பௌத்தர்களின் பால்கோவா

எனக்கு இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவருக்கு பால்கோவா மிகவும் பிடிக்கும். நீரிழிவு நோயைப் பற்றிய பயமில்லை என்றால் ஒரே மூச்சில் பல பால்கோவாக்களைச் சாப்பிடக்கூடியவர். மற்றவருக்குப் பால்கோவாவின் வாடையே ஆகாது. எந்த அளவுக்கு என்றால், பால்கோவாவை அவர் முகத்திற்கு முன்னால் நீட்டினால் அவருக்குக் குமட்டிக் கொண்டு வரும்.

பெரும்பாலான தத்துவங்கள் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்துவமான இருப்பும் குணமும்.உள்ளதாகச் சொல்கின்றன. அதாவது நாம் ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் தஞ்சாவூரில் பெரிய கோவில் என்ற ஒரு கட்டிடமும், வடக்கில் எங்கோ வெகு தூரத்தில் கைலாச மலையும், பெயர் அறியாத காட்டில் குறிப்பிட்ட  பெரிய தேக்கு மரமும் உண்மையிலேய்ர்ர் இருக்கின்றன என்பது இவற்றின் கொள்கை. அதே போல் நிரந்தரமான தனி குணாம்சங்களை உடைய நீங்களும் நானும் இருக்கிறோம் என்பதும் இவற்றின் கொள்கை.

ஆனால் பால்கோவா தத்துவம் இதை எதிர்க்கிறது. என் இரண்டு நண்பர்களும் சந்தித்த பால்கோவாக்களில் எனக்குத் தெரிந்த வரைக்கும் நிறத்திலோ, மணத்திலோ, சுவையிலோ, பிட்டுத் தின்னும்போது விரல்களில் ஏற்படக்கூடிய பிசுபிசுப்பிலோ எந்த வேற்றுமையும் இல்லை (பால்கோவா தானாய் சத்தம் போடாது என்பதால் செவிப்புலனைப் பற்றிச் சொல்லவில்லை). ஆனால் எல்லாவற்றிலும் ஒன்றுபோலவே இருக்கும் பால்கோவா இருவருக்குள்ளூம் வெவ்வேறு எதிர்வினைகளைத் தூண்டுகிறது. காரணம் பால்கோவாவைப் பற்றிய என் இரண்டு நண்பர்களின் முன் அனுபவமோ முன்முடிவுகளோ அவர்கள் பெற்றோர் சொல்லி வளர்த்ததோ வேறாக இருக்கலாம்.

ஆக, அங்கு இருப்பது ஒரே பால்கோவா அல்ல. இரு வேறு பால்கோவாக்கள். அவற்றுக்கு இருப்புத் தருவது அவற்றின் நிரந்தரமான கல்யாண குணங்கள் அல்ல. அவற்றை மற்றவர்கள் எப்படி புலன்களால் உணர்ந்து கொள்கிறார்களோ அதன் படியே அதற்கு இருப்பும் குணமும் மாறுகின்றன.

பால்கோவாவை உணர்ந்துகொள்ள யாருமே இல்லாத பட்சத்தில் அதற்குப் பால்கோவா என்ற பெயரும் தனியிருப்பும் இருக்குமா என்பதுதான் கேள்வி.

யாருக்கும் தெரியாத ஊரில் உள்ள ஒரு பெயரில்லாத ஆற்றில் முழு நிர்வாணமாகக் குளிக்கும்போது எழுத்தாளன் சித்துராஜ் பொன்ராஜ் என்று நானே எனக்குச் சூடிக் கொண்ட பட்டத்துக்கும் பெயருக்கும் அர்த்தம் உள்ளதா? என்னைச் சுற்றித் தமிழே தெரியாதவர்கள் மட்டுமே இருந்தால் அல்லது தமிழ் அறிந்திருந்தும் என்னைப் பற்றித் தெரியாத ஏராளமானவர்களின் ஒருவராக இருந்தால் என் பெயருக்கும் பட்டத்துக்கும் ஓர் அர்த்தமும் இல்லை. என்னைப் பிறர் அறியும் வரைக்கும்தான் என் பெயருக்கும் பட்டதுக்கும் இருப்பும் அர்த்தமும் ஏற்படுகின்றது.

ஆனால் என் அம்மாவுக்கு நான் எழுத்தாளன் அல்ல, வேறு. என் காதலியருக்கு நான் எழுத்தாளன் அல்ல, வேறு. கோயிலுக்குப் போனால் நான் கௌசிக கோத்திரம், கிருஷ்ண யஜுர் வேதம். ஆனால் இது உங்களுக்கு உபயோகப்படாது.

அப்படியென்றால் ரமணர் கேட்பதுபோல், “நான் யார்?”

மொத்தத்தில் எனக்கென்று நிரந்தரமாக குணாதிசயங்களோ இருப்போ இல்லை. என் எதிரில் இருப்பவர்களைப் பொறுத்து ஒவ்வொரு கணமும் நானே எனக்கு ஒவ்வொரு நிமிடமும் புதிய இருப்புக்களைக் கற்பித்துக் கொள்கிறேன்.

யாரும் என்னை உணராத போது நானும் சூனியமாய் ஊர் பேர் இல்லாமல் கரைந்து போகிறேன்.

இதுதான் புத்தர் சொன்ன அனாத்ம கோட்பாடு. அ+ஆத்மா என்றால் நிரந்திரமாக சொந்த இருப்பு எதுவும் இல்லாதது. பாலி மொழியில் இதற்கு அநத்தா என்று பெயர்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நான், எனது என்று பிடித்துக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை.

ஏனென்றால் அப்படி பிடித்துக் கொள்ள
நிரந்தரமான பொருள் உலகத்தில் எதுவும் இல்லை.

Comments

  1. எடுத்துக்காட்டுகளுடன் மிக எளிமையாக விவரித்தது அருமை. நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ஆரோக்கியராஜ்!

      Delete

Post a Comment

வணக்கம். உங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன். இங்கும் பதியலாம். sithurajponraj134@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.