முத்திரை சிறுகதைகள் என்னும் மாயமான்

சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் “உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த 50 சிறுகதைகள்” என்ற தொகுப்பை (தமிழில்) எனக்குப் பரிசளித்தார் (தலைப்பு மாற்றப்பட்டிருக்கிறது, ஆனால் சாராம்சம் அதுதான்).

ஏற்கனவே படிக்கவேண்டும் என்று எடுத்து வைத்திருக்கும் புத்தகங்கள் தசமக் கணக்கில் நீண்டு கொண்டிருப்பதால் புத்தகத்தை இப்படியும் அப்படியும் புரட்டிவிட்டுப் புத்தகச் சமுத்திரத்தையே விழுங்கிவிடக் கூடிய அகஸ்திய வரம் வாங்கியிருக்கும் என் புத்தக அலமாரியில் திணித்து வைத்தேன். மற்ற புத்தகங்களோடு நிறம், குணம் நீங்கி கடலில் உப்புப் பொம்மையாக தொகுப்பு கரைந்துவிட்டது.

ஆனால் அதன் பின்னும் ஓர் எண்ணம் என்னை ரொம்பவே தொந்தரவு செய்தது. எதன் அடிப்படையில் ஒவ்வொருத்தரும் ‘உலகின்/தமிழகத்தின்/சிங்கப்பூரின்/நவீன இலக்கியத்தின் சிறந்த சிறுகதைகள் (அ) கவிதைகள் (அ) நாவல்கள்’ என்று தொகுப்புக்களைத் தயாரிக்கிறார்கள்?

இந்த ஒரு தொகுப்பில் வந்துவிட்டதால் மட்டுமே ஒரு கதையோ, சிறுகதையோ சிறந்த படைப்பு ஆகிவிடுமா? ஆம் என்றால் எங்ஙனம்? இல்லை என்றால் ஏன் தொகுப்பைத் தயாரிக்க வேண்டும்.

நீங்கள் அறிந்திருப்பீர்கள். சில உணவகங்களில் உணவுப்பட்டியலில் உள்ள உணவுகளோடு பரிச்சயம் இல்லாத வாடிக்கையாளர்கள் சுவைத்துப் பார்ப்பதற்காக முக்கிய உணவு வகைகளை ஒரு கையளவே இருக்கும் கவளங்களாக ஒரே தட்டில் பரிமாறுவார்கள். ஆங்கிலத்தில் இதற்கு ஸாம்ப்ளர் என்று பெயர்.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஒரு சிறுகதை தொகுப்பு  ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புக்களோடோ ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம், மொழி,  நிலப்பரப்பு ஆகியவற்றில் எழுதப்பட்ட படைப்புக்களோடோ முன்பின் பரிச்சயமில்லாத வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஸாம்ப்ளர்களாகவே செயல்படுகின்றன.

எப்படி ஸாம்ப்ளரில் வைக்கப்படும் எல்லாவகையான உணவுப்பண்டங்களும் எல்லோருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று கட்டாயமில்லையோ அது போலவே தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் எல்லாக் கதைகளும் எல்லோருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்றோ எல்லாப் படைப்புக்களுமே உச்ச தரத்தில் இருக்க வேண்டும் என்றோ கட்டாயப்படுத்துவதும் தேவையில்லாதது.

கலவையான சுவைகளையுடைய கதைகளையோ கவிதைகளையோ தொகுக்கும்போதுதான் எந்தத் தொகுதியும் உண்மையான ஸாம்ப்ளராகக் கருதப்படும் சாத்தியத்தைப் பெறுகிறது. ஒரே வகையான கதைகளையும், கதைக்கரு மற்றும் செய்திகளையும் உள்ளடக்கியிருக்கும் பட்சத்தில் அந்த தொகுப்பு எவ்வளவு சிறப்பான மொழிநடையில் எழுதப்பட்டிருக்கும் போதிலும் அது வெறும் பிரச்சாரத் தாள் மட்டுமே. இத்தகைய தொகுப்புக்களிலிருந்து ஒரு எழுத்தாளரின் கொள்கைகளை அறிந்து கொள்ளலாமே தவிர அவருடைய உண்மையான மொழி ஆளுமையையோ படைப்பாற்றலையோ நிச்சயம் எடைபோட முடியாது.

அது சரி, நமக்கு நன்கு பரிச்சயமான எழுத்தாளர்கள்கூட தொகுதிகளை வெளியிடுகிறார்களே என்று கேள்வி எழலாம். இவையாவும் அந்தந்தக் காலக்கட்டங்களில் அவர்கள் எழுத்துக்கு அவர்களே தொகுத்து வெளியிடும் ஸாம்ப்ளர்களே.

ஆனால் என் பிரச்சினை இத்தகைய தொகுப்புக்களோடல்ல. சிறந்த கதைகள் அல்லது முத்திரைக் கதைகள் என்று தலைப்பு கொடுத்துத் தயாரிக்கிறார்களே, அந்தத் தொகுப்புக்கள்தான் என்னைத் தொந்தரவு செய்கின்றன. மறுபடியும் கேட்கிறேன்: எதன் அடிப்படையில் இத்தொகுப்பில் உள்ள கதைகளைச் சிறந்தவை என்று இவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்?

பெரும்பாலான தொகுப்புக்களில் இதற்கான விளக்கம் பெயரளவுக்குக்கூட தரப்பட்டிருப்பதில்லை. ஒவ்வொரு தொகுப்பாளரரும் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு ‘சிறந்த’ கதைகளைத் தொகுத்திருப்பார்கள் போலும். மேலும் சிலர் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எல்லோரையும் சேர்த்துள்ளதாலேயே புளங்காகிதம் அடைந்து விடுகிறார்கள். சில தொகுப்பாளர்கள் தமக்கு ‘வேண்டப்பட்டவர்களை' மட்டுமே சேர்த்திருப்பது அப்பட்டமாகவே தெரிகிறது.

மற்றத் பதிப்பகத்தார்கள் இந்தச் சிக்கலைத் தீர்க்கக் கதைகளைத் தொகுக்கும் வேலையை யாரேனும் புகழ்பெற்ற எழுத்தாளரிடம் விட்டு விடுகின்றார்கள். (புகழ்பெற்ற எழுத்தாளருக்கு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் நிச்சயமாகக் கைவந்துவிட்டது என்று நம்புவது உச்சபட்ச நகைச்சுவையாகும். இங்கிலாந்து அரசவைக் கவிஞர் காரல் ஆன் டஃபி தொகுத்த சில ‘சிறந்த' கவிதைத் தொகுப்புக்கள் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன).

மற்றவர்களோ ‘சிறந்த’ கதைகளையோ கவிதைகளையோ ஏதேனும் எழுத்தாள அல்லது கலாச்சார அமைப்பின் ‘முத்திரை'யோடு வெளியிடுகிறார்கள் (இது, மேலே சொன்னதைவிட உச்சபட்ச நகைச்சுவை. 1984ல் சிங்கப்பூரின் இருபத்தைந்தாண்டுகளைக் கொண்டாட இப்படி சில நூல்கள் வெளியிடப்பட்டன. தேசிய நூலகக் கிளைகளில் இன்னமும் கிடைக்கலாம். தேடிப் பிடித்துப் பாருங்கள்.)

எழுத்தாளர் தொகுத்ததோ, அமைப்புத் தொகுத்ததோ அவற்றின் இடையே ‘அதான் நாங்க சிறப்புனு சொல்லிட்டோம்'ல' என்ற மிதப்பு தொனிப்பது தவிர்க்க முடியாதது.

ஆனால் ஒரு தொகுப்பில் உள்ள படைப்புக்கள் ஏன் சிறந்தவை என்று பொறுப்புடன் கோட்பாடுகளின் அடிப்படையில் தொகுப்பின் முன்னுரையிலோ பின்னுரையிலோ சொல்லப்படாத வரையில் அத்தொகுப்பு பத்துக் காசுக்குப் பிரயோஜனமில்லாதது என்றுதான் கொள்ள வேண்டும்.

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இந்நிலை மாற வேண்டும் என்றால் இன்று விமர்சகர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருப்போர் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சிறந்த சிறுகதைகள் மற்றும் கவிதைகளின் பட்டியலை விளக்கங்களோடும் குறிப்புக்களோடும் வெளியிடலாம்.
இது உதவும். விமர்சகர்கள் இதைச் செய்ய நான் முன்மொழிகிறேன். பெரும்பாலான விமர்சகர்கள் சாந்த சொரூபர்கள் என்பதாலும் தம்மை முன்னிலைப் படுத்தத் தயங்கக் கூடும் என்பதாலும் என் யோசனையை நானே வழிமொழியவும் செய்கிறேன்.

- சித்துராஜ் பொன்ராஜ்




Comments