் பற்றிப் பேசுவதும் விமர்சனம் எழுதுவதும் இன்றைய சூழ்நிலையில் சவாலானதாகக் கருதப்படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு.

தமிழ் உரைநடை இலக்கியத்தின் உள்ளடக்கத்தைப் பற்றியும் கோட்பாடுகளைப் பற்றியும் இன்று மிக ஆரோக்கியமான உரையாடல் பல தளங்களில் நடைப்பெறுகிற அளவுக்குக் கவிதை இலக்கியத்தைப் பற்றி நடைபெறுவதில்லை. 

இன்னும் சொல்லப் போனால், கவிதைகள் குறித்த விமர்சனப் பெருவெளி இன்றைய நாளில் மிகப் பிரம்மாண்டமான மவுனத்தால் சூழப்பட்டுள்ளதாகத்தான் தெரிகிறது.

உரைநடை இலக்கியத்தைப் பற்றி ஆர்வத்துடன் விமர்சனம் எழுதுபவர்கள்கூட கவிதைகளைப் பற்றிக் கோட்பாடுகளின் அடிப்படையில் விமர்சனம் செய்யாமல் பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறார்கள்.

இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

ஒரு நோக்கில் பார்த்தால் இந்நிலை கவிதையின் வளர்ச்சியைப் பற்றியும் கவிதை குறித்த கோட்பாடுகளைப் பற்றியும் இப்போது விமர்சகர்களிடையே உள்ள மிகக் குறைவான அக்கறையின் விளைவாக இருக்கலாம். 

வேறொரு நோக்கில், கவிதையைப் பற்றி நிறையவே அக்கறை இருந்த போதும் கவிதை வடிவம் இக்காலத்தின் சமூகச் சவால்களைப் பற்றிப் பேசுவதற்கு உரைநடையைப்போல்  உசிதமானது அல்ல என்று விமர்சகர்களிடையே முடிவு ஏற்பட்டிருக்கலாம்.

மூன்றாவது பார்வை ஒன்றும் உண்டு. இது கொஞ்சம் பழையது. இது, கவிதை என்பது உரைநடையைவிட அதிகமாக தனிமனித உணர்வுகளையும் அனுபவத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதால் கவிதையைக் கோட்பாட்டு ரீதியில் விமர்சிப்பது அநாகரிகம் அல்லது அதிகப்பிரசங்கித்தனம் என்று பலரிடையே ஏற்பட்டிருக்கக்கூடிய கருத்தும் என்றும் சொல்லலாம்.

வழக்கம்போல் உண்மை இம்மூன்று காரணங்களுக்கு நடுவில் எங்கோ ஒரு புள்ளியில் இருக்கக் கூடும்.

ஆனால் விஷயம் அதுவல்ல.

நாம் முதலில் கேட்கவேண்டிய கேள்வி மேற்கூறிய சந்தேகங்களைவிட அடிப்படையானது.

கவிதை என்பது இன்னமும் தேவையா என்பதுதான் இது.

எந்த விதமான இலக்கிய வடிவத்தின் தேவையும் வெற்றியும் அது ஏதேனும் ஒரு வகையில் வாசகருக்குப் பயனளிக்கிறதா என்பதில்தான் அமைகிறது.

இந்தக் கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கேட்கவேண்டும் என்றால் கவிதை என்ற ஒன்றே இல்லாவிட்டால் நாம் எதையேனும் இழந்துவிடுவோமா என்று கேட்கலாம்.

இப்போது கவிதையைச் சூழ்ந்துள்ள விமர்சனச் சுணக்கத்தைக் காணும்போது புதிதாகக் கவிதைகள் எழுதப் படவில்லையென்றால் யாரும் கவலைபடமாட்டார்கள் என்று சொல்லலாமா?

அப்படி கவிதை தேவைதான் என்று யாரேனும் வாதிடுவார்கள் என்றால் அவர்களிடம் கேட்க நினைக்கும் கேள்வி, உரைநடை செய்யாத எதனை இன்று கவிதை செய்கிறது என்பதுதான்.

ஏதோ பன்னெடுங் காலமாக கவிதை இருந்திருக்கிறது, அந்தப் பழக்க தோஷத்தால் கவிதையை வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதில் எவ்விதப் பயனும் இல்லை.

பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வரும் இலக்கிய வரலாற்றில் நாவல்களும் சிறுகதைகளும் இன்று இருக்கும் வடிவத்தில்  மிகக் குறுகிய காலமாக மட்டுமே புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இந்தக் குறுகிய காலத்திலும்கூட இவ்விரு வடிவங்களும் மாற்றங்களைக் கண்டு வந்திருக்கின்றன. கண்டும் வருகின்றன.

நாவல் வடிவம் இன்றைய நாளில் கிராஃபிக் நாவல் என்ற புதிய வடிவமாக உருவும் எடுத்திருக்கின்றது. 

இந்த வடிவங்கள் தொடர்ந்து வாசகர்களின் மனப்பான்மைக்கும் தேவைக்கும் மாறி வருகின்றன.

இன்றைய கவிதை வடிவமும் இத்தகைய விசாரணையையும் மறு உருவாக்கத்தையும் எதிர்நோக்கியுள்ளதா என்பதும் ஒரு கேள்வி.

(1) கவிதைகள் இன்றும் தேவைதானா? 

(2) உரைநடை செய்யாத அல்லது செய்ய முடியாத எதனை இன்றைய கவிதை செய்கிறது? 

(3) புதிய கவிதைகள் எழுதப்படவில்லையென்றால் இன்றைய வாசகர் சூழல் எதை இழந்துவிடும்? 

(4) கவிதை வாசகருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் அதன் வடிவமும் உள்ளடக்கமும் மறு பரிசீலனை செய்யப்படவேண்டுமா?

பிடிக்கும், பிடிக்கவில்லை என்பதை தாண்டி நல்ல கவிதை விமர்சனம் என்பது இந்நான்கு கேள்விகளை ஆராய்ந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

ஆனால் அதைவிட முக்கியமாக இந்தக் கேள்விகளுக்குப் பதில் விமர்சகர்களின் கையில் இல்லை. கவிஞர்களின் கையில்தான் உள்ளது.


- சித்துராஜ் பொன்ராஜ்

Comments